திருமணவாழ்வு, பாலுணர்வு என்பவை எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஆனால் பலரது வாழ்வில் சில தவிர்க்கமுடியாத காரணங்களால், அவை மறுக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இதை உணராத சிலர் அவர்களின் உடல் தேவையை குறித்து (கேலியாக) கேள்விகள் கேட்பது சரியல்ல என்பது என்கருத்து. இதைப்பற்றி எண்ணியபோது எழுதிய பாடல்:
80. பத்தியம்
அடங்கி ஓட முயலுகின்றோம்
ஆகாதவராய் உலகில் போகாதபடி
ஆர்பரிக்கும் எங்கள் உணர்ச்சிகளை
அர்பணிக்க முயலுகின்றோம்
மாமிச உடலின் தேவையெல்லாம்
மானிட வாழ்வில் அவசியமே
ஆனால் "மனித" வாழ்வின் ஓட்டத்தில்
"மாமிச" சிந்தைகள் தீமைகளே
உணர்ச்சியே இல்லா வாழ்வென்பது
உப்பே இல்லா உணவுகளாம்
ஆனால் "பத்தியம்" என்பது சிலருக்குப்
பாங்காய் அமைந்த நியமங்களாம்
பலரின் வாழ்வின் நன்மைக்காய்
சிலரது தியாகங்கள் தேவைகளே
அதன் பலனை உலகில் காணும்போது
தோன்றும் உன்னத உணர்வுகளே!
ஈரோடு (தமிழ் நாடு), ௨௨-0௧-௧௯௯௭
ஏதோ ஒருதேடுதல் உள்ளில் இருந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறித்து சிந்தித்த போது எழுதிய பாடல்:
81. தேடுதல்
ஏதோ ஒன்றைத் தேட
எத்தனிக்கும் போதினிலே
என்னுள் நான் மூழ்கி
ஏமாந்து போனேனே
தேடியது எதுவென்று
தெளிவாய்த் தெரியவில்லை
தொலைந்தது பொருளல்ல
நானே என்பதனால்
மூழ்கிய போதெல்லாம்
மூச்சுத் திணறியதால்
மீண்டும் மேல் வந்தேன்
சற்றே இளைப்பாற
ஆனால் வெளிஉலகின்
அவலங்கள் எனைத்தாக்க
மீண்டும் மூழ்கினேன்
மூச்சே திணறினாலும்
இழுபறியாய் போராட்டம்
என்னுள் தொடர்ந்திடவே
தேடியதும் கிடைக்கவில்லை
தேறுதலும் பெறவில்லை
(இறக்கவும் இயலவில்லை
இளைப்பாறுதல் பெறவுமில்லை)
பொகரா, நேபாள். 06-02-1997
இன்று “சுயநீதி”, குற்றம் காணுதல் போன்ற சில கருத்துக்களைப் பற்றி சிலருடன் பேசியபின் எழுதிய பாடல்:
82. நீதி
உள்ளத்தில் உண்மை உள்ளவனை
உலகினில் இதுவரை காணவில்லை
போடுவெதெல்லாம் வெளிவேஷம்
உள்ளத்தின் நிலையோ பரிதாபம்
"தன்வரை உண்மை உள்ளவனாய்
தரணியில் நீயும் வாழ்ந்துவிடு"
தத்துவம் கூறுவார் தாராளமாய்
ஆனால் தடுமாறுவார் தன்வரையில்
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி"*
கூறினான் கவிஞ்ஞன் வார்த்தையிலே
குணமறியாத மனிதருக்கே
"தன்வரை நீதி" என்பதெல்லாம்
"சுயநீதியாய்ப்" போனதிங்கே
எடுத்துக் கூறியே என்னபயன்
எல்லாம் பொய்யாய் போனபின்னே
ஆயினும் மனதுள் புலம்புகிறேன்
அது என் “நீதி" ஆனதினால்!
* இவை கவிஞ்ஞர் கண்ணதாசனின் வரிகள்.
பொகரா, நேபாள். 06-02-1997.
சிலசமயம் மனதுடன், மனிதருடன் உள்ள போராட்டங்களை எண்ணிப்பார்க்கும்போது, அவறிலிருந்து எனக்கு என்று விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் எழுதிய பாடல்:
83. போர்க்களம்
எனக்கோர் விடுதலை வேண்டும்
அதுவும் என்னிடமிருந்தே வேண்டும்
நிலை தடுமாறும் உலகவாழ்வில்
நீந்திக் கரைசேர வேண்டும்
சிந்தையில் சிறைப்பட்ட ஆன்மா
தன் சுதந்திரம் பெறவேண்டும்
தேகத்தில் சிறைப்பட்ட சிந்தை
தன் சீர்பெற்று வாழவேண்டும்
புலன்கள் பொறியிடம் தோற்க
மனதும் புலன்களை ஏய்க்க
சிந்தையும் சிலமுறை தடுமாற
செயலிழந்ததே என் ஆன்மா
ஒன்றுடன் ஒன்று மோத
ஓயாத போர்க்களமானதே
வென்றது யாருமே இல்லை
இங்கு வீழ்ந்ததால் அனைவரும் ஒன்றாய்!
பொக்கரா, நேபாள். 09-02-1997.
பக்தி, நம்பிக்கை, ஆன்மீகம், சன்மார்க்கம் என பல நிலைகள் இருந்தாலும், மனித வாழ்வு பெரும் போராட்டமாகவே உள்ளது. பல சமயம் வாழும் வாழ்வில் அர்தமே இல்லாததுபோல் தோன்றுகின்றது. "எங்கே வாழ்க்கை தொடங்கும்; அது எங்கே எவ்விதம் முடியும்; இதுதான் பாதை, இதுதான் பயணம்; என்பது யாருக்கும் தெரியாது" என்ற கவிஞ்ஞர் கண்ணதாசனின் வரிகள் மிகவும் நிதர்சனமாக உள்ளது. இதைப்பறி எண்ணியபோது எழுதிய பாடல்:
84. நம் கதை
முடிவே இல்லா தொடர்கதை
வாழ்வு முடிவில்லாத சிறுகதை
தொடங்கி வைத்த இறைவனுக்கே
முடித்து வைக்கத் தெரியவில்லை
ஆயிரம் ஆண்டாய் தொடர்ந்துவரும்
அர்த்தமற்ற பெரும் கதை
ஆனால் அதன் பாத்திரமெல்லாம்
அறியவில்லை தம் நிலை
தோன்றி வாழ்ந்து மறைந்துவிட்ட
சரித்திரம் இதனிடை ஆயிரம்
தொடர்ந்து செல்லும் இதின் எல்லை
தெரிந்தவர் இங்கு யாரும் இல்லை
வாழ்வின் எல்லையை அடைந்தவர்கள்
"வெறுமை" என்றார் இதன்நிலை
ஆனால் "வாழ்க்கை வாழ்வதற்கே" என்றார்
புதிதாய்த் தோன்றிய தலைமுறை
உண்மை நிலை இதில் என்ன?
உள்ளபடி நான் அறியவில்லை
ஆயினும் வாழ்வைத் தவிர்க்க இயலவில்லை
அதனால் நானும் வாழுகின்றேன்
உன் சித்தம் என்றே எண்ணுவதோ
இல்லை லீலை என்றே சொல்லுவதோ
இறைவா என் கேள்விக்கே
இதுவரை உன்னிடம் பதில் இல்லை.
16-03-1997, மதுபனி, பீஹார்.
"உடலின் தேவைகள் ஏன் மனதிற்கு முழுமையான சுகத்தை தருவதில்லை? அவற்றை பெரும்முன் மனதிலும், சரீரத்திலும் பலவிதப் போராட்டங்கள். ஆனால் அவற்றை பெற்றபின் ஒருவித ஏமாற்றமே ஏற்பட, மீண்டும் அவற்றை வேறு வகைகளில் தேட முயலுகின்றோம். ஆனால் இப்போராட்டத்திற்கு உயிர் உள்ளவரை முடிவே இல்லை", என்பது குறித்து கேஷ்வ் மிஸ்ராவின் கிராமத்தில் (கெகரஹா, ரீவா, ம.பி) சிலருடன் பேசிய பின் எழுதிய பாடல்.
85. ஏமாற்றம்
அன்றாட வாழ்வு ஒரு போராட்டம்
அதனிடை எண்ண கொண்டாட்டம்
மன்றாடும் மனதினை வென்றேக முடியாத
மனிதா உன்பாடு பெரும் திண்டாட்டம்
பொய்யை மெய்யென்று எண்ணி
போகமே வாழ்வென்று நம்பி
மாயைபின் ஓடிடும் மனிதா உன்
மதிகெட்ட நிலை என்ன சொல்ல?
அனுபவிக்கும் முன் எத்தனை ஆத்திரம்
அடைந்தபின்னோ பெரும் ஏமாற்றம்
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத
கேவலமான ஒரு போராட்டம்
அறிந்த பின் அவைபின்னே ஓடும்
உன அவலத்தின் நிலையை எண்ணி
போக்கிரி என்றே ஒதுங்கவோ
பேதை என்றே புலம்பவோ?
23-03-1997.
"மனதை எவ்வாறு அடக்குவது" என்பது என்னிடம் பலமுறை பலரால் கேட்கப்படும் கேள்வி. பலவித எண்ணங்களால் அலைகழிகப்பட்டு ஆன்மாவில் நிம்மதியே இல்லை! ஆனால் இப்போராட்டங்களுக்கு இருப்பிடம் எது? மனமா, அறிவா, மூளையா, இதயமா, ஆன்மாவா? போன்றவை குறித்து கேஷவ் மற்றும் சிலருடன் பேசியபின் எழுதிய பாடல்:
86. விடுதலை உண்டு
உள்ளமே நீ கலங்காதே
உண்டு உனக்கு ஓர் விடுதலை
ஓயாத அலைபோல் ஆயிரம்
எண்ணங்கள் உன்னில் தோன்றினும்
கரை மோதி மீண்டுமே
கடல் திரும்பும் அலைபோல
மனம் மோதி மீண்டுமே
மொளனமாகும் உன்னிலே
அலைபோடும் இறைச்சலில்
அண்டிடாமல் உறுதியாய்
மனம் கூறும் வார்த்தையை
மொளனமாக தியானித்தால்
உள்ளமே நீ உணருவாய்
உண்மையான அமைதியை
உள்ளமே என்ன கூறுவேன்?
உள்ள படிநான் அறிந்தவரை
மனம்வேறு நீவேறல்ல
மதிமயங்கிய காரணத்தால்
உண்மையினை அறிந்தபின்னும்
உளறிவிட்டேன் வார்த்தையில்
மதிமயக்கம் என்பதும்
மனமே இங்கு வேறல்ல
அலைகள் போடும் இரைச்சலில்
அரண்டுவிட்ட ஆன்மாவின்
இருண்டுவிட்ட நிலையின்
எதிரொளியே ஆகுமே!
23-07-1997. கெகரஹா (ரீவா, ம.பி)
டில்லியில் ஒரு சீடனுடன் (வீரேந்தர் மிஸ்ரா?) சில காரியம் குறித்து பேசியபோது, "முயன்றால் முடியாத செயல் என்று ஒன்று இல்லை" என்பது குறித்து கூறியபின் எழுதிய பாடல்
87. முன்னேறு
முடியாதென்பது
முடிவானால்
முடிந்தவரையில்
முன்னேறு
தடுமாறிவிடும்
போதெல்லாம்
திகைத்திடாமல்
தொடர்ந்துவிடு
முழுமையாய்
வாழ்ந்தவர்கள்
உலகில் எங்கும்
கிடையாது
அதனால் நம்
வாழ்வினிலும்
அரைகுறை
என்பது கிடையாது
முடியாதென்பதும்
முடிவல்ல-அது
மனதின் சுய
பரிதாபம்
ஆனால் அதனை
ஏற்காமல்
முன்னேற நீ
முயன்றுவிடு
19-04-1997.
என்சீடன் (மணிஐயர், வாலாஜா பேட்டை) ஒருவனுக்கு கடிதம் எழுதும் இயல்பே கிடயாது. பல கடிதங்கள் எழுதியும், ஒரு கடிதமும் அவனிடமிருந்து வராததால் பின் வரும் பாடலையே ஒரு கடிதமாக எழுதி அனுப்பினேன்.
88. ஓர் களைப்பு
எழுதி எழுதியே களைத்துவிட்டேன்
எனதரும் நண்பா உனக்கே நான்
என்ன செய்வது பின் நினைவுவந்தது
ஒன்று உன்னிடம் இல்லை என்பது
அதை அனுப்ப இயலாததால் நான்
மீண்டும் ஒருமுறை துணிவுகொண்டே
எழுதுகிறேன் இக்கடிதம் இங்கு
காகிதம் எழுதுகோல் இருந்திட்டாலும்
ஒன்று நிச்சயம் தேவை உனக்கு
காசு கொடுத்தே வாங்கிவிட
அது கடையில் கிடைக்கும் பொருளல்ல
"கரிசனை" என்மீது இருக்குமானால்
எடுத்துவிடு உன் எழுதுகோலை
தொடுத்துவிடு உன் மடலை இன்று.
14-05-1997. ஈரோடு.
நன்மை செய்யத்தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருப்பது சரியல்ல. தீமை செய்யாவிட்டாலும் அது நடக்கும்போது தட்டிக்கேட்காமல் இருப்பது அதற்கு மறைமுகமாக துணைபோவதாகும். இதனிடைய நடக்கும் நம் மனப்போராட்டத்தை எண்ணியபோது எழுதிய பாடல்
89. என்ன செய்ய?
வந்து போகின்ற வாழ்வினிலே
வாழ்ந்தாக வேண்டுமே இடையினிலே
நன்று-தீது தினம் நாம் பார்த்தால்
"நாளும்" செல்லாது உண்மையிலே
என்ன செய்வது இதனிடையே
என்பதே நம் மனப்போராட்டமே
நன்மை செய்ய நாம் மறுத்தால்
அமைதி இல்லை நம்மனதில்
தீமை செய்வதை நாம் எதிர்த்தால்
தனித்தே நிற்போம் சமூகத்தில்
நன்மையோ தீமையோ ஆனாலும்
நாளும் வாழும் வாழ்வினிலே
தீமையை வெறுத்து நன்மை செய்ய
முடிந்தவரையில் முயன்றிடுவோம்
ஈரோடு, 20-06-1997
நான் ஒரு கவிஞ்ஞன் அல்ல. ஆனால் என் எண்ணங்களை எழுதுக்களாக வடிப்பது எனகு ஒரு தவிர்க்க முடியாத நிர்பந்தமாகி விட்டது. எனவே என்பார்வையில் கவிஞ்ஞன் யார் என்று எணிய போது எழுதிய பாடல்:
90. கவிஞ்ஞன்
எண்ணங்களை வண்ணங்களாக்கி
எழுத்துக்களை வடிவங்களாக்கி
கருத்துக்களை கவிதையாக்கி
வடிப்பவனே கவிஞ்ஞன் ஆவான்
உணர்ச்சிகளின் பிழம்பாய் மாறி
உள்ளூரும் எண்ணங்களை
வெளிப்படுத்த முயலும்போது
வெடிப்பவையே கவிதையாகும்
உணர்வு இல்லா மனிதனே
உலகத்தில் எங்கும் இல்லை
அதை உணர்ச்சியின் வடிகாலாக்கி
ஊற்றுவதே கவிதையாகும்
உலகத்தின் உணர்வுகலெல்லாம்
உருண்டோடும் வாய்க்காலாக்கி
கருத்துக்களை வடித்துக்காட்டும்
கலைஞ்ஞனே கவிஞ்ஞனாவான்
16-09-1997. லக்னோ
பொறுமை எல்லாவற்றிற்கும் மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனைகளும், போராட்டங்களும் எப்படி கொஞ்ஞம் கொஞ்ஞமாக சேர்த்தோமோ, அதுபோல் அவை மெல்ல மெல்லத் தான் மறையும். அதற்கு முக்கியம் வேண்டியது பொறுமை. இதைக்குறித்து ஒரு வாலிபனுடன் பேசிய பின் எழுதிய பாடல்:
91. அவசரம் கூடாது
உள்ளான மாறுதல்
ஓர்நாளில் வாராது
உன்மனதின் போராட்டம்
உடனடியாய் மறையாது
மெள்ள மெள்ள நீசேர்த்த
எல்லா சோதனையும்
மெதுவாகத்தான் மறையும்
அவசரம் இதில் கூடாது
வீசிய காற்றினிலே
வீழ்ந்தது துணி முள்மீது
வேகமாய் எடுத்தாலோ
வீணாவது நிச்சயமே
பொறுமை என்பதுவோ
புண்நீக்கும் நல்மருந்து
ஆனால் அதன்செயலோ
அமைதியாத்தான் நடக்கும்.
சென்னை. 02-01-1998.
வருடா வருடம் கொடைக்கானலில் ஆஸ்ரமத்தில் தங்கியபின் போகும்போது நம் எண்ணங்களை ஆஸ்ரம நோட்டில் எழுதவேண்டும். இவ்வாண்டு இப்பாடலை எழுதிவைத்தேன்
92. நன்றி கோடி
ஆண்டுதோறும் இங்கு வந்தாலும்
அனுபவம் என்னவோ புதியதே
இயற்கை அன்னையின் அரவணைப்பும்
இனிய உங்கள் உபசரிப்பும்
என்றும் இங்கேயே தங்கிவிட
ஏங்க வைக்கும் எங்களையே
ஆயினும் கீழே சமவெளியில்
ஆயிரம் பணிகள் செய்திட்டவே
போகவேண்டி காரணத்தால்
விடை இப்போது பெற்றாலும்
மீண்டும் இங்கு வரும்வரை
ஏந்திச் செல்கின்றோம் நினைவுகளை
அடுத்த ஆண்டு காணும்வரை
ஐயனின் அருளும் கூடவர
வேண்டி நிற்கும் எங்களையே
ஆசிகூறி அனுப்பும் உங்கள்
நேசமான உளத்திற்கு
நன்றி கூறுகிறோம் பலகோடி
25-05-1998. கொடைக்கானல்.
சிலசமயம் எண்ணங்கள் பெருக்கெடுதாலும் கவிதையாக எழுத வார்த்தையே கிடைக்காது. அப்படி ஒரு வறட்சியான சமயம் எழுதிய பாடல்
93. வற்றாத ஊற்று
கவிதை வரவில்லை
கருத்தும் எழவில்லை
கற்பனை வரண்டுபோக
காலம் செல்வதும் ஏன்?
முழு வாழ்வையுமே
மொத்தமாக ஓர் நாளில்
வாழ்ந்திட முடியாது
உலகின் நடப்பேஇது
எண்ணத்தின் ஓட்டமுமே
எத்தனை இருந்தாலும்
கண்மூடும் நேரத்தில்
கவிதை அவையாகாது
உள் ஊறும் உணர்வுகள்
ஊற்றாகப் பாய்ந்தோட
எண்ணத்தை சொல்லாக்கி
எழுதுவதே கவிதையாகும்
உணர்வென்னும் ஊற்று
ஒருகாலும் வற்றாது
அதை உணராதபோதே
சொல்லேதும் வாராது!
ஈரோடு. 15-06-1998.
குங்குமம் வாரப்பத்திரிக்கையில் நடிகர் சிவாஜி கணேசன், "கண்ணதாசனையும் மிஞ்சிவிட்டார் வைரமுத்து" என்று கூறிய வார்த்தைகளைத் தொலைக்காட்சியில் கேட்டவுடன், என்போன்ற பல கண்ணதாசனின் அபிமானிகள் வெகுண்டெழுந்தனர். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசனுக்கு இணையன ஒரு கவிஞ்ஞன் அவர் சமகாலத்தில் கிடையாது. எனவே சிவாஜி கணேசனுக்கு என் எதிர்ப்பை காட்ட எழுதிய பாடல்:
94. ஊர்க்குருவி பருந்தாகுமோ
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமோ?
ஓராயிரம் கவிஞ்ஞர் வந்தாலும்
ஓர் கண்ணதாசனுக்கு ஈடாகுமோ
வைரம் "முத்தாக" வாரியிறைத்தாலும்
வகைப்படுத்தினால் அவைகளையே
செயற்கை "முத்தான" சொற்களினால்
செய்த போலி "வைர" மாலையே
சொல்லின் நயத்தால் வண்ணம் காட்டியே
சிந்தை நிறைந்த கவிவேந்தனின்
கால்தூசியாகுமோ பிறர் பாடலுமே!
செய்நன்றி மறந்த சிவாஜிகணேசனே
உன்நடிப்பு சற்றே மிகையானாலும்
உலகம் மறந்திடும் ஓர்நாளிலே
காலம் காலமாய் மக்கள் மனதிலே
கோலோச்சுவான் கவியரசு கண்ணதாசனே!
19-06-1998. ஈரோடு.
மீண்டும் ஒரு கவிதை வறட்சி ஏற்பட்ட போது எழுதிய பாடல்:
95. ஓர் வறட்சி
உணர்ச்சிகள் உறைந்து போனதால்
உணர்வுகள் இருண்டு போனதே
உணர்வுகள் இருண்டு போனதால்
கற்பனை வறண்டு போனதே
கற்பனை வறண்டு போனதால்
சொற்களும் தொலைந்து போனதே
சொற்களும் தொலைந்து போனதால்
எண்ணங்கள் தேங்கிப் போனதே
எண்ணங்கள் தேங்கிப் போனதால்
எழுத்துக்கள் உலர்ந்து போனதே
எழுத்துக்கள் உலர்ந்து போனதால்
என்னுள் வறட்சி வந்ததே
என்னுள் வறட்சி வந்ததால்
ஏதுமே எழுத இயலவில்லை.
10-10-1998. மஹரி (ரீவா. ம.பி.)
இந்நாட்களில் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அதிகமாக பயணம் செய்துகொண்டும், அதிகமாக படித்துக் கொண்டும் இருந்தேன். அப்போது எழுதிய பாடல்:
96. புரியவில்லை
வேடிக்கையான உலகினிலே
விந்தையான இவ் வாழ்வினிலே
ஓடித் தேடியும் உண்மை சுகம்
ஒன்றையும் இதுவரை காணவில்லை!
படிக்கும் ஆயிரம் புத்தகங்கள்
பலப்பல கருத்தைக் கூறுவதால்
உண்மை அதில் என்னவென்று
உறுதியாய் நான் அறியவில்லை
பல ஆயிரம் மைல்கள் நான்
பயணம் செய்து பார்த்த போதும்
நிலையாக வாழவென்று ஓர்
நிரந்திர இடம் பார்க்கவில்லை
கருத்துக்களை பரிமாற, கவனமாய்
என்னை உபசரிக்க, நண்பர்கள் பலர்
இருந்தாலும், ஒருமித்த மனம் கொண்ட
உண்மை நண்பனை அடையவில்லை
சரீர சுகம் என்னவென்று
சரியாய் இன்னும் அறியாததால்
கற்பனையில் நான் காணும் சுகம்
சொப்பனமாய் இன்னும் புரியவில்லை
ஏதோ ஒன்றை நான் தேடி
இன்றும் ஓடும் ஓட்டத்திலே
எத்தனை நாட்கள் இன்னும் ஓடுவது
இறைவா ஒன்றும் புரியவில்லை
அலகாபாத். 22-10-1998
Tuesday, September 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment