‘Publication is the Action of the Mind’, wrote Emily Dickinson. She was right. She never published her poems in her life time (except seven poems). I too am not sending my poems (?) for publication, but not for the same reason. This night after retired to bed when I thought about this, I wrote the following lines: (Lucknow?)
59. ஏலமே
சிந்தையின் ஓட்டத்தை
சொல்லில் வார்த்தெடுத்து
கருத்தை அதில் ஊட்டி
கவிதை வடித்த பின்பு
வெளியீடு செய்வதெல்லாம்
காசுக்காக கலையை
ஏலம் விடுவதே ஆகும்.
ஜனவரி, 1996. லக்னோ
எப்போதும் பரப்பரப்பாக இருப்பது சுறுசுறுப்பாகாது. அதுவும் ஒருவித மன இறுக்கமே. இதைக்குறித்து எண்ணியபோது எழுதிய பாடல்:
60. பரபரப்பு
சுறுசுறுப்பென்ற பெயராலே
பரபரப்பாக வாழ்ந்தாலே
நேரம் கழிந்திடும் விரைவாக
பயனேதும் காணாமல் பொதுவாக
சுறுசுறுப்பு வேண்டும் சிந்தையிலே
சிறப்பாய் காரியம் செய்திடவே
அது பரபரப்பாகிப் போனாலே
பாழாகும் காரியம் வீணாகவே
சோம்பேறி ஆனான் சுமையாக
சமூகத்தில் வீண் பளுவாக
பரபரப்பாளியோ மாறாக
பயன்படான் எவர்க்கும் பொதுவாக
சோம்பேறி சற்று சுறுசுறுப்பாகி
பரபரப்பாளி சற்று பக்குவமாகி
சமநிலை அடைந்தாலே சமூகத்தில்
புரட்சியே தோன்றும் வெகுவிரைவில்
19-01-1996 லக்னோ
சேர்வது பிரியும், நிற்பது வீழும், பிறப்பது மறையும் என்ற மஹாபாரதக் கருத்தை படித்த போது எழுதிய பாடல்:
61. ஓர் உண்மை
இழப்பதற்கு ஒன்று இல்லாவரை
என்றும் வாழ்வில் மகிழ்ச்சியே
சேர்ப்பது எல்லாம் இழக்கவே
நிற்பது எல்லாம் வீழுமே
நட்பும் முடியும் பிரிவிலே
பிறப்பின் இறுதி மரணமே
இதை அறிந்தால் நன்மையே
இது பாரதம் கூறும் உண்மையே
21-01-1996 லக்னோ
வாழ்க்கையின் பலவித போராட்டங்களை குறித்து ஒருவர் என்னுடன் பேசியபோது, என்கருத்தைக் கூறியபின் எழுதிய பாடல்:
62. ஒத்திகை
மனதினிலே போராட்டம்
மனதுடனே போராட்டம்
மாமிசத்தில் போராட்டம்
மனிதருடன் போராட்டம்
சொல்லிலே போராட்டம்
செயலிலே போராட்டம்
வாழ்க்கையில் போராட்டம்
வாழ்வுடனே போராட்டம்
எண்ணத்தில் போராட்டம்
என்னுடனே போராட்டம்
என்றுதான் முடியுமோ
இப்போராட்டம் என்றேதான்
ஏக்கமுடன் மரணத்தை
எதிர்பார்த்து காத்திருக்க
இன்னும் நாடகமோ
மேடையே ஏறவில்லை
இதுவரை நடந்ததெல்லாம்
ஒத்திகையே என்றார்!!
27-01-1996. லக்னோ
இயற்கையுடன் ஒன்றி இருப்பது எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அதிகமாக மனித ஆரவாரமில்லா இடத்தில், தனிமையாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மஹரியில் (ரீவா. ம.பி) சஷி கிராமத்தில் நதியோரம் சென்று அமரும்போது அத்தகைய உணர்வு ஏற்படும். அத்தகைய ஒரு சந்தர்பத்தில் எழுதிய பாடல்:
63. முடிவில்லா தொடக்கம்
இயற்கைக்கும் எனக்கும் மத்தியிலே
ஏதும் இடைவரா நேரத்திலே
ஓ! என்ன பேரின்பம்
தருகிறாள் அவள் என் உள்ளத்தில்
இதய வீணையை தன்விரலால்
இனிமையாக மீட்டி விட்டே
எழுப்புகின்றாள் என் உணர்வை
ஒன்றி அவளுடன் கலக்கையிலே
உள்ளத்தில் ஊறும் இப்பேரின்பம்
வெறும் உணர்ச்சியின் வடிவல்ல
அவள் தருவதோ ஆனந்தம்
ஆ! அதனை என்ன சொல்ல
ஒருவரில் ஒருவர் மூழ்கிநின்று
ஒன்றாய்க் கலந்த நேரத்திலே
முடிவே இல்லா தொடக்கமது
முழுமையை முடிவில் அடையும்வரை
24-02-1996. மஹரி (ம.பி.)
மஹரியில் சஷி சில நெருக்கடிகளை சந்தித்தபோது என்னுடன் பேசினான். அப்போது அவனுக்கு சில ஆலோசனைக் கூறியபின் எழுதிய பாடல்:
64. நடைபோடு
நெருக்கடிகளின் மத்தியிலே
நெஞ்சம் தளர்ந்த வேளையிலே
விரக்கியுற்றே வாழ்வினையே
விட்டு விடவும் கூடாது
முயன்ற வரையில் போராடு
முடிந்த வரையில் முன்னேறு
தோல்வி தன்னை ஏற்காமல்
தொடர்ந்தே நீயும் நடைபோடு
மஹரி. (ம.பி.) 17-02-1996.
தனிமை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மாலை வேளையில் உலவச் செல்லும்போது, தனிமையிலேயே செல்ல விரும்புவேன். இதை நன்கு உணர்ந்த சஷி பல சமயம் என்னுடன் வரமாட்டான். இன்று மாலை தனியாகச் சென்று நதிக்கரையில் அமர்ந்த போது அங்கு நிலவிய அமைதி, தனிமையை எண்ணி எழுதிய பாடல்:
65. இனிமையான தனிமை
தனிமை என்ற ஓர் இனிமை
தனித்திருக்கும் அந்த தன்மை
என்ன சொல்ல அவ்வுணர்வை
எவரும் அறியாத மென்மை
சஞ்சலம் நிறைந்த வாழ்வில்
சற்றே நம்மை மறந்து
நம்மிலே நாமே மகிழ்ந்து
திளைத்திருக்கும் ஓர் தன்மை
தேடி எங்குமே செல்லத்
தேவையில்லை அதைத் தேடி
நாடிச் செல்லும் போது
நம்மைத் தேடி வரும் ஓடி
ஆரவாரமான இவ் உலகில்
அமிழ்ந்து விட்ட மனிதரிடையில்
உணர்வு மிக்க ஒரு மனதில்
மகிழ்ந்திருக்கும் தன் வரையில்
17-02-1996. மஹரி (ம.பி).
இன்று மாலை மஹரியில் நதிக்கரையோரம் தனிமையாக அமர்ந்திருந்த போது இயற்கையுடன் ஒன்றிக் கலந்த அனுபவத்தை எண்ணி எழுதிய பாடல்:
66. இதவய வீணையை மீட்டி
தனிமையாக ஒரு மாலையிலே, நான்
தனித்திருந்த அவ் வேளையிலே
இனிமையான ஒரு உணர்வைத்தூண்டியே
இயற்கை அணங்குமே மெள்ள வந்தாள்
என்னுள் நான் அமிழ்ந்த வேளையிலே
இதய வீணையை மெள்ள மீட்டியே
தூங்கிக் கிடந்த என் உணர்வை
மெள்ள அவளும் சீண்டிவிட்டாள்
அவள் விரல் பட்ட அந்நேரமே
ஆர்ப்பரித்த என் உணர்வுமே
பொங்கிப் பாய்ந்ததே கவிதையாக
புகலடைந்ததே அவளின் மடியில்
மெள்ள அவளும் தன் மடியில் ஏந்தி
தஞ்சம் அடைந்த என் தலையை வருடி
அமைதியான ஓர் ஆன்ம உணர்வில்
அழைத்துச் சென்றாள் மீண்டும் என்னை
17-02-1996. மஹரி (ம.பி).
இன்றுமாலை சஷியின் சகோதரனுடன் பேசியபிறகு, அதைக்குறித்து ஆழ்ந்து யோசித்த போது எழுதிய பாடல்:
67. இதுவே உண்மை
எதுவுண்மை இவ்வுலகினிலே
எண்ணிப்பார்க்கும் போதினிலே
புலப்படாது விடையொன்றும்
புதிராய்த்தோன்றும் வாழ்க்கையிலே
அகம்புறம் என சிலவாறு
வகைப்படுத்தியே வாழ்வினையே
அலசிப்பார்த்த ஆன்றோறும்
வகுத்தே தந்தார் சிலநெறிகள்
ஆனால் அனுதின வாழ்வினிலே
போராடும் மனிதருக்கோ
நெறியினை சிந்திக்க நேரமில்லை
"சுயம்" எண்ணியே வாழ்வதாலே
அகமும் புறமும் வேறல்ல
அவற்றின் தன்மை அறிந்தவர்க்கு
சுயநலத்திடையே பொதுநலமெண்ணி
புரிந்துகொண்டே வாழ்பவர்க்கு
இதுவே உண்மை இவ்வுலகினிலே
எதுவரை நாம் வாழ்ந்திடினும்
புலப்படுமே விடையாவும்
சரியாய் வாழ்க்கை வாழும்வரை.
மஹரி (ரீவா. ம.பி.) 17-02-1996
68. ஏழ்மை
வாழ்ந்திடும் வாழ்க்கையில் தானே
வறியவன் ஆனேன் நானே
பொன் பொருள் போகத்திலல்ல
மனதிண்மையில் எளிமையில் தானே
எல்லாலாம் இருந்திட்ட போதும்
ஏதும் இல்லாத ஏழைபோல்
வரண்டது வாழ்வுமே நாளும்
இருண்டது மனநிலை தானும்
ஏதோ ஒன்றை நாடிநானும்
ஓடுகின்றேன் இடைவிடாது நாளும்
எட்டிப்பிடிக்கின்ற போதும்
கைப்பற்றி பிடிக்கவில்லை நானும்
எட்டியது கிட்டவில்லை கையில்
கிட்டியதோ ஒட்டவில்லை என்னில்
முட்டி மோதிய போதில்
தட்டித் தடுமாறுகிறேன் வாழ்வில்
முடிவே இல்லாத ஓட்டம்
முடியாது வாழ்வின் போராட்டம்
ஆயிரம் ஆயினும் வாட்டம்
அடங்காது மனதின் நாட்டம்
காசி (வாரணாசி), 16-03-1996.
எனக்கும் என்சீடன் ஒருவனுக்கும் இடையே (ரீவா. ம.பி.) ஏற்பட்ட ஒருபிரச்சனையின் காரணமாய் எங்கள் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. என்னைப் பற்றி பலரிடம் அவன் கூறிய பல கருத்துக்கள் என் மனதை நெருடியது. அதைகுறித்து எண்ணியபோது எழுதிய பாடல். இப்பாடல் ரீவாவில் எழுத ஆரம்பித்து, தர்பங்காவில் (பீஹார்) முடித்தேன்
69. உறவு
வின்தையான இந்த உலகினிலே
வேடிக்கையான இவ் வாழ்வினிலே
கண்டுகொண்டேன் ஓர் உண்மையினை
இதுவரை காணாதிருந்த நிலையினிலே
ஆயிரம் கூறுவார் வாழ்க்கையிலே
ஆனால் கைக்கொள்ளார் நடைமுறையில்
தத்துவம் பேசுவார் தாராளமாய்
தன்வரை அதையே மறந்திடுவார்
ஆயிரம் நற்குணம் கண்டிடுவார்
ஆனால் பிறரின் வாழ்விலல்ல
அனைத்துமே தன்னிடம் உண்டுஎன
"அடக்கமாய்" பிறருக்கு அறிவிப்பார்
உத்திரம் கண்ணில் உறுத்தி நிற்க
உணராமல் அதை உள்ளபடி
ஊரார் கண்ணின் தூசியினை
நீக்கிட ஆவலாய் முனைந்து நிற்பார்
தன்னைத் தானே வெறுத்திடுவார்
"தன்நிலை" உள்ளபடி அறிந்திருந்தால்
போடுவதெல்லாம் வெளிவேடம், இது
புரிந்தால் என்றும் தாழ்ந்திருப்பார்.
18-03-1996
பல நிலைகளில் பலவிதமான போராட்டங்களை சந்திக்க நேர்ந்தபோது எழுதிய பாடல்:
70. முடியாது
போராட முடியாது இனிமேலே
புவியின் இவ்வாழ்வில் என்னாலே
இப்புலம்பலே யன்றி மனதாலே
புலப்படவில்லை வழி தன்னாலே
ஆயிரம் எண்ணங்கள் ஆட்கொள்ளவே
அலைமோதும் மனதுடனே போராட்டமே
துரும்புபோல் தடுமாறும் என்வாழ்வு
அடிவானம் தொடுகின்ற கடல்மீது
நம்பிக்கை என்னும் அலை கரையொதுக்க
அவநம்பிக்கை மீண்டுமே உள்ளிழுக்க
கரைதொட்டு நீர்மீளும் துரும்பிற்கே
புலப்படவில்லை வழி ஒருமீட்பிற்கே
விதிவிட்ட வழி என்று ஓயவோ
மதிகாட்டும் வழிதனிலே ஓடவோ
விதி-மதி இரண்டுமே ஓய்ந்தபின்
அவன்விட்ட வழியென்று வாழவோ
வாழ்ந்தாக வேண்டுமே இவ்வாழ்வினிலே
வந்துவிட்ட காரணத்தால் உலகினிலே
போராட்டம் ஓயாது தன்னாலே
புலம்பாதே மனமே இனி வீணாலே
தொடங்கிய வாழ்விற்கு ஓர்முடிவுண்டே
தொடர்ந்தே நீ எவ்விதம் ஓடினாலும்
துவங்கியவன் முடித்திடுவான் தளராதே
துணிந்தே இனி போராடு மனதாலே
30-06-1996 (கவிடம், ஆந்திரா)
என் சீடர்கள் சிலரின் குடும்ப வாழ்வினிலே ஏற்பட்ட பிரச்சனைகளை கண்ணன்-சாரதாவிடம் (ஈரோடு) கூறியபின், இத்தகைய பிரச்சனைகளைக் கேட்டு அவற்றை தீர்க்க கலையிட்டு என் மனம் களைத்து விட்டது என்று கூறினேன். அப்போது எழுதிய பாடல்:
71. எதற்காக அழுவேனோ
எதற்காகத்தான் இனி அழுவேனோ?
இவ்வுலக வாழினிலே நான்
என்னை ஓர்சொல் கேட்காமலே
இவ்வுலகில் பிறக்க வைத்த
என்பெற்றோர் செயலை எண்ணி
ஏங்கியே நான் அழுவேனோ?
"சித்தம்" என்ற பெயராலே
சற்றும் என்னைக் கேட்காமலே
படைத்துவிட்ட இறைவனின்
பாங்கை எண்ணி அழுவேனோ?
சுற்றம் உற்றம் என்றுசொல்லி
சூழ்ந்து நிற்கும் மானிடரும்
சற்றும் என்நிலை எண்ணாமல்
செய்யும் செயலுக்காய் அழுவேனோ?
போராடும் மானிடருமே
புவியின் இவ் வாழ்வினிலே
போடுகின்ற வேடம் எண்ணி
புலம்பியே நான் அழுவேனோ?
எவ்வளவுதான் புலம்பினாலும்
புவியின் இவ் வாழ்வினையே
நிரந்திரம் என எண்ணும்
மானுடர்க்காய் அழுவேனோ?
அழுது புலம்பியே நான்
ஆர்பரித்த போதினிலும்
அவையாவையும் மறந்துவிட்ட
அவலநிலை யெண்ணி அழுவேனோ?
பிறக்கும் போது நான் அழுக
போகும் போது பிறர் அழுக
இடையில் உள்ள வாழ்வினிலே
எதற்காகத்தான் நான் அழுவேனோ?
27 & 30-07-1996. ஈரோடு (தமிழ் நாடு)
These days I am typing a thesis on Emily Dickinson for Shashikant of Mahari (Rewa, M.P.). Her poems are obscure and without some help, I cannot understand them. But, surprisingly, few of her poems are realistic, down to the earth and very simple to understand. The following one much impressed me. Living as a recluse, she would not have lived as she wished in this poem. Whereas when God provided such a life of wandering man, where there came several opportunities to serve others, why should regret for it. Then I wrote the following poem in Tamil and Hindi.
72. வீணாகவில்லை
ஒருகுவளை நீரேனும் கொடுக்க
ஓர் வாய்ப்பேனும் கிடைத்தால்
உலகில் நான் வாழ்ந்தவாழ்க்கை
வீணாகவில்லை என்பேனே
ஓர்துளி கண்ணீரைத் துடைக்க
ஒருமுறையேனும் முயன்றால்
உலகில் நான் வாழ்ந்தவாழ்க்கை
வீணாகவில்லை என்பேனே
ஓர் மனிதனின் துயரத்தில்
சற்றேனும் நான் பங்கெடுத்தால்
உலகில் நான் வாழ்ந்தவாழ்க்கை
வீணாகவில்லை என்பேனே
முறிந்த ஓர் இதயத்தை
முயன்றவரையில் சீர்படுத்த
ஓர்சந்தர்ப்பமேனும் கிடைத்தால்
வீணாக வாழ்வில்லை என்பேனே
வந்தவண்ணமே போகின்ற
வேடிக்கையான இவ்வாழ்வினிலே
சேவைசெய்ய சந்தர்ப்பம்
சற்றேனும் நமக்குக் கிடைத்தால்
நாம் வாழ்கின்ற வாழ்க்கை
வீணாகாது என்பேனே!
ஆகஸ்டு, 1996.
மனித உறவு என்பது வேண்டும்-வேண்டா ஒன்றாகும். இதை ஆங்கிலத்தில் “Love and hate” என்பார்கள். ஆனால் உறவுகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. இதை பற்றி சஷிக்கு எடுத்துக் கூறியபோது எழுதிய பாடல்
73. இறை அறிவு
உறவின் மத்தியில்
இறைவனைக் காண்போம்
உலக வாழ்வினிலே
உள்ளம் நிறைந்த
நேயத்தை அருள்வோம்
பிறரின் வாழ்வினிலே
இதுவே அன்றி
"இறை அறிவு"
வேறே ஏதுமில்லை
இதை உணராமல்
போதிக்கின்றார்
பல வழிகளையே
துறந்தவன் எவனும்
உலகில் இல்லை
துணிந்தே கூறிடுவேன்
துறந்திட வேண்டாம்
மனித உறவை
அறிந்தே கூறிடுவேன்
இறைவனும் இவ்
உலகில் வந்ததும்
இதற் காகத்தானே
அவனைத் தொடர்ந்து
நாமும் இங்கு
அதன்படி செய்வோமே!
31-08-1996. மஹரி (ரீவா. ம.பி).
உள்ளத்தில் இருக்கும் இறைவனை வேறெங்கும் தேடவேண்டாம் என எண்ணியபோது எழுதிய பாடல்:
74. உளமே கோயில்
உருவத்தில் இல்லை அவன்
அருவத்தில் இல்லை அவன்
உள்ளத்தில் உள்ளவனை
ஊரெங்கும் தேடியே திரிகின்றார்
உளபடி அவர் அறியாமலே
காட்டினில் இல்லை அவன்
நாட்டினில் இல்லை அவன்
மனக் கூட்டில் உள்ளவனை
ஏடினிலும் எவ்வளவே தேடினும்
என்றும் அறியாரே அவனை
செம்பில் (சிலை) இல்லை அவன்
செயலிலும் (கர்மயோகம்) இல்லை அவன்
செம்மையான மனத்தில் உள்ளவனை
ஞானத்தின் மூலம் தேடிடமுடியாது
நானறிந்த உண்மை யிதே
காசி (வாரணாசி). 07-09-1996
நான் ஒரு தனிமை விரும்பி. அதேசமயம் உறவுகளை வெறுப்பவன் அல்ல. ஆனால் இவை இரண்டும் மிகைப்படும் போது ஏற்படும் போராட்டத்தை எண்ணியபோது எழுதிய பாடல்:
75. உறவா? துறவா?
இரு மனதிடை ஓர் போராட்டம்
இழுபறியாய் என்னுள் பேயாட்டம்
ஓர்மனமோ என்னை உள்ளிழுக்க
மறுமனமோ தாவிடும் மாயைக்கே
தனிமையில் இருக்கையில் சஞ்சலம்
தாறுமாறாய் ஓடிடும் இம்மனம்
மனிதருடன் வாழ எண்ணும்போதோ
சோர்வின் எல்லைக்கே அதுசென்றுவிடும்
உறவும் வேண்டும் இவ்வுலகினிலே
உள்ளான ஆன்மீக வாழ்விற்கே
தனிமையும் வேண்டும் இம்மனதிற்கே
தன்னையே ஆராய்ந்து பார்த்திடவே
உறவும்-துறவும் ஓர் வேடிக்கை
தொல்லைமிகு உலகில் இதுவாடிக்கை
ஆனாலும் அவையன்றி இவ்வாழ்க்கை
அறியாது என்றும் ஓர் நம்பிக்கை
07-09-1996. காசி (வாரணாசி).
இப்பாடலுக்கான பிண்ணனித் தேவையில்லை. இத்தகைய போராட்டம் வழக்கமாகிவிட்டது:
76. சுயசரிதை
உள்ளான உணர்வுகளை உறைத்திடவே
உறுதியான வார்த்தை இல்லையென்னில்
உறுத்திய மனமே மெல்லகூறி
ஓய்ந்தது என்னுள்ளே போராடி தன்னில்
தன்நெஞ்சறியவே பொய்த்த பின்பு
தன்னையே பலமுறை "சுட்டபோதும்"
பட்ட காயங்கள் பழகியதால், அவை
சுட்டது சற்றுமே ஒட்ட வில்லை
வீரத் தழும்புகள் இல்லை அவை
நான் பெற்ற வெற்றிக்கு அடையாளமாய்
போராடித் தோற்ற என் மனதின்
புண்பட்ட வடுக்களே அத்தனையும்
தோல்வியின் வடுக்களை மறைத்திடவே
தோன்றியதோ பலவழிகள் எனக்குதானும்
ஆனாலும் உள்மனம் வருடும் போது
பட்ட அவமானத்திற்கு எல்லை காணும்
ஆ! இனியும் நான் என்ன சொல்ல
அடிபட்ட மனதின் தன்மை சொல்ல
சுருக்கமாய்ச் சொன்னால் இது "சுயசரிதை"
சொல்லவோ வார்த்தை இல்லை என்னில்!
16-11-1996. மஹரி (ரீவா, ம.பி).
காசிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பின் எழுதிய பாடல். பல சமயம் பிறர் போராட்டங்களை என்மீது ஏற்றி வைத்து பாடல் எழுதியுள்ளேன். எனவே அவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட போராட்டம் மட்டுமே இல்லை:
77. கானல் நீர்
கானல் நீரைத் தேடிய மானைப்போல
காலமெல்லாம் ஓடித் தேடினாலும்
நாடிய சுகம் ஒன்றும் இல்லை
நான் அறிந்தவரை நானிலத்தே
சில நொடி நேரம் நிலைக்கும்
சிற்றின்பம் எல்லாம் மாயையே
உணர்ந்த பின்பும் மீண்டும் அதை
நாடிச் செல்வதும் வேடிக்கையே
உணராதார் இங்கு யாருமில்லை
ஊரறிந்த இந்த உண்மையையே
உணர்த்த முயலுவார் பிறருக்கு, ஆனால்
கைக்கொள்ள இயலார் தன்வரையில்
ஊருக்குத்தான் எல்லா உபதேசம்
உனக்கும் எனக்கும் இல்லை அவை
என்பதே உண்மை யானபின்னே
நாம் கானல்நிர் தேடிய மானாமே!
25-11-1996. காசி (வாரணாசி)
புத்தாண்டு பிறப்பு, அதற்கான கொண்டாட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. காலம் நித்தியமானால், புத்தாண்டு என்று ஒன்று வருவதில்லை. இவை நம் பயன்பாடிற்காக ஏற்படுத்திக் கொண்ட நாட்காட்டி ஆண்டுகள். எனவே என்னைப் பொருத்தவரை “புதியதாக” ஒரு ஆண்டும் வருவதில்லை. மனிதவாழ்வுதான் ஒரே மாதிரியாக சுற்றி வருகின்றது. இதை எண்ணி 01-01-1997-ல் வாலாஜா பேட்டையில் (தமிழ் நாடு) மணி வீட்டில் எழுதினேன்:
78. சுழற்சி
புதுவருடம் பிறந்ததென
புவியின் மாந்தருமே
ஆர்ப்பரித் தெழுந்தனர்
ஆரவாரமுடனே
"புதிதாய்" பிறந்ததென்ன?
புரியாமல் நானும்கேட்க
"புதுசிந்தை, புதுஎண்ணம்
புதுஉணர்வு" என உரைத்தார்
போனது சிலநாட்கள்
புதுவருடம் பிறந்தபின்னே
ஆர்வமுடன் நானும் ஓடி
ஆராய்ந்தேன் அவரின்வாழ்வை
ஆ! இனி என்சொல்ல
அந்தோ அவரின்நிலை
"புதியவை" அனைத்துமே
போனது சிலநாளில்
வழக்கம்போல் வாழ்வெண்ணும்
சக்கரமும் சுழந்றோட
முடிந்த இடம்தொடங்கி
மீண்டுமே சுழன்றுவந்தார்!
ஆன்மீகத்தைக் குறித்து சில காரியங்களை மணியிடம் பேசிய பிறகு எழுதியபாடல்"
79. சமநிலை
சிறு தடுமாற்றம் சிந்தையிலே
தவரவிடும் நம் வாழ்வினையே
"சீலம்" என்பது வேறல்ல அது
சிந்தையில் தோன்றும் சம நிலையே
உணர்வும்-உள்ளமும் மோதும் போது
உணர்ச்சியில் தோன்றும் சங்கமம்
அதன் வேகத்தில் நிலைதடுமாறினால்
வேதனை ஒன்றே எஞ்சிடும்
உணர்ச்சியில் தோன்றும் உரசல் எல்லாம்
விரிசலின் எல்லையைக் கண்டிடும்
உள்ளம் ஓர் சமநிலைக் கண்டால்
உறவே நிலை நின்றிடும்
உணர்வு-உணர்ச்சி இவைகளின் இடையே
மனதின் சமநிலை முக்கியம்
அதை அடைவது எவ்விதம் என்பதே
ஆன்மீகத்தின் லட்சியம்.
01-01-1997. வாலாஜா பேட்டை (தமிழ் நாடு).
Sunday, September 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment