Saturday, September 17, 2011

27-07-1998-ல் மதுபனியில், அந்நேரம் சந்தித்த சில பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதிய பாடல்:

22. பரிவு காட்டு

நொந்து நொந்தே சமூகம் வந்தேனையா
நோக்கிப்பார் ஏழை என்னை நீயே
ஏதுசெய்வேன் வழி வேறேதும் இல்லை
முக்தேசனே நீயன்றி கதிவேறில்லை
புரிந்திட மறுத்தாராம் பேதை என்நிலை
புகலிடம் எனக்கினி மாந்தரிடம் இல்லை
போதும் ஐயோ இனிவேண்டாம் வீண்தொல்லை
புனிதனே நீயன்றோ ஆறுதலின் எல்லை
நம்பியே இனிநான் யாரிடம் கூறுவேன்
நான்கொண்ட மன பாரங்கள் யாவையும்
நண்பரோ அன்பரோ காணேன் இதுவரை
நாதனே உன்போல் என்நிலை புரிந்தோரை
யாதொரு குறையும் அவர்மீது நான்கூறேன்
யாவரும் என்போலே பாடுள்ள மனிதரே
ஆயினும் அவர்மூலம் நீகாட்டும் பரிவினை
அருளிடு அடியேனுக்கு மீண்டும் ஒருமுறை

சாத்தால் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தபோது, 11-04-1990 அன்று கதா உபனிஷத் படித்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக ஸ்லோகம் ௧.௨.௯-க்கு வியாக்யானத்தில் "Only an enlightened soul alone can enlighten other" என்ற வரிகள் என்மனதை ஆழமாகத் தொட்டன. உடனே இப்பாடலை, சங்கீதம் 119:105-ன் அடிப்படையில் எழுதினேன்:

23. எரிகின்ற தீபம்

எரிகின்ற தீபமே ஏற்றிடும் மறுதீபம்
என்பதே வாழ்க்கையில் உண்மையும் ஆனதால்
எவ்வளவு கற்றுமே என்னுளம் ஆவியால்
ஏற்றிய தீபமாய் ஒளிதனைப் பெற்றிடேல்
கற்ற என்கல்வியால் கண்டிலேன் பயனெதும்
கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்
மதியிருந்தும் மூடனாய், மனதினில் ஏழையாய்
அகமதில் நீயன்றி ஐயனே வெறுமையாய்
வாழ்ந்திடும் வாழ்க்கையில் வளம்குன்றி வறியனாய்
புவிக்குப் பாரமாய், பொழுதெல்லாம் வீணுமாய்
கழிந்திடும் காலத்தில் கல்லறை ஏகியே
காரிருள் அடையுமுன் காத்திடும் முக்தேசனே
எரிகின்ற தீபமாய் இளங்கிடும் நின்வார்த்தையால்
இறங்கிடும் இவ்வேழைக்கு இவ்வுலக வாழ்க்கையில்
அருள்கொண்டு ஐய்யனே அண்டிடும் அடியனுக்கு
அருளிடும் நின்வார்த்தையே அணைந்திடா தீபமாய்.

சாத்தால் ஆஸ்ரமத்தில் பக்தியைக் குறித்து படித்து, பேசி, சிந்தித்த நாட்களில், 25-11-1990 அன்று எழுதிய பாடல். இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று:

24. பக்தர்க்குத் தஞ்சமே

தாயும் நீ தந்தை நீ
தலைவன் நீ தஞ்சம் நீ
ஆருயிர் நண்பன் நீ
அணைத்திடும் தமையன் நீ
நேசத்து மையம் நீ
நெஞ்சத்து உணர்வையெல்லாம்
பாசமாய்க் கொள்ளை கொள்ளும்
பதியும் நீ என்னுயிர்க்கே

நெக்குருகி உளம் கனிந்து
நெஞ்சம் தழை தழைக்க
பக்திப் பரவசமாய்
பண்ணெடுத்து பாடும்கால்
பரனே பரம்பொருளே
பராபரனே மெய்ச்சுடரே
பரமானந்த ஜோதியே
பக்தர்க்குத் தஞ்சமே

ஏதுமொழி நான்கண்டேன்
என் ஐயா உனைப்போற்ற
ஏங்கிடும் ஏழை என்
உள்ளத்து உணர்வுகளை
எப்பாங்கில் எடுத்துரைப்பேன்
என் உளம்நீ அறியாயோ?
என்றென்றும் இருக்கின்ற
இறையே என்தலைவா

ஆனந்தக் கண்ணீரால்
அகம்கழுவி மெய்மறந்து
காதல் வசப்பட்ட
காரிகையும் போலாகி
நேசர் முகம்தேடி
நித்தம் உனைநாடி
கையளித்தேன் என்னையுமே
காத்திடுவாய் பொற்பாதம் தஞ்சம்

உள்ளம் உனில் கரைய
உரோமம் சிலிர்த்தோங்க
கண்ணில் நீர்சொறிய
கரங்குவித்தே அடிபணிந்து
தஞ்சம் எனவந்தேன்
தாயேநின் சேய் நான்
தரணியில் காணேனே
திருவடியன்றி ஓர்புகலிடமே!

05-12-1990 அன்று சாத்தால் ஆஸ்ரமத்தில் துக்காராம் கவிதைகளை படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றின் கருத்தால் தூண்டப்பெற்று எழுதிய இரண்டு பாடல்கள்:

25. இறையறியா ஞானம்

பதரை உரலிலிட்டு
பலமுறை குத்தினாலும்
ஓர்மணி அரிசிதான்
உமக்கவை தந்திடுமோ?
எவ்வளவு காற்றாலும்
இறையறியா உன்ஞானம்
மணியற்ற சாவிதானே
மனதில்நீ கொண்டிடுவாய்.

26. கையளித்தேன்

கடந்த காலம் திரும்பிடாது
கருத்தில் கொண்டேன்
கடந்துபோகும் உலகத்தின்
வேஷம் கண்டேன்
கண்டகாட்சி கொண்டகோலம்
கடிதில் மறைய
கணப்பொழுதும் கையளிக்கேன்
மாயைக்கென்னை
எதிர்காலம் எப்படியோ
என்ற எண்ணம்
என்னுள்ளே என்றென்றும்
அலையாய் மோத
என்திறனை முற்றாக
சார்ந்தே நிற்க
இழந்தேனே இன்றுள்ள
அமைதி தன்னை
இறந்தகாலம் எதிர்காலம்
இரண்டையுமே
இன்றே கையளித்தேன்
இறைவன் பாதம்
இமைப்பொழுதில் என்னுள்ளம்
மகிழ்ந்து ஆங்கே
ஏற்றிப் புகழ்ந்தது
அவனின் நாமம்!

17-12-1990 அன்று சாத்தால் ஆஸ்ரமத்தில் மாலையில் உலவச் சென்றபோது, அதிகமாக இறைவன், அவனை எவ்விதத்திலும் அறியமுடியாத்தன்மை, எந்த மனித மொழியிலும் விவரிக்கமுடியாமை இவையே என் சிந்தையை வெகுவாக ஆட்கொண்டிருந்தது. அன்று என் நாட்குறிப்பில் இந்நாளின் அனுபவத்தை விபரமாக எழுதிய பிறகு, நடு இரவில் மீண்டுமாக அவற்றை சிந்தித்த போது எழுதிய பாடல். (பல சமயம் படுக்கையிலேயே, நோட்டு மற்றும் பேனா வைத்துக் கொள்வேன். கவிதை வரும்போது படுத்தபடியே, இருட்டில் நோட்டில் நன்றாக இடம் விட்டு எழுதுவேன்).


27. எப்படி எடுத்துறைப்பேன்

சிந்தைக்கு அடங்கோனை சொல்லினால் அறியோனை
எல்லைக்கு எட்டாது எங்கும் நிறைந்தோனை-தொல்லோனை
ஏதுமொழி கொண்டு எடுத்துரைப்பேன்--என்னை அவன்
அறிவான், அறிவேன் நானும் அவனை அவ்வண்ணமே
காலத்திற்கடங்கோனை கருத்திற்கு எட்டோனை
ஞாலத்தின் ஞானத்தால் நவின்ற இயலோனை--ஏதுமொழி கொண்டு....

ஆண் அல்ல பெண் அல்ல அருவல்ல உருவல்ல
அவனியும் அவனல்ல அவனிக்குப் புறம்பல்ல--ஏதுமொழி கொண்டு....

நானே அவனாகி நாதமும் கீதமும்போல்
ஒன்றியபின் உண்டோ ஒருபேதமுமே--ஏதுமொழி கொண்டு....


09-01-1991. இந் நாட்களின் என் மனநிலை முழுவதையும் இங்கு கூற முடியாது. ஆயினும் “உற்றாரை யான் வேண்டேன்” என்ற மாணிக்கவாசகரின் பாடலையும், “ஊரிலேன் காணி இல்லை” என்ற தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் பாசுரத்தையும் என் நாட்குறிப்பில் எழுதிய பிறகு இப்பாடலை எழுதினேன்:

28. நீயன்றி யாருளார்?

உண்டோ ஓர் உறவு உலகினிலே
உன்னையல்லால் இனி வாழ்வினிலே
நன்றே காணேன் நானிலத்தே
நாதா நின்திருவடித் தஞ்சமன்றி
ஈன்றெடுத்த தாய்தான் என்ன?
பேணிவளர்த்த தந்தையும் என்ன?
சேர்ந்து வளர்ந்த சோதரர் என்ன?
தாங்கி அணைத்த சுற்றமே என்ன?
நாடிக்குலாவிய நண்பர்கள் என்ன?
நானிலத்தோர் நாளுமே நாடும்
மனைவி மக்கள் மாண்புமே என்ன?
ஏது ஒன்றும் காணேன் ஏழை
ஏங்கிடும் உள்ளத்து உணர்வினுக்கு
உற்ற ஓர் உறவாய் உலகினில்
உன் உறவு ஒன்றே பெரிதாய்
இலங்கியபின் இகத்தில் இன்னும்
பற்று ஏதும் காணேன் நானும்
பரமனே நின் பாதம் தஞ்சம்.


ஒருவிதமான மனப் போராட்டம் நிலவிய கடுமையான நாட்கள். மிகவும் "தனிமையை" உணர்ந்த நாட்கள். அதேசமயம் தனிமையை அதிகம் விரும்பிய நாட்கள். இப்பிண்ணனியில் சாத்தால் ஆஸ்ரமத்தில் "பன்னா" ஏரிக்கரையில் சென்று அமர்ந்து இறைவனோடு பேச ஆரம்பித்தபோது, மன உணர்வுகளைக் கொட்டி 18-04-1991-அன்று எழுதிய பாடல்:

29. அநாதையல்ல

தாயற்ற குழவியாய் ஆனேனோ?
தரணியில் கதியற்றுப் போனேனோ?
நோயுற்ற மனதுடனே நொந்து நொந்து
நோக்கினேன் திருவடியைச் சோர்ந்து சோர்ந்து
காயமே பட்ட திருக் கரத்தை நீட்டி
கதறிடும் ஏழையை அணைத்திடாயோ?
காரணம் வேறேதும் காட்டிடாதே
கணப்பொழுதும் இனியும் நீ தாமதியாதே!
பிணியாளிக்கல்லோ வைதியன் தேவை
பேதைக்கல்லோ உன் ஞானம் தேவை!
அறிந்தபின் இன்னும் தாமதமேனோ?
அறியாதவன் போல் வீண் தயக்கமும் ஏனோ?
நானிலத்தோர் என்மீது பழியும் கூறார்
நன்கறிவார் நான் உன் அடிமை என்று
இனிவேறு புகலிடம் எனக்கிங்கில்லை
முக்தேசனே உன்னருளன்றி வழியும் இல்லை
சோதனைக் கனுமதித்த காலம் போதும்
சோர்ந்திங்கு நிற்கும் என்கோலம் காணும்
ஏங்கிடும் ஏழைமீது இறங்கிடாயோ?
என் ஐயனே கதறலைக் கேட்டிடாயோ?
அறிந்தே செய்த பிழை அனேகம் உண்டு
அலைந்திடும் மனதின் வேகம் கொண்டு
செய்த பிழையாவையும் மன்னிப்பாயே
சேயேனை அருள்கொண்டு சேர்த்திடுவாயே
ஊறறிய உத்தமன்போல் நடித்திட்டாலும்
உள்ளான வாழ்க்கையிலோ உண்மை இல்லை
காரணமோ வேறேதும் இல்லை இல்லை
கள்ளமனம் அளித்திடுதே தொல்லை தொல்லை
பாவத்தின் கீழாக விற்றுப் போட்ட
பாழ்மனதை மீட்டெடுத்து வெற்றி நாட்ட
பாதகனுக் கிறங்கியே சிலுவை மீது
பலியான அன்பிற்கோ எல்லை ஏது?
பழிவேறு யார்மீதும் கூறேன் நானும்
பலமுறை தவறினேன் தெறிந்தேதானும்
பறிகாரம் உண்டோ வேறெங்கேனும்?
பரனே உன்னருளன்றி வழியே காணும்
நீரற்ற மேகம்போல் நிலையற்றுப் போனேனே!
நிலையற்ற கடலின் அலைபோல ஆனேனே!
திசைகெட்டுத் திரியும் தாரகை போலது
தறிகெட்டுப் போனது தீயனின் வாழ்விது!
கருமியின் கை செல்வம் நான்
காட்டினில் வீணே காய்ந்த நிலா
கடல்மீது பெய்த மழையே தான்
கனிகாணா பட்ட மரம் ஆனேன்
பாழ் நிலமதுவோ பலமுறை நீர்குடித்தும்
பயனேதும் தாராது பயிரொன்றும் முளைக்காது
முள்ளும் பூண்டுமே முளைப்பிக்கும் பூமிநான்
தீயிட்டு நிலம்திருத்த திருவே நீ வாராயோ?
மீண்டும் ஒருமுறையே மீளாத பாவத்தால்
கோரச் சிலுமையிலே கோவே உனையேற்றி
வதைத்திடும் வஞ்சகனை வள்ளளே தள்ளிடாதே
வந்தேன் நின்னடியே வற்றாத கருணையூற்றே
தாய் மறப்பாள் சேயைத் தானும்
தன் சுகமே நாடும் போது
மறப்பதில்லை நீயோ என்றும்
மகவு என்னை இமைப் பொழுதும்
"அன்னைநீ தந்தைநீ ஆருயிர்த் தலைவன்நீ
ஆதலால் இனியும்கூறேன் யாருமற்ற குழவி யென்று!!

20-11-1991 அன்று காட்மாண்டில் முழுநாள் உபவாசித்து, மெளன விரதம் இருந்து பிரார்த்தனை செய்தபோது, மனதில் பலவித எண்ணங்கள், தாக்குதல், போராட்டங்கள் உண்டாயின. என் வாழ்வில் (ஏன் பலரது வாவிலும்) இது பலமுறை ஏற்பட்ட அனுபவம். என்று பூரணமாக உபவாசித்து மெளனவிரதம் இருக்கின்றேனோ, அன்றுதான் சிந்தையில் பலவித போராட்டம் ஏற்படும். எனவே இன்றும் அத்தகைய தாக்குதல் ஏற்பட்டபோது முக்தேசனை சரணடைந்து எழுதிய பாடல்:

30. அளித்திடு வல்லமை

பெரிதே எனது பலவீனம்
புரிந்தே வந்தேன் இந்நேரம்
அறிந்த உனக்கிதை எடுத்துரைக்க
அவசியம் ஏதும் காண்கிலேன் நான்
இம்மியளவும் இடம் கொடுத்தால்
எய்கிறான் அவனோ தீகக்ணையை
எதிர்த்து நிற்கவோ ஆற்றல் இல்லை
அதனால் அண்டினேன் உன்னடியை
பலமுறை தவறி விழுந்தவன்தான்
பகரேன் பழியை யார்மீதும்
தெரிந்தே செய்தவை அத்தனையும்
திருவே அறிந்தும் தாமதம் ஏன்?
எடுத்த தீர்மானம் எத்தனையோ
எண்ணினால் கணக்கில் அடங்கிடாது
தோற்றேன் வாழ்வில் நாள்தோறும்
தேவனே கடைக்கண் அருள்தாரும்
பலவீனம் இல்லா மாந்தருமே
பாரினில் எங்கும் வாழ்ந்ததில்லை
ஆதலால் ஏற்கேன் அவருரையை
ஐயனே அண்டினேன் திருவடியை
என்நிலை நன்கு புரிந்தவன் நீ
அந்நிலை அறிந்து வாழ்ந்ததினால் (எபிரேயர். 2:18)
ஆதலால் அளித்திடு வல்லமை
அவனுடன் நாளும் போர்புரிய!

No comments: