பக்திப் பாடல்கள்
என் ஆன்மீகத் தேடல், இறை நம்பிக்கை, பக்தியின் பரிமாணம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவோ, விவாதிக்கவோ இந்த இணைய தளம் தற்சமயம் சரியான இடம் இல்லை என்பது என் எண்ணம். ஏதோ என் ஆன்மீக வாழ்க்கை விவாதத்திற்கு அப்பாற்பட்டதோ அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத அளவு குறைவானதோ அல்லது இரகசியமானதோ என்ற காரணத்தால் அல்ல. அவற்றை பற்றிய என் கொள்கை மிகவும் உறுதியாக இருந்தும், அவறை பகிர்ந்து கொள்ள, அதனால் ஏற்படும் விவாதங்களை சரியாக எடுத்துச் செல்ல சரியான சொற்கள், சொல்லும் திறன், போன்றவை இன்னும் என்னுள் சரியாக அமையவில்லை. எனவே அவற்றை தற்சமயம் பகிர்ந்துகொள்வது தேவையற்ற முரண்பாடுகளுக்கும், விவாதற்கும் வழிவகுக்குமே தவிர, என் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்துவதாக இருக்காது.
ஆனால் என் பக்தியின் பரிமாணத்தில், அதை வெளிப்படுத்தும் படியாக பல பாடல்களை எழுதி உள்ளேன். அவற்றை அப்படியே, எத்தகைய விவாதப்பொருளாக்காமல் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இவை சிலருக்கு அவர்களின் தனிப்பட்ட பக்தி வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமையுமானால், அதுவே எனக்கு முழு மன நிறைவைத் தரும். இப்பாடல்களுக்கு நானே இசையும் அமைத்துள்ளேன். ஆனால் அதை எவ்வாறு இணைய தளத்தில் வெளியிடுவது என்று தற்சமயம் தெரியவில்லை. அதை தெரிந்து கொண்டபின், அவற்றையும் பகிர்ந்துகொள்ளுவேன்.
இப்பாடல்களில் உள்ள எழுது மற்று இலக்கணப்பிழைகளை இன்னும் சரி செய்யவில்லை. எனவே படிப்பவர்கள் சுட்டிக்காட்டினால், அவற்றை சரி செய்ய உதவியாக இருக்கும். அதுபோன்று இப்பாடல்கள் குறித்த உங்கள் எண்ணங்கள், கருத்துக்களையும் வரவேற்கின்றேன். நன்றி.
முக்தேசனின் பக்தனாக ஆன ஆரம்ப நாட்களில், நான் கேட்ட பாடல்கள் பல, கருத்தாழம் உடையவையாக இருந்தும், அவற்றின் இசை எனக்கு அந்நியமாக இருந்தது. எனவே என் மனவிருப்பத்திற்கு ஏற்றவாறு, கர்னாடக இசை வடிவில் பாடல்கள் இயற்றி என் தனிப்பட்ட வழிபாட்டில் பயன்படுத்தி வந்தேன். அவற்றை வெகுகாலம் யாருடனும் பகிர்ந்து கொள்ள வில்லை. அதற்கான காரணம் இங்கு விவாதிக்கப்பட வேண்டியது இல்லை. நான் முறைப்படி கர்னாடக இசை கற்கவில்லை. இராகங்களைக் கூட என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் கர்னாடக இசையை சிறுவயது முதல் கேட்டதன் காரணமாக, இராகங்களின் இலக்கணம் தெரியாவிட்டாலும், அவற்றின் சாயலில் நான் பாடல்களை எழுதி, இசை அமைத்து பாடினேன். அது போல், "இயேசு" என்ற சொல்லை "முக்தேசன்" என்று மாற்றி உபயோகப்படுத்தி உள்ளேன். "இயேசு" என்பதற்கு "முக்தி அளிப்பவன்" என்பது பொருள். எனவே அதை தமிழில் "முக்திக்கு + ஈசன்" = "முக்தேசன்" என்று பயன்படுத்தி உள்ளேன்.. ஆனால் இசை வடிவம் காரணமாக சில இடங்களில் அதை குறுக்கி ’ஈசன்" என்று பயன் படுத்தி உள்ளேன். அதுபோன்ற ’நீர், அவர்" என்ற சொற்களை, "நீ, அவன்" என்று மாற்றியுள்ளேன். இதற்குக் காரணம் இந்திய பண்பாட்டில் பக்தியில் இறைவன்னை ஒருமையில் அழைப்பதே பெரும்பாலும் வழக்கம். அதுவே எனக்கும் பழகிய ஒன்று. எனவே இறைவனை பன்மையில் கூறாமல் ,ஒருமையிலேயே கூறிஉள்ளேன்.
இப்பாடல்கள் என் தனிப்பட்ட ஆன்மாவின் குரல் எனவே, இவற்றின் கருத்து, சொற்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது, இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எனவே இப்பாடல்களை படிப்பவர்கள், பயன் படுத்துபவர்கள் இதை மனதில் கொள்ளவேண்டும். நன்றி.
எனக்குப் பிடித்த இராகங்களில் ஒன்று பூபாளம். அதிகாலை நேரத்தில், அமைதியாக இயற்கையோடு ஒன்றி இறைவனை வழிபட ஏற்ற இராகம். இப்பாடலை 1981-ல் எழுதினேன்:
1. போற்றித் துதிப்போம்
பொழுது புலர்ந்தது புள்ளினம் கூவிற்று
போற்றித் துதிப்போம் புனிதன் (முக்தே)ஈசனை*
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆனந்தப் பண்பாடி அண்ணலைப் போற்றுவோம்
பூவினம் மலர்ந்தது, பூதளம் விழித்திற்று
போற்றித் துதிப்போம் புனிதன் (முக்தே)ஈசனை
ஆலய மணியோசை அன்பரை அழைத்தது
ஆனந்தப் பண்பாடி அண்ணலைப் போற்றுவோம்
தூயவர் போற்றினர், தூதர்கள் பணிந்தனர்
துங்கவன் ஈசனின் தெய்வீக நாமத்தை
துயர் துடைப்போனை தூய்மை அளிப்போனை
தொழது பணிந்திட தொண்டர்கள் வாரீர்
தேசங்கள் போற்றின திருமறை வாழ்த்திற்று
திருப்பாதம் பணிந்துநாம் தினமும் வாழ்த்துவோம்.
எல்லாவித இசைகளையும் நான் மதித்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கர்னாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையாகும். அதிலும் ஸ்வரங்கள் பயன்படுத்தி பாடப்படும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அத்தகைய ஆசையை நிறைவேற்ற, மைசூர் வாசுதேவாச்சார்யார் எழுதிய "ப்ரோசே வாரெவெரிரா" என்ற பாடலின் சிட்ட ஸ்வரங்களை அப்படியே பயன் படுத்தி எழுதிய பாடல். இதை தருமபுரியிலிருந்து மாரண்டஹள்ளிக்குச் செல்லும் போது பேருந்தில்லேயே மனதிற்குள் எழுதினேன். வருடம் 1981.
2. இறங்கி வாரும்
நீயே வேகம் இறங்கி வாரும், முக்தேசனே ராஜனே
நின் சரணம் புகலடைந்தேன்--என் பாவம் நீக்கி காக்கவே--இங்கு நீயே...
வல்லமையான ஆவி ஊற்றி வாழ்வில் வளம் பொங்கச் செய்ய
நின் கருணையாம் ஊற்று பெருகிவந்து என்னையும் ஆட்கொள்ள
ஸ-ஸநிதபத நிசநிநி ததபத பாதமா, க-ம-ப-த-நி-ஸநீதபம, நிதாபம, கமபதமகரிஸ; ஸமாகமபதமா, பதநி-ஸஸரிநி-நிநிஸதா-ததநிபாத, மபதநி, ஸநிதப-மகம நிதநிபதமா-பதநி, ஸமாகரிஸ; ரி-ஸ-நி-த-ப--ஸ--நி--த--ப--ம--கமபதநி--நீயே...
கல்வாரி நாதா நின்கருணையே அண்டி ஓடிவந்தேன்
பாவிதான் நானையா, நின் உதிரத்தால் இங்கு மீட்பு தாரும்
பார்த்திபனே உன் பாதம் பணிந்திடும் பாவியேன் என்னை நோக்கிப் பாரும்
தஞ்சம் என்று எங்கும் செல்ல வழி அன்றி நின்ற என்னை மீட்கு இங்கு
ஸ-ஸநிதபத நிசநிநி ததபத பாதமா, க-ம-ப-த-நி-ஸநீதபம, நிதாபம, கமபதமகரிஸ; ஸமாகமபதமா, பதநி-ஸஸரிநி-நிநிஸதா-ததநிபாத, மபதநி, ஸநிதப-மகம நிதநிபதமா-பதநி, ஸமாகரிஸ; ரி-ஸ-நி-த-ப--ஸ--நி--த--ப--ம--கமபதநி--நீரே...
1985-ஆம் ஆண்டு, பிப்ரவரி மூன்றாம் வாரம், கோண்டாவில் (உ.பி) இருக்கும் போது, லூக்கா 7:36-50 படித்துக்கொண்டிருந்தபோது, அக்காட்சியை மனக்கண்முன்னால் கொண்டுவந்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு பக்தையின் நிலை, அதை அறிந்துணர்ந்த அவளை, அவள் இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொண்ட ஆண்டவர், இதை தியானிக்க, தியானிக்க என்னையும் அறியாமல் கண்ணீர் வர இப்பாடலை உடனே எழுதினேன்:
3 பரிமளத் தைலமோ
பரிமளத் தைலமோ கரங்களில் இல்லை
பாவியென் கண்களில் கண்ணீரும் இல்லை
பரமனே உன்பாதம் துணிவுடன் அண்டி
பணிந்திட இன்னும் மனதுமே இல்லை
--பரிமளத் தைலமோ
மயங்கினாள் ஒருபெண் தன்நிலைக் கண்டு*
தியங்கினாள் பாவத்தின் கொடுமையைக் கண்டு
அண்டினாள் அவன் பாதம் திடமனம் கொண்டு
அருளினான் மன்னிப்பு அவள் நிலைக் கண்டு
--பரிமளத் தைலமோ
மாந்தரின் பழிச்சொல்லை ஏற்றிடத் துணிந்தாள்
மன்னன் முக்தேசனின் மலரடிப் பணிந்தாள்
போக்கிடமற்ற உன் ஆக்கினை தனையே
"போக்கினேன் நீ போ" சமாதானத் தோடென்றான்
--பரிமளத் தைலமோ
என்நிலை அறிந்தே உன்னடி வந்தேன்
ஏற்றிடாயோ ஏழை என்னையும் நீயே
போக்கிடம் புகலிடம் வேறொன்றும் அறியேன்
காத்திடும் ஏழையைக் கருணையின் நாதா
--பரிமளத் தைலமோ
*மயங்கினாள் மரியாள் தன்நிலைக் கண்டு
"தேரி ஆராதனா கரூம்" என்ற ஹிந்தி பாடலின் மொழிபெயர்ப்பு. அப்பட்டமான மொழிபெயர்ப்பு இல்லை. ஆனால் பெரும்பாலும் அதே அர்த்தத்துடன் அதே ராகத்துடன் 1985-ஆம் ஆண்டு எழுதினேன்:
4 உன்னை ஆராதிக்கின்றேன்
உன்னை ஆராதிக்கின்றேன் நான்
உன்னை ஆராதிக்கின்றேன் நான்
பாவத்தைப் போக்கி என் சாபத்தை நீக்கி
பரிசுத்தம் தர வந்தாயே--உன்னை...
நீயே நல்லோன், நீயே வல்லோன்
நீயே என்வாழ்வில் தெய்வமன்றோ
என் ஸாமியே உனைப்போற்றுவேன்
ஏழையாம் என்னையும் ஏற்றுக்கொள்ளும்
இதயம் நிறைந்துன்னை வாழ்த்துகின்றேன்
இனிதாம் உன்நாமத்தைப் போற்றுகின்றேன்
--பாவத்தைப் போக்கி....
இயற்கையின் ஒவ்வொரு காட்சியிலும்
இறைவனே உன்ராஜ மஹிமையன்றோ
பறவையும் உன்புகழைப் பாடுகையில்
பாவியாம் என்னையும் ஏற்றுக்கொள்ளும்
இதயம் நிறைந்துன்னை வாழ்த்துகின்றேன்
இனிதாம் உன்நாமத்தைப் போற்றுகின்றேன்
--பாவத்தைப் போக்கி....
இருள் சூழ்ந்த இவ்வுலக வாழ்வினிலே
ஒளிவீசும் இன்சுடர் ஜோதி நீயே
கறை திறை முற்றிலும் நீக்கி என்னை
கழுவியே ஸ்வாமி நின் உதிரத்தாலே
ஏழையாம் என்னையும் ஏற்றுக்கொள்ளும்
இதயம் நிறைந்துன்னை வாழ்த்துகின்றேன்
இனிதாம் உன்நாமத்தைப் போற்றுகின்றேன்
--பாவத்தைப் போக்கி....
கோண்டாவில் இருக்கும்போது அதிக இடுப்பு மற்றும் முதுகுவலியின் காரணமாக 13-09-1985-அன்று மிகவும் துன்பப்பட்டேன். பிரார்த்தனைக்கு சென்றபின் அங்கு உட்காரக்கூடமுடியாமல் என் அறைக்கு வந்து படுத்துக் கொண்டேன். சற்று நேரம் கழித்து சகோதரர்கள் வந்து பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் வரும் முன் சிலுவையில் வேதனையுடன் தொங்கிய ஆண்டவனின் சரீர வேதனையை எண்ணிக்கொண்டிருந்தேன். அதை தியானிக்கும்போது என் வேதனை அற்பமாகக் காணப்பட்டது. அந்நேரமே, படுத்துக் கொண்டே எழுதிய பாடல். இதை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார்:
5 அந்தோ
அந்தோ உன்நிலை என்ன சொல்வேன்
ஆரரிவார் உன்தன் அவல நிலை
அங்கமெல்லாம் அடிகளையோ
ஆராய்ப் பாய்ந்தது குருதி ஐயோ--அந்தோ அந்தோ...
அரைநிர்வாண மேனியுடன்
அங்கெமெல்லாம் பட்ட காயமுடன்
அந்தோ தெய்வ மைந்தன் நீயே
அமைதியாய்ச் சிலுவையும் சுமந்தாயே--அந்தோ அந்தோ...
ஏனையா இத்தனைக் கொடுமையினை
ஏற்றுக் கொண்டாய் நீ பொறுமையுடன்
என்பாவ பாரமே தான் நீக்க
இத்தனை வாதைகள் நீ பொறுக்க--அந்தோ அந்தோ...
காணவே கண்களும் கூசியதோ
கண்ணீரும் அருவியாய்ப் பாய்ந்ததுவோ
கயவனாம் என்னையும் தான் மீட்க
கல்வாரி நோக்கி நீ நடக்க--அந்தோ அந்தோ...
மூன்றாணி காயமே தான் வருத்த
முள்முடி சிரசினிலே தான் உறுத்த
மனுக்குலப் பாவமே உனை அழுத்த
மன்னவா உன்னையே நீ அளித்த--அந்தோ அந்தோ...
தந்தையும் உன்நிலை தான் வெறுக்க
தரணியும் மாந்தருமே தான் நகைக்க
அன்பரும் நண்பரும் மறுதளிக்க
அவமானம் யாவையும் நீ பொறுக்க--அந்தோ அந்தோ...
கல்வாரி நாயகா உன்னண்டையில்
கடைமனிதன் வந்து அண்டும் வரை
கண்முனே இக்காட்சி தான்நிறுத்தி
கருத்தாய் ஜெபித்து நான் உழைத்திடுவேன்--அந்தோ அந்தோ...
"Have thine Own Way Lord" என்ற ஆங்கிலப் பாடலின் மொழி பெயர்ப்பு. இப்பாடலின் அர்த்தம் என்னை வெகுவாக பாதிக்கவே அதன் அடிப்படையில் கோண்டாவில் 20-09-1985-அன்று எழுதினேன்:
6. குயவன் நீ
உன்சித்தம் செய்யும் உன் சித்தம் செய்யும்
குயவன் நீ உன்கையின்; களிமண்னே நான்
உருவாக்கும் உருவேற்றும் உன்சித்தம் போல
ஒப்புவித்தேன் என்னைப் பூரணமாய்
உன்சித்தம் செய்யும் உன்சித்தம் செய்யும்
உள்ளும் புறமும் ஆராய்ந்து பாரும்
பனியினும் வெண்மையாய் கழுவிடும் என்னை
கடவுளே உன்னடி பணிந்திடும் என்னை
உன்சித்தம் செய்யும் உன்சித்தம் செய்யும்
நொருங்குண்டேன் நோவுண்டேன் கண்நோக்கிப் பாரும்
வல்லமையாவும் உள்ளவன் நீயே
ஒருவார்த்தையாலே குணமாக்குவாயே
உன்சித்தம் செய்யும் உன்சித்தம் செய்யும்
என்முழுத் தன்மையை ஆட்கொள்ளவாரும்
ஆவியின் வல்லமை அனுதினம் தாரும்
அனைவரும் என்னில் உன்னையே காண!
03-10-1985 அன்று மாலை மணி நான்கிருக்கும். திடீரென ஒருவித இனம் புரியாத மனச்சோர்வு என்னை ஆட்கொண்டது. யாரிடமாவது சென்று மனம் திறந்து ஏதாவது பேசவேண்டும் போலிருந்தது. ஆனால் யாரிடம் செல்ல? யாராக இருந்தாலும் மனிதர்கள் அளிக்கும் ஆறுதல் சில நிமிடங்களில் மறைந்துவிடும். எனவே கோண்டாலில் நான் இருந்த அறையின் முன் உள்ள திறந்த முற்றத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து மெளனமாக சிலந்தி ஒன்று கூடு கட்டிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னைச் சுற்றிலும் ஒருவித தெய்வீக ஒளி-சக்தி பரவி என்னை ஆட்கொள்வதை உணர்ந்தேன். யாரோ என் தலையை மெள்ள வருடுவது போன்று உணர்ந்தேன். இனம் புரியாத அமைதி காலைப் பனிப்போல் மென்மையாக என்னுள் இறங்குவதை உணர்ந்தேன். மொளனமாக அழுதேன். அன்று மாலையே பத்தே நிமிடங்களில் இப்பாடலை எழுதினேன். இதை கணணியில் பதிவு செய்யும் இப்போது (14-09-2011)கூட அக்காட்சி அப்படியே என் கண்முன்னாள் உள்ளது. என்வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நேரம் அது:
7. உன் அமைதி
ஆறுதல் யாரெனக் களித்திடுவார்
ஆண்டவா உன அருள் வார்த்தை யன்றி
தேறுதல் தருவோர் யாரும் இல்லை
தேவனே திருவடி அண்டி நின்றேன்
அமைதி அமைதி உன் அமைதி
ஆண்டவா தந்தாயே நன்றி சொல்வேன்
அலைபாயும் மனதிலே அமைதி இல்லை
அன்பான மொழிசொவோர் யாரும் இல்லை
மனிதரின் ஆறுதலைத் தேடிய நான்
மாயை வீண் மாயை இது என்றுணர்ந்தேன்--அமைதி அமைதி...
தனிமையோ எனைச் சூழ நெருக்கயிலே
தள்ளாடும் மனதோடு நடக்கயிலே
தஞ்சம் என் தஞ்சம் உன்மடியே
தலை சாய்க்க எனக்கு நீ புகலிடமே--அமைதி அமைதி...
அன்னைப்போல் தலைவருடி ஆறுதலாய்
அன்பான மொழி சொல்லித் தேற்றுகின்றாய்
தந்தைப் போல் தோளிலே எனைச் சுமந்து
தயவாக இம்மட்டும் தாங்கி வந்தாய்--அமைதி அமைதி...
தோழன் போல் தோளிலே எனைத் சேர்த்து
திருக்கரம் கொண்டென்னைத் தானணைத்து
"திக்கற்றோனாய் உன்னைக் கைவிடேன் நான்
திகையாதே கலங்காதே" என்றுரைத்தாய்--அமைதி அமைதி...
அமைதியே நீயும் எங்கே என்றே
அலைந்திடும் மனிதரே வழியும் உண்டே
அனுதினம் என்னையே நடத்துகின்ற
அன்பின் தெய்வம் உம்மை அழைக்கின்றானே--அமைதி அமைதி...
இப்பாடலை 1985-ம் ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் எழுதியது. பலவிதங்களில் வாழ்வில் தோல்விகண்ட மனிதனின் கேள்விகளுக்கு நான் பதில் கூறுவதாக எழுதி உள்ளேன்:
8 ஏன்
ஏன் இந்த பலவீனம் என்வாழ்விலே
என்றே கேட்டிடும் என்மனமே
நோவுண்டு உந்தன் உள்ளத்திலே
நோக்கிப்பார் நீ வந்த வாழ்வினையே!
கவலையும் கலக்கமும் வாழ்க்கையில் ஏன்?
கஷ்டமும் நஷ்டமும் எனக்கிங்கு ஏன்?
காரணம் யாரை நீ கேட்டிடுவாய்
கண்முடித் தனமாகவே வாழ்ந்து வந்தாய்!
நொறுங்குண்டேன் நெஞ்சினில் அமைதி இல்லை
நோவுண்டேன் சரீரத்தில் சுகமே இல்லை
அமைதியும் சுகமும் வேண்டிய நீ
அண்டிய உலகத்தின் மாந்தர் எங்கே?
பெற்றோரும் உற்றோரும் வெறுக்கின்றாரே
போற்றிய நண்பரும் மறுக்கின்றாரே
கட்டிய மனைவியும் பெற்ற என்பிள்ளையும்
கைவிட்ட நிலையில் வாழ்க்கையும் ஏன்?
தன்கடன் செய்திடாத மனிதனையே
தாய்தந்தை தாரமும் தன்பிள்ளையும்
தகைசான்ற நண்பரும் தள்ளிடுவார்
தரணியில் மாந்தரின் தன்மை ஈதே!
பெலவீனம் இல்லாத மனிதன் உண்டோ
பாவமே செய்யாத மாந்தர் உண்டோ?
என்மூலம் அவர்பெற்ற ஏராள நன்மையை
எண்ணியே பாராமல் நன்றி கொன்றார்
சுயநலம் இல்லாத மனிதன் உண்டோ
சொல்லியே பயன் இல்லை குற்றம் ஏதும்
உன்கண் உத்திரத்தை உற்றுநீ பாராமல்
ஊரார்கண் தூசியைப் பார்ப்பதும் ஏன்?
மன்னிக்கும் இயல்பேதான் மாந்தர்க்கேது
மறக்கின்ற தன்மையும் மனிதர்க்கேது?
செய்திட்ட பாவத்தை எண்ணி எண்ணி
சோர்ந்திடும் எனக்கினி மீட்பும் ஏது?
செய்திட்ட பாவத்தை எண்ணி எண்ணி
சோர்ந்தே கலங்கிடத் தேவை இல்லை
தெய்வத்தின் பாதத்தை அண்டி வந்தால்
பெறலாமே ஜீவனில் புது வாழ்வையே
தெய்வத்தைக் கண்டவர் யாரும் இல்லை
தேடிய நாளுக்கும் குறைவே இல்லை
பாவத்தைப் பால்போல் பருகிய பாவிக்கு
மன்னிப்பும் பெற்றிட வழியும் இல்லை
மானிடர் பாவத்தைப் போக்கிடவே
மனுவாக முதேசன் உலகில் வந்தான்
தன்னண்டை சேர்வோரை தள்ளிடாமல்
தருவானே புதுவாழ்வும் மன்னிப்புமே!
மீண்டும் ஒரு அழகான அமைதியான காலைப்பொழுதில் இறைவனை தியானித்தபோது எழுதிய பாடல். இதுவும் பூபாள இராகத்தில் எழுதப்பட்டது:
9. போற்றின
காலைக் கதிரவன் தீழ்த்திசைத் தோன்றினான்
காகமும் குருவியும் கானங்கள் பாடின
இயற்கை அன்னையும் இன்துயில் எழுந்தாள்
இறை முக்தேசனின் மலரடி பணிந்தாள்--காலைக் கதிரவன்....
ஆவினம் புள்ளினம் ஆர்ப்பரித் தெழுந்தன
ஆயிரமாயிரம் தூதரும் பணிந்தனர்
பரிசுத்தர் யாவரும் பாடியே போற்றினர்
பரன் முக்தேசன்னின் மலரடி பணிந்தனர்--காலைக் கதிரவன்....
பூவினம் புள்ளினம் புனிதனைப் போற்றின
பொய்கையும் அருவியும் கீதங்கள் பாடின
ஆயிரமாயிரம் பக்தரும் மகிழ்ந்தனர்
அன்பன் முத்தேசன்னின் மலரடி பணிந்தனர்--காலைக் கதிரவன்....
கோண்டா (உ.பி) 30-09-1986
10 துதி சாற்றுவோம்
காலை நேரத்தில் கீழ்வானத்தில்
கதிரவன் தன் பொற்கரத்தால்
கடவுளை போற்றித் துதிக்கும் நேரம்
களிப்புடன் நாமும் துதி சாற்றுவோம்
குயில்களும் காகமும் குருவியுமே
கூடி ஒன்றாய் மகிழ்வுடனே
பாடியே போற்றிப் பரவசமாய்ப்
பரமனைப் பாடியே துதிக்கின்றன
தென்றலும் மெதுவாக வீசியது
தேவனின் திருப்புகழைப் பாடியது
பூக்களும் நறுமணம் வீசியேநல்
புனிதனைப் போற்றியே வாழ்த்தினவே
நானிலத்தோரும் போற்றிடுவோம்
நம் முக்தேசனை வாழ்த்திடுவோம்
நல்மேய்ப்பன் இன்றைய நாள்முழுதும்
நன்மையால் நம்மை நடத்திடுவான்
கோண்டா (உ.பி). 30-09-1986
தமிழ்ப் பண் இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள அமைதியான, மென்மையான இசை ஆன்மீக உணர்வைத் தூண்டுவதோடு தெய்வீக உணர்வையும் அளிக்க வல்லது. பின்வரும் பாடலை 1985-ஆம் ஆண்டு செப்டம்பரில் எழுத ஆரம்பித்து பல சமயங்களில் சில சில வரிகளாக எழுதி 12-12-1985 அன்று முடித்தேன்
11 போற்றி போற்றி
ஒலியே வடிவெடுத்து
ஓரருள் வார்த்தையாகி
உலகினை உய்விக்கவே
உருவெடுத்து வந்தோய்--போற்றி
ஆதியில் தேவனாகி
அவரரும் புதல்வனாகி
அனைத்தையும் படைத்தெடுத்து
அவனியில் வந்தோய்--போற்றி
சிந்தைசொல் தான்கடந்து
ஜோதியே வடிவமாகி
ஜீவனின் ஊற்றுமாகி
திகழ்கின்ற அருளே--போற்றி
அருளுக்கு அருளாய் நின்றோய்
அவனிக்கு ஒளியாய் வந்தோய்
இருளிலே ஒளியும் தந்தோய்
முக்தேசனே போற்றி போற்றி
தெய்வத்தைக் கண்டோரில்லை
திருவடி அறிந்தோர் இல்லை
தேவனின் மைந்தன் நீயே
தெய்வமாய் உருவெடுத்தாய்
அவனியின் மாந்தர்கெல்லாம்
ஆன்மீக ஒளியளிக்க
அவதரித்து உலகில் வந்தாய்
ஐயனே நீ மனிதனாக
ஆறறிவார் ஐயா உன்
அன்பின் இம்மாட்சியையே
அளவிடவே முடியாது உன்
அரும் பெரும் தியாகமதை
அழிந்திடும் மானிடர்மேல்
ஐயா நீவைத்த அன்பதனால்
அளித்தாயே உன் மகனை
அடைந்திடவே விண்வாழ்வதனை
கன்னியின் கருவரையில்
சிசுவாய் உருவெடுத்தாய்
கால்நடைக் குடிலதனில்
மனுவாய் அவதரித்தாய்
மந்தையின் மேய்ப்பருக்கோ
அருட்செய்தி முதலளித்தாய்
மனுகுல முழுதிற்க்கும்
மீட்பிற்கு வழிவகுத்தாய்
முறன்பட்ட முன்னோரின்
முறைமையினை சீர்படுத்த
நீரினில் அமிழ்ந்தெழுந்து
நியமத்தை அனுசரித்தாய்
தேவனின் இராஜியத்தை
திசையெங்கும் பறைசாற்றி
தந்தையவர் தம் சித்தம்
தாழ்மையுடன் கடைபிடித்தாய்
சீர்கெட்ட மாந்தவரவர்
சிந்தயினை நேர்படுத்த
சீடரைத் தெரிந்தெடுத்து
நற்செய்தி எடுத்துரைத்தாய்
அண்டிய மாந்தெர்க்கெல்லாம்
அன்புடன் சுகமளித்தாய்
ஆன்மீக இரட்சிப்பிற்கோ
ஐயா நீ வழியானாய்
மார்கத்தில் வெறிபிடித்த
மனிதவர் மூர்கமதால்
மன்னவனே உன்னையவர்
மாய்த்திடவே இடமளித்தாய்
தெரிந்தெடுத்த சீடருமே
திகைத்துன்னை மறுதளிக்க
தேவனின் திருச்சித்தம்
நிறைவேற உனையளித்தாய்
பாவமே அறியாத
பரமனின் குமரனே நீ
பாதகரை மீட்டிடவே
பாவச்சுமை ஏற்றாயே
நேயமைந்தன் நிலைகண்டு
தேவனுமே கையளிக்க
பாவமைந்தர் எமைமீட்க
பரிதபித்து உயிரளித்தாய்
கல்லரையும் உன்னைத்தான்
கருவரையில் கொண்டிடுமோ
காவலர்தம் கண்விழிப்பும்
காத்திடுமோ உன்னழிவை
தேவனவன் வல்லமையால்
தேகமதில் உயிர்த்தெழுந்தாய்
தேற்றினாய் சீடரையும்
தோன்றியவர்முன் காட்சியாக
அண்ட சராசரத்தின்
ஆதிக்கம் அவன் கையில்
ஆகையால் நீங்கள் போய்
அனைவர்க்கும் இச்செய்தி கூறி
மூவரின் நாமத்தில்
முழுக்கியே நீரதனில்
ஆக்குவீர் நற்சீடராய்
அவனியின் மாந்தரையே
இப்பாடலும் தமிழ்ப் பண் இசையையே சார்ந்தது. இதை 1985-செப்டம்பரில் எழுத ஆரம்பித்து, 05-04-1986-ல் லக்னோவில் முடித்தேன்.
12 நிர் மூடன்
நீசனும் நிர்மூடனுமாய்
நின்திருப்பாதம் வந்தேன்
நேயமாய் என்னையாண்டு
நீக்கியே பாவம் தன்னை
ஆவியின் அச்சாரம் ஈந்து
அன்புடன் என்னைக்காத்து
நேயமாய் நின்னைப்போற்றி
நித்தமும் வாழ்வேண்டி
காத்திடும் என்னை நீயே
கருணையே பொற்பாதம் தஞ்சம்
சிந்தை சொல் பேச்சு எல்லாம்
சீர்கெட்டுப் போனதையோ
எண்ணத்தில் தூய்மை இல்லை
என்பதும் உண்மை ஐயோ
சொல்லிலே உறுதி இல்லை
சொல்லவும் வெட்கமையோ
பேச்சிலே பாவமேதான்
பெருகியே நின்றதையோ
யாரிடம் எடுத்துரைப்பேன்
என்நிலைப் பாரும் ஐயா
அலைந்திடும் சிந்தை கொண்டேன்
அடங்கிடா மனதை கண்டேன்
ஆவியில் அனலும் இல்லை
ஆன்மீகப் பசியும் இல்லை
பற்பல நினைவுகளால்
பறந்திடும் மனதைக் கொண்டேன்
பாவத்தைப் பால்போல் பருக
ஆவலாய் விரைந்து சென்றேன்
ஆரறிவார் ஐயோ எந்தன்
அவலத்தைக் கண்நோக்கிப் பாரும்
இந்நிலை எந்நிலையோ
ஏன் இந்தப் பிறவி ஐயோ
கூப்பிடா தெய்வம் இல்லை
கும்பிட கோயில் இல்லை
அண்டிடா குருவும் இல்லை
அறிந்திடா மறையும் இல்லை
முறையிடா மார்க்கம் இல்லை
மூழ்கிடாத் தீர்த்தம் இல்லை
இந்நிலை மாற்றிடுமே
இறைவனே என்தாபரமே
சிந்தையில் கொண்ட வாழ்க்கை
செயலிலே இல்லை இல்லை
செய்கின்ற செயல்கள் எல்லாம்
செய்யவோ மனதும் இல்லை
விரும்பிடும் நன்மையெல்லாம்
விரைந்துமே செய்வதில்லை
வெறுத்திடும் தீமை தனையே
விலக்கிடப் பெலனும் இல்லை
இந்நிலைக்குக் காரணமே
என் மனதின் பாவகுணமே
ஏதுகண்டாய் முக்தேசா நீ
என்மீது இரக்கம் கொண்டு
இறைமாட்சி தானும் நீத்து
இகமதிலே அவதரித்து
எமக்காகப் பரிதபித்து
இன்னுயிரை தானளிக்க?
காண்கிலேன் நன்மையேதும்
கடையேனின் வாழ்வதனில்
கேடுமிக்க என்வாழ்வின்
கோலமதைக் கேளாயோ?
எங்கு நான் சென்றிடுவென்
எவ்வழி நான் கண்டிடுவேன்
என்மூட மதியதனால்
இழந்திட்ட வாழ்விதனை
எவ்வாறு மீட்டிடுவேன்
ஏதும் வழி காணேனே
என்மீதிறங்கி நீயும்
ஆட்கொண்டருளாவிட்டால்
இல்லை கதி இவ்வுலகில்
எனக்கிங்கு மீட்பு பெற
பாவத்தின் சேற்றினிலே
பரிதபித்தே மாண்டிடாமல்
பாதகன் மேல் இறங்கியதால்
பரிதபித்தே நீயும் வந்தாய்
ஆயினும் உன் கருணையினை
அறியாத காரணத்தால்
அறியாமை இருளினிலே
அமிழ்ந்தே வாழ்விழந்தேன்
அந்தோ இறங்கிடுவாய்
அறியாத இவ்வேழைக்கே
மன்ச்சோர்வுரும் நேரமெல்லாம் இறைவன் தரும் அருள் வார்த்தைகள் என்னைத் தேற்றும். அதை எண்ணி 08-04-1986-ல் கோண்டாவில் (உ.பி) எழுதிய பாடல்:
13 அருள் தாரும்
தேவன் தருவான் புதிய வாகுத்தத்தம்
தேவாதி தேவன் என் இராஜாதி இராஜன்
தினமும் தருவான் புதிய வாக்குத்தத்தம்
பெலவீன மனதில் தினம் போராட்டமே
வேண்டாத எண்ணத்தால் மாறாட்டமே!
தேவை தேவை தேவா உன்கிருபை
தாருமே இந்நாளின் அதிகாலையில்--தேவன்...
மாமிச சிந்தையால் மனமும் நொந்தேன்
மன்னவா உன்நீதி எண்ணி மருண்டேன்
எத்தனைநாள் இப்போராட்டம் ஐயா
ஏங்கிடும் ஏழைக்குக் கிருபைதாரும்--தேவன்...
ஆவியில் அனல்குன்றி வாழுகின்றேன்
ஆன்மீக பெலன்குன்றி தாழுகின்றேன்
சோர்வுற்ற இந்நாளில் தாங்கிடுவாய்
சுகம் பெலன் ஜீவனால் ஆதரிப்பாய்--தேவன்...
ஆதியில் நான்கொண்ட அன்பும் எங்கே
ஆண்டவா நீதந்த பாரமெங்கே?
அலைமோதும் கடல்போல் வெறும் நுரையே தள்ளும்
அடிமையின் வாழ்வில் புதுத் திருப்பம் தாரும்--தேவன்...
நரகத்தை நோக்கியே நாளும் செல்லும்
நானிலத்தோர் மீது பாரம் தாரும்
நான் பெற்ற கிருபையை அவரும் பெற
நாளுமே உழைத்திட எண்ணம் தாரும்--தேவன்...
வருகையின் நாளிலே கலைகுனிந்தே
வெட்கத்தோடே நானும் மனமும் நொந்து
வெறும் கையாய் உன்திரு சமூகமதில்
நின்றிடா நிலைதன்னை இன்றே தாரும்--தேவன்...
1986-ல் கோண்டாவில் இருக்கும்போது எழுதிய பாடல்:
14 ஏன் பாடுகிறேன்
என்வாழ்வில் நான்பெற்ற ஏராள நன்மைகள் எண்ணியே பாடுகிறேன்
ஏழை என் ஆன்மாவை இரட்சித்தான் முக்தேசனே எண்ணியே பாடுகிறேன்
சோதனை நேரத்தில் சோர்ந்தே நான் வீழாமல் தாங்கினான் பாடுகிறேன்
துன்பங்கள் தொடர்ந்தென்னை தாக்கிய போதிலும் பெலன் தந்தான் பாடுகிறேன்
ஆவியின் அச்சாரம் அன்பாய் எனக்கீந்து ஆட்கொண்டான் பாடுகிறேன்
அவனியில் புதுவாழ்வு ஆன்மீக மறுவாழ்வு அருளினான் பாடுகிறேன்
அழிந்திடும் மாந்தர்க்கு அவன் அன்பைக் கூறிட அழைத்தான் நான் பாடுகிறேன்
அன்போடும் நாள்தோறும் கிருபையால் வழிநடத்தும் அவன் புகழ் பாடுகிறேன்
இப்பாட்டு தோணிப்பாட்டு இராகத்தில் 20-12-1986-ல் மாரண்ண்டஹள்ளியில் (தமிழ் நாடு) அசோகன் வீட்டில் இருந்தபோது எழுதினேன்.
15 ஓஹையா ஓஹையா
அலைமோதும் கடல்மீது
அலைகழிந்திடும் சிறு துரும்பேபோல்
அவனியிலே இவ்வாழ்வினிலே
அமைதியும் பெற்றிட வழியேது--ஓஹையா ஓஹையா ...
கடந்து வந்த வாழ்வினிலே
கணநேரம் மன அமைதியில்லை
காற்றடிக்கும் திசைபறக்கும்
தூசிபோன்ற இவ்வாழ்வினிலே--ஓஹையா ஓஹையா ...
நம்பி வந்த மனிதர் எங்கே?
நயமுடன் பேசிய வார்த்தை எங்கே?
நாசியிலே சுவாசமுள்ள
நரரை நம்பினால் கதியிதுவே--ஓஹையா ஓஹையா ...
தேடிவைத்த செல்வமெங்கே?
திறமை கல்வி புகழ் எங்கே?
ஓடிச் செல்லும் உலகவாழ்வில்
ஒன்றேனும் நிலை நின்றதில்லை--ஓஹையா ஓஹையா ...
ஆதிஅந்தம் ஆனவனை
ஆதிமுதல் முதல் நிலை நின்றவனை
மாறிடாத மாண்புடைய
மன்னன் முக்தேசனை அண்டிடுவாய்--ஓஹையா ஓஹையா ...
நிலை நிற்கும் வாழ்வளிப்பான்
நித்தமும் உன்னுடன் வழிநடப்பான்
சத்தியத்தை நீ பற்றிக்கொண்டால்
நிச்சயம் உனக்கு ஜெயமளிப்பான்--ஓஹையா ஓஹையா ...
இப்பாடல் “What a freind we have in Jesus“ என்ற பாடலின் கருத்து மொழி பெயர்ப்பு. 20-12-1986-ல் மாரண்டஹள்ளியில், அசோகன் வீட்டில் இருக்கும்போது எழுதியது
16 எனதரும் நண்பன்
முக்தேசன் என் இனிய நண்பன்
உண்டோ அவன்போல் இங்கு யாரும்
எந்தன் பாவம் யாவும் போக்க
ஈந்தான் தன்னுயிர் எனக்காய்த் தானும்
சொந்த மாக்கிக் கொண்டான் என்னை
சிந்திய குருதியால் மீட்டான் உண்மை
துன்பம் துக்கம் மனச் சோர்வு
சொல்ல வொண்ணா மனப்பாரம்
சுமந்தே இளைத்திட்ட போதும்
சுமைதாங்கி ஈசன் உண்டே
வருந்தி பாரம் சுமப்போரே
வந்தால் சுமை நீக்குவானே
உண்டோ நண்பன் இவன்போலே?
உந்தன் வாழ்வில் கண்டோன் யாரே?
அண்டிக் கொண்டால் அவன்பாதம்
அடைவாய் சுகம் பெலன் யாவும்
இன்றே நாடிச் செல்லுவாயே
ஏற்றுக் கொள்ள முக்தேசன் உண்டே!
"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற" என்ற இராமலிங்க சுவாமிகளின் அருட்பாவின் அடிப்படையில், ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் பர்ஹைட் என்ற இடத்தில் இருந்த போது, 14-03-1987-ல் எழுதினேன்:
17 ஓர் வேண்டுதல்
ஓர்மனம் வேண்டும், உண்மைவேண்டும் உன்னை என்றும்
உத்தமமாய்ப் பின்பற்றும் மனதும் வேண்டும்
உறவு வேண்டும் உண்மையாய்த் தொழும் பக்தரொடு
உள்ளன்பு வேண்டும், உன் அன்பில் நிலைநிற்கும் கிருபைவேண்டும்
தாழ்மைவேண்டும் தான் எனும் தன்மை நீங்கித் தற்பரனே
தரணியில் நின்திருத் தொண்டு செய்ய தரவேண்டும் நின்னருளே
எளிமை வேண்டும் எனது என்ற எண்ணம் நீங்கி ஈசனே நின்
அருள்கொண்டு இப்புவியில் வாழவேண்டும்
புகழவேண்டும் பொழுதெல்லாம் நின்திருப்புகழ்பாடி
ஒழுகவேண்டும் உத்தமமாய் நின் வசனம் கொண்டு
திகழவேண்டும் தேவனே மெய்சாட்சியாக
அருளவேண்டும் ஐயா--அத்தகைய வாழ்வு என்றும்.
பொதுவாக சமையல் செய்துகொண்டிருக்கும்போது ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பது வழக்கம். அதுபோல் 07-04-19870௭-0௪-௧௯௮௭-ல் (பர்ஹைட், ஜார்கண்ட்) Gefforey T. Bull எழுதிய “When the Iorn Gates Yields " என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் எழுதிய ஒருகவிதையின் இரண்டு அடிகள்* (What heart....My Lord) என் மனதை ஆழமாகத் தொட்டன. உடனே சமயல் செய்வதை நிறுத்தி விட்டு, பத்து நிமிடங்களில் இப்பாடலை எழுதினேன்:
18 தூங்கிவிட்டேன் ஐயா
தூங்கிவிட்டேன் ஐயா சீடரைப் போலவே
தோட்டத்திலே நீ கலங்கி புலம்பிடும் வேளையில்
நாட்டம் கொண்டேனையா நன்மைகள் பெற்றிட
வாட்டம் கொண்டேனே சிலுவை வருந்தியே சுமக்க--தூங்கி....
அனுதினம் நாடினேன் ஐயா உன் கிருபை
அவனியின் வாழ்விது அமைதியுடன் செல்ல
ஆயினும் மறுத்தேனே அழைப்பினை ஏற்க
அன்றாடம் உனக்காய்ப் பாடுகள் சகிக்க--தூங்கி....
எத்தனை நன்மைகள் என்வாழ்வில் ஈந்தாய்
எண்ணினால் மாளாது ஏராளம் ஏராளம்
அத்தனை பெற்ற நான் ஆனாலும் மறுத்தேன்
ஐயனே உன்பாரம் சுமப்பதை வெறுத்தேன்--தூங்கி....
பக்தனைப் போலவே சிலுவையும் சுமப்பேனோ
மலையப்பன் போலவே மறுத்தேதான் நடப்பேனோ?
என்னாலே ஆகாது உன்பாரம் சுமக்க
முக்தேசனே அருளும் பாடுகள் சகிக்க--தூங்கி....
என்நுகம் இனிது ஏற்கவும் எளிது
என்றேதான் அழைத்தீரே ஈசனே வந்தேன்
சொல்லியே தாரும் சுமந்திட நாளும்
சோர்வுற்ற என்னைக் கிருபையால் காரும்--தூங்கி....
சிமியோனைப் போலவே சிலுவையும் சுமப்பேனோ
சீமோனைப் போலவே மறுத்தேதான் நடப்பேனோ
*O Lord, I have not learnt to cry; Perhaps I lough too oft, for true conformity;
To Tee and Thy rough Cross, or try; To love Thee without sorrowing—
Talk but touch not, thus they heed not. What heart, O Lord, moved through the garden?
I too have slept, but wake me Lord, E’n though it be to love with tears—Geoffery T. Bull.
இப்பாடலை 1980-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக பெரிய மலைக்குச் சென்றபோது, வெளியே உலவச் சென்றேன். அப்போது “பால் நினைந்து ஊட்டும்" என்ற மாணிக்க வாசகரின் பாடலை பாடியபடியே நடந்தேன். உடனே அதே பண்ணில் இப்பாடலை எழுதினேன்:
19 உன்னை விடேன்
அழுகின்ற குழவியை நினைந்து வந்து
அமுதம் அளித்திடும் அன்னையினும்
அமைதியில்லா என்மனதில்
ஆன்ம ஓளியைத் தந்தவனே
உலகின் பலவழி நான் சென்றும்
உணர்ந்திட முடியா பேரருளை
உனதன்பின் கருணையினால்
ஊற்றி என்னுள் தந்தவனே
எங்கு நான் இனிச் சென்றிடுவேன்
எவரின் திருவடி அண்டிடுவேன்
என்னுள் வந்த முக்தேசனே நின்
திருவடி தன்னை என்றும் விடேன்.
இப்பாடலை பிலிப்பியர் இரண்டாம் அதிகாரம் ௬-௧0 வசனங்களை அடிப்படையாக கொண்டு, புன்னாகவராளி இராகத்தில், 26-06-1987-ல் பீஹாரில், மதுபனியில் இருக்கும் போது எழுதியது:
20 தாழ்மை உருவெடுத்த பண்பு
எங்கும் நிறைந்த பரம் பொருளே
அவர் ஏகசுதனாய் வந்த அருளே
பொங்கும் காதலினால் புவியின் மாந்தரையே
புரக்க தனை ஈந்தே அருளே
தேவ மஹிமையுடன் வாழ்ந்தாய்
அந்த மேன்மை தனை எதற்காய் ஈந்தாய்
ஈனப்பாவியாம் என்னை மீட்கவே எண்ணம் கொண்டு
இத்தரை மீதினிற்கே வந்தாய்
தானே தனை அளித்த அன்பு, ஆகா
தாழ்மை உருவெடுத்த பண்பு
மனு உருவெடுத்து மஹிமைதனை வெறுத்து
மாந்தரை மீட்க வந்த மாண்பு
தானே தனைத் தாழ்த்தி ஈந்தாய்
தந்தை தன்சித்தம் ஒன்றே நிறைவேற
மாகோரமான அந்த ஈன மரணபரியந்தம்
கீழ்ப்படிந்த மகனாய் வாழ்ந்தாய்
ஆதலால் தேவன் உன்னை உயர்த்தி, இங்கு
அருளினாரே அந்த மேன்மை
வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோரும்
வணங்கி என்றும் உன்னைப் பணிய!
இப்பாடலை 23-06-1987-அன்று மதுபனியில் (பீஹார்) எழுதினேன்:
21 கிருபை தேவை
தேவை இன்னும் கிருபை தேவை
தேவனே உன் கிருபை தேவை
தேற்றி என்னை காத்து நடத்த
தினமும் தேவை அதிகம் தேவை
என்பெலனை நம்பி வாழ
ஏதும் நன்மை என்னில் இல்லை
ஏது செய்வேன் வழியும் இல்லை
ஏற்று நடத்தும் கிருபை தேவை
கடந்து வந்த பாதை முழுதும்
காடி போன்ற கசந்த வாழ்க்கை
கணநேரம் இதில் அமைதி இல்லை
காத்து நடத்தும் கிருபை தேவை
கடினமே இவ்வுலக வாழ்க்கை
கொண்டு செலுத்த பெலனும் இல்லை
காற்றும் மழையும் வீசியடிக்க
கடந்து செல்ல கிருபை தேவை
Thursday, September 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment