இன்று மனதில் பலவகையானப் போராட்டம். எனவே காலையில் தியானிக்கக் கூடி முடியாமல் போயிற்று. மாலை வேதம் படிக்கும்போது, எபிரேயர் 2:1-2 வாசகங்கள் மிகவும் எச்சரிக்கையின் குரலாக வந்தன. அவற்றை நீண்டநேரம் தியானித்துக்கொண்டிருந்தபின், மிகவும் பயத்துடனும், கலக்தத்துடனும், மீதமுள்ள வாசகங்களைப் படித்தேன். அப்போது 2:18-ம் வாசகம் எனக்கு மிகவும் ஆறுதலும், தைரியம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது எழுதிய பாடல்:
31. தாங்காத பாரம்
அறிவாயே என்துன்பம் என்னவென்று
அவனியில் நீ மனிதனாய் வந்த அன்று
சோதனை இல்லாத நாளே இல்லை
சோர்வின்று மீளவோ வழியும் இல்லை
ஏதுதான் காரணம் நீயும் கொண்டாய்
இந்நிலைக் கென்னை நான் தள்ளிக்கொள்ள?
அறிவாயே பாவத்தின் அந்தகாரத்தை
ஐயனே தாங்கேனே இப்பாரத்தை
"வருந்தியே பாரம் சுமப்பவரே
வாருங்கள் என்னிடம்" என்றுரைத்த
வார்த்தையை நம்பியே வந்தேன் நானும்
வள்ளளே காணாயோ என்நிலை தானும்
துடுப்பற்ற படகுபோல் என்வாழ்வு
தொடர்பற்றுப் போனது உன்னோடு
தேடியே நீ என்னை மீட்காவிட்டால்
தொலைந்தது என்வாழ்வு இப்புவியோடு
நீவந்த நோக்கமோ என்னை மீட்க
தேவையோ நான் அதை உனக்குரைக்க
அறிவேனே நான் உன் இரக்கமதை
ஆதலால் அண்டினேன் உன் பாதமதை.
20-11-1991. காட்மாண்டு (நேபாள்)
இன்று ஏற்பட்ட பலவிதமானமனப் போராட்டங்களுக்கு ஒரு விடுதலை கிடைத்தபோது (பாடல் 30&31-லைப் பார்க்கவும்) ஆனந்தம் மிகுதியால் எழுதிய பாடல்:
32. ஆனந்தமே
இராகமோ தாளமோ நானறியேன் இங்கு
பாடலோ பண்ணுமோ கேட்டறியேன்
நெஞ்சத்து உணர்வெல்லாம் எழுத்தாக்கி
என் நேசனின் பாதத்தில் படைப்பதன்றி--இராகமோ....
யாப்பின் இலக்கணம் நானறியேன் இங்கு
எதுகையோ மோனையோ இணைக்கறியேன்
ஆவியில் நான்கொண்ட அனுபவத்தை
என் ஐயனின் பாதத்தில் படைப்பதன்றி--இராகமோ....
பண்டிதன் அல்ல புலவன் அல்ல இங்கு
பார்மெச்சும் ஞானியோ நானுமல்ல
பாவத்தில் வாழ்ந்தென்னை மீட்டெடுத்த
பரன் முக்தேசனின் பக்தனன்றி--இராகமோ....
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இங்கு
ஐயனின் புகழ்பாடல் ஆனந்தமே
நாதன் பாதத்தில் தாழவீழ்ந்து
நாளும் பணிவதே ஆனந்தமே--ஆனந்தம்....
20-11-1991. காட்மாண்டு (நேபாள்)
33. எதைத்தான் தருவேன்
ஏதுநான் தந்திடுவேன் ஏழைநான்
நாடிஎன்னைத் தேடிவந்த நாதன்தன்
மாறிடாத அன்புகொண்டு மீட்டதற்கீடாய்--ஏதுதான்....
பொருத்தனை எனச்சொல்லி பொருளையே
அளிப்பதனால் ஐயனின் அன்பிற்கீடாய்--ஏதுதான்....
சேவை எனச்சொல்லி செய்திடும் செயலெல்லாம்
செப்பறிய அன்பினிற்கு எப்பாங்கில் ஈடாகும்--ஏதுதான்....
வாழ்ந்திடும் வாழ்வதுமே தேவன்தந்தை பிச்சையதால்
வழங்கிட ஏதுமில்லை வள்ளலின் அன்பிற்கீடாய்--ஏதுதான்....
1991
நான்கண்ட பல வழிகளில் பத்தி நெறியே சிறந்தது என்பதை எண்ணியபோது எழுதியபாடல்:
34. பக்தி வழி
ஏதுகண்டு நான் பின்செல்வேன்
நாதனே ஏழை என்றும் உன்னை
கூறியே திரிகின்றார் கொள்கை பல
கூவி அழைக்கின்றார் அவர் பின்செல்ல--ஏதுகண்டு...
நாடினேன் நானும் ஞானமதை
நானிலத்தோர் போற்றும் பாதையதை
ஆயினும் அடைந்திலேன் அமைதியினை
ஆ! என்சொல்வேன் என்மனதின் நிலை--ஏதுகண்டு...
உழைத்திடு நாளும் உலகம் உய்ய
உண்டோ "வழி" அதனை வெல்ல?
என்றவர் கூறிய வழியும் சென்றேன்
ஏமாற்றமே கண்டேன் இறுதி வரை--ஏதுகண்டு...
துறந்திடு உலகமோ என்றும் மாயை
தொல்லை துன்பமே வாழ்க்கை எல்லை
துணிந்தவர் கூறிய பாதை சென்றேன்
தொல்லை துன்பமோ நீங்கக் காணேன்--ஏதுகண்டு...
பலவழி அலைந்தே சோர்ந்து நின்ற
பாலன் என்மீது கருணை கொண்டு
"பக்தி" என்னும் ஒரு பாதை தந்து
பதமடைய நீ தந்த வழியும் உண்டு--ஏதுகண்டு...
ஞானம், கருமம், துறவு எல்லாம்
தன்வரை உண்மைத் தனித்தனியே
ஆனால் "பக்தி" நெறி ஒன்று மட்டும்
பூரணமாக்கிடும் அனைத்தையுமே--ஏதுகண்டு...
சாத்தால் ஆஸ்ரம், 19-04-1991
"பக்தி ஒன்றே வழி" என்ற கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது அதை எழுதுவதை நிறுத்தி இப்பாடலை, 04-07-1991-அன்று சாத்தால் ஆஸ்ரமத்தில் இருந்த போது எழுதியது:
35. பக்தியே வழி
சித்தமது சுத்தமானால்
சேர்ந்திடும் ஞானமதால்
அகக் கண்ணும் தான்திறக்க
ஆன்மாவின் வடிவமதை
அறிந்திடலாம் உள்ளபடி
என்றுரைத்த வேதாந்த
வழிதன்னில் சென்றவரும்
இல்லைஇது உண்மைஇல்லை
என்றுணர்ந்து மனம்திரும்பி
வேறுவழி ஏதுமுண்டோ
உய்வதற்கு உலகில் இனி
என்றே திகைத்து நிற்க
நானறிவேன் அந்த வழி
நாதனவன் பாதமதை
அளப்பரிய பக்தியினால்
ஆரத் தழுவி நின்றால்
பக்தனவன் குரல் கேட்டு
பரமபதம் தான் நீத்து
பரிவுடனே தேடிவந்து
பக்தன்மேல் அன்புகொண்டு
பாங்குடனே ஏற்றிடுவான்
பக்தனிவன் சாட்சியிது
தாமதமேன் தயக்கமுமேன்
தஞ்சம் அடை அவன்பாதம்
05-07-1991-அன்று, சாத்தால் ஆஸ்ரமதில் இருந்தபோது, அருளானந்தன் (யோவான்) எழுதிய நற்செய்தியில் 6:1-35--ல், 26-ம் வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்தபோது எழுதிய பாடல்:
36. அகக்கண் திறப்பாய்
ஏதுதான் காரணமோ ஐயா
மாந்தர் உன்னைத் தேடிவர
நாடுகிறார் நாளும் உன்னை
நன்கறிவாய் நீ அவரை--ஏதுதான் காரணமோ....
தேகமதின் தேவை ஒன்றே
மேதினியில் மேன்மை என
நாடி ஓடித் தேடி என்றும்
நலிகின்றார் வாழ்வதனில்--ஏதுதான் காரணமோ....
வருந்தியே சுமை சுமந்து
ஐயா, வாடிய போதினிலும்
அறிந்திடார் மெய்ப்பொருளை
மந்தமே அவரின் நிலை--ஏதுதான் காரணமோ....
ஜீவ அப்பம் உண்டனெவே
சொல்லிய போதினிலே
ஏது விலை? என்ன எடை?
என்றுரைத்தே நாடுகின்றார்--ஏதுதான் காரணமோ....
அழிந்திடும் அப்பமோ நீ
அறிந்திலர் அடைந்தபின்னும்
அகக்கண் தான் திறப்பாய்
அறிந்திட உண்மையினை--ஏதுதான் காரணமோ....
ஆன்மீக வாழ்வில் நாம் செய்த பல பாவங்கள் நம்மை எத்தனை அழுத்தினும் இறைவன் தரும் அருள்கொண்டு முன்னேற முடியும் என்பதை எண்ணிய போது எழுதிய பாடல்:
37. ஏன் இரக்கம்?
ஏனையா இத்தனை இரக்கம்?
ஏழை என்மீது உனக்கும்
என்ன காரணம் கொண்டாய்
எனக்கும் புதுவாழ்வு தர?
கடைகெட்டப் பாவியே நான்
கண்டிலேன் ஓர்வழிதான்
கரைப்பட்ட வாழ்வதுதான்
கண்டரும் மாந்தரும் தான்
நினைக்கவே நெஞ்சமும் கூசும்
நித்தமும் நான் செய்த பாவம்
நினைவில் அலையாக மோத
மறந்தேனே புதுவாழ்வு காண
இதுவே ஓர் காரணமாகி
என்னுள் துன்பத்துள் மூழ்கி
தவித்துத் தடுமாறும் போது
பொழிந்தாய் அருள் ஏழைமீது
நன்றிக் கடனாக நானும்
ஒன்றும் அளிக்காத போதும்
எஞ்சிய வாழ்நாள் முழுதும்
உன்புகழ் பாட அருளும்
17-11-1991. காட்மாண்டு (நேபாள்)
மரூபமலையில், மலையப்பனுக்கு முக்திநாதனுடன் தங்கிவிடுவது நல்லதாக முதலில் தோன்றியது. பிறகுதான் இறைவன் சித்தம்பற்றி தேட ஆரம்பித்தான். அதைப்பற்றி தியானித்த போது எழுதிய பாடல்:
38. உன் சித்தம் செய்யவேண்டும்
சித்தம் ஒன்றே செய்ய வேண்டும்
எத்தனைக் கற்றாலும் ஏதருள் பெற்றாலும்--உன் சித்தமொன்றே...
என் ஆவல் என்தேவை என்றே நான் வாழாமல்
எப்போதும் உன்வார்த்தை ஒன்றேசிரமேற்கொண்டு--உன் சித்தமொன்றே...
வாழ்ந்திடும் வாழ்வில் உன்நாமம் ஒன்றையே
நானிலத்தோர் இங்கு நன்கறிந்து போற்றிட--உன் சித்தமொன்றே...
தேவை பலக்கொண்டோர் வாழும் இத்தேசமதின்
நிலைய் அறிந்தே நித்தமும் உளமுருகி--உன் சித்தமொன்றே...
மறுரூப மலையின் மஹிமையில் மதிமயங்கி
மண்டபம் கட்டியே உன்னுடன் தனித்து வாழாமல்--உன் சித்தமொன்றே...
நலம் எனக்கது என்றே நானும் எண்ணாமல்
உளமாற உன்பணி ஒன்றையே என்றும் செய்திட--உன் சித்தமொன்றே...
12-02-1992. கெகரஹா (ரீவா, ம.பி).
நம் மனநிறைவிற்காக சேவை செய்யாமல், பிறரின் தேவைக்காகவே செய்யவேண்டும் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:
39. அகம் அழிந்திட வேண்டும்
அகமது அழிந்திடவேண்டும் ஐயா
ஆன்மீகவாழ்விலும் வளம்பெற வேண்டும்
இகமதில் வாழ்ந்திடும் வாழ்வில் என்றும்
"சுய"மதை நீக்கிடவேண்டும் ஐயா--அகமது அழிந்திட....
"நான்" என்னும் எண்ணம் நாளும் ஓங்குதே
சுயநலம் பெரிதாய் என்றும் வளருதே
செய்திடும் செயலெல்லாம் என்நலம் கருதியே
ஜெயமெனக் கருள்வாய் இக்குணமீதிலே--அகமது அழிந்திட....
"நல்லோன்" என்றென்னை நாலுபேர் எண்ண
ஆடிய ஆட்டத்திற்கு அளவேதான் என்ன?
சொலொன்று செயலொன்று என்றே வாழும்
சிறுமை தன்னை நீக்கிட வாரும்--அகமது அழிந்திட....
"துறந்தே உன் சுயத்தை நீயுமே
சுமந்தே என்தன் சிலுவை தனையே
ஏகிடு என்பின்னே" என்றே உரைத்த
ஐயனே உன்னடி நானும்பின் செல்ல--அகமது அழிந்திட....
19-02-1992. கெகரஹா (ரீவா, ம.பி)
10-12-1992 அன்று காலை தியானத்திற்குப் பின் தமிழ்ப் பண் இசையில் எழுதிய பாடல்:
40. தீந்தமிழ்ப் பண்
தீங்குழல் யாழொடும் தேந்தமிழ்ப் பண்ணொடும்
தேவனின் கிருபையால் திருவடி அண்டினோம்
நாதனே நாயகா நண்பனே அன்பனே
நாடினோம் திருவடி நாளும் உன் அருள்வேண்டி
காலையும் மாலையும் கண்ணயர் வேளையும்
காத்திடும் கனிவுடன் கண்மணிபோல் எம்மை
ஆருளர் நீயன்றி அடியவர் மீதிறங்க?
அண்டினோம் திருவடி அனுதினம் உன்னருள்வேண்டி
உள்ளும்புறமும் ஒவ்வொரு செயலிலும்
உன்னருள் நாமத்தை உணர்வுடன் தியானிக்க
செய்திடும் செயலெல்லாம் செவ்வையாய்ச் செய்திட
சேவடி அண்டினோம் ஸ்வாமி உன்னருள் வேண்டி
வீண்சிந்தை வெறும்வார்த்தை வேண்டாத உறவுகள்
வேதனைத் தந்திடும் வீணான செய்கைகள்
யாவையும் நீக்கியே நாளும் உன்புகழ்பாட
நாதனே அண்டினோம் நல்லருள் புரிவாயே
15-12-1992-அன்று காலை மாற்கு 1;40-41 வாசகங்கள் என்னை மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தன. உடன் எழுதிய பாடல்:
41. மீண்டும் ஒருமுறை
சித்தமுண்டே ஸ்வாமி என்னை
இக்கணம் சுத்தமாக்க உனக்கு
தொட்டதோ பலமுறைதான்
ஆனால் சுத்தமாகவில்லை எதனால்?
நொறுங்குண்ட நெஞ்சமோ
நறுங்குண்ட ஆவியோ
நேர்மையோ வாய்மையோ
என்னில் நீகாணததால்
தள்ளினையோ என்னையும்
தயைஇல்லையோ உன்னுள்ளும்?
நீயளித்த வாக்கும் எங்கே?
என்பாரம் நீக்கிடவே?
ஏன்விட்டய் என்னையும்
என் இஷ்டம்போல் வாழவே?
ஏதுதான் இதற்குக் காரணம்
இக்கணமே சொல்லிடுவாய்
பாரினில் உன் பாதமன்றி
பாற்றிடவேறு ஏது கண்டேன்?
அதனால் பாதகன் மீதிறங்கி
பரிவாக மீண்டும் தொட்டிடுவாய்!
24-01-1993 அன்று இறைவன் கிருபையுடன் உள்ள முயற்சியே எல்லாவற்றிற்கும் அவசியம் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:
42. அருளும் முயற்சியும்
துணிவும் இறைவன் அருளும்
ஒன்றாய்த் துணைசேரும் போது
கலக்கம் ஆங்கே மனதில்
கணநேரமும் நின்றிடாது
முயற்சியில்லா வேண்ட.ல்
மூடத்தனமான செயலே
அருளைநாடா சுயமுயற்சி
ஆணவத்தின் உச்ச நிலையே
முயற்சி திருவினையாக்கும்
முயன்று அதில் முனையும்போது
அருளும் அதனைத் தொடரும்
அவனடி பணியும் போது
முடவன் தேனெடுக்க முயன்று
முயற்சி பலவும் செய்தும்
வெறும் விரல் நக்குவதன்றி
வேறொரு பயன் அடையான்
அருளற்ற முயற்சி முடமே
அறிவாய் இதனை மனமே
அருளும் முயற்சியும் இணைந்தால்
அடைவாய் வேண்டிய துணிவே!
05-02-1993 அன்று காலை தியானத்தின் போது எழுதிய பாடல்:
43. ஜெபமும் வேதமும்
சிந்தையின் ஓட்டமெல்லாம்
ஜெபமாக மாற்றி
இறைவனின் பாதத்தில்
படைத்திடும் போதினிலே
சிதறிய மனமதுவே
சீராக மாறி
சேர்ந்திடும் அவன்பாதம்
ஜெபமாக மாறி
எண்ணமது அடங்காது
எவ்வளவு முயன்றாலும்
எளிதாக அதையடக்க
ஜெபமே ஆதாரம்
அதிக வசனிப்பால்
அடங்காது மனமே
அமர்ந்திடு அவன்பாதம்
தியானத்தில் தினமே
வேத மந்திரமெல்லாம்
வெறும் வார்த்தையாமே
"வேண்டுதல்" அன்றிஅதை
தியானிக்கும் பொழுதே
ஜெபமொடு வேதமது
சேர்ந்திடும் பொழுதே
சிந்தையது சரணடையும்
இறைவனின் பாதம்
01-03-1993-அன்று காலை தியானத்தின்போது, பெரும்பாலன மக்களின் இறை உணர்வு ஒருவித பயத்தின் காரணமாகவே இருப்பதை சிந்தித்த போது எழுதிய பாடல்
44. அன்பின் உயர்நிலை
அன்பன்றோ அவனியில் உயர்நிலை
அறியாரே மானிடர் அந்நிலை
அதைக்காட்ட அடைந்தாய்நீ என்நிலை
துணிவாய்த் துறந்தே உன்நிலை
அச்சம் ஒன்றே அவனியில்
அனைவர்க்கும் இறை மீதுஉள்ளது
அந்தோ என்னே பரிதாபம்
அதன்கண் வாழும் மனுநிலை
அன்பற்ற தொழுதலின் அவநிலை
உயிரற்ற உடலது ஆகுமே!
உண்மை பக்தனின் உயிர்நிலை
உள்ளான அன்பது ஆகுமே
உலகிற்கு இவ்வழி காட்டவே
உவந்தே வந்தாய் மனுவாக
உன்னுயிர் அளித்தனை எமக்காக
ஊற்றினை அன்பதை உயர்வாக
அன்பின் வழியது உயர்நிலை
அறிந்தேன் இன்று அந்நிலை
அறிந்தே நீயும் என்நிலை
அருள்வாய் மென்மேலும் அந்நிலை
ரீவாவிற்குச் சென்றபோது, சில தவிர்க்கமுடியாத காரணத்தால் காலைக் கடன்களை முடிக்கக் கூட மிகவும் அலையவேண்டி இருந்தது. ரீவாவில் தங்கிய போதெல்லாம் சில அடிப்படையான தேவைகள் கூட பலமுறை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. 03-04-1993-அன்று அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டபோது எழுதிய பாடல்:
45. சுய வெறுப்பு
ஆடம்பரத்தையே நான் நாடவில்லை
அதிகவசதியும் தேடிடவில்லை
அடிப்படைத் தேவையே மறுத்திடும்போது
ஆத்திரம் ஒன்றே மேலோங்கிடுது
எல்லோரும் பிறந்தது சமமாக என்றால்
ஏன் இந்த முறன்பாடு உலகினில் இங்கு?
பசி ஏப்பம் விடும் பாமரர் ஒருபுறம்
புளியேப்பம் விடும் பணக்காரர் மறுபுறம்
யாரிடம் சென்றே முறையீடு செய்வது?
"ஏன்" என்ற கேள்வியே என்றும் மிஞ்சுது
வல்லவன் வகுத்ததே வாய்க்கால் ஆனபின்
வறியவர் மீண்டிட வழியிங்கு ஏது?
இரக்கின்ற நிலையை உலகினில் வைத்த
இறைவன் அன்றி பொறுப்பிதற்கு யாரு?
"இரந்து உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்"
என்று வள்ளுவன் இயற்றிய குறளும்
எவ்வளவு உண்மை இந்நிலையினிலே!
ஏழ்மையின் கொடுமையைத் தாங்காமல் நானும்
இறையிடம் முறையிட்டேன் இந்நிலைக் காண!
பதிலுக்கு எதிர்பார்து காத்திடும்போது
பதிலாக வந்தது கேள்வியே இங்கு
"என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்றமகற்கு.
என்பதும் வள்ளுவன் இயற்றிய குறளே
ஏனிதை மறந்தாய் என்னிய மகனே?
மானிடர்த் தேவைக்கு வேண்டிய யாவும்
மனமுவந்தளித்தேன் இயற்கையில் நானும்
அவரின் ஆசைக்கு எல்லையே காணும்
அதற்குமுன் வரியவன் ஆனேன் நாணும்
உள்ளவன் ஏய்க்கிறான் வரியவனையே
தன்சுகம் ஒன்றையே என்றும் நினைப்பதால்
ஏழையும் ஏழ்மையின்மீது பழி கூறி
என்றும் வாழ்கின்றான் சோம்பேரியாய்
இருவர்க்கும் இடையில் ஓர் சமநிலை வேண்டும்
அதற்கும் ஆயத்தம் என்றால் நீயும்
அனுதினம் பின்தொடர் என்னை என்றும்
சோம்பேறி-செல்வந்தர்க்கு மத்தியிலே
செல்வத்தைப் பங்கிடவோ வந்தேன் நானும்?
என்னிடம் உள்ளது பதிலோ ஒன்று
ஏற்றிட ஆயத்தமா நீ இங்கு இன்று?
சுய வெறுப்புடன் சீடர் சிலரேனும்
சிலுவையை சுமந்தே நாளும் பணிவோடு
என்னைப்போல் உலகினில் வாழ்ந்திடும் அன்று
சமநிலை வந்திடும் தரணியில் நன்று!"
1993-அன்று பெரிய வெள்ளியன்று எழுதியது
46. சிலுவை என்மேன்மை
சிலுவையில் தொங்கிய என்நேசனின்
சிந்திய இரத்தத்தால் சுகமாயினேன்
சிலுவையே மேன்மை என்வாழ்விலே
சேவிப்பேன் அதனை எந்நாளுமே
வினைமூலம் சிலர் தேடினார் மீட்பை
ஞானத்தின் துணையை நாடினார் சிலரே
பக்தியின் பெயராலே பரமனைத் தேடியே
பயனற்ற வழிபாட்டில் வீழ்ந்தனர் பலரே!
புத்தியின் மேன்மையால் புதுவாழ்வு தரவே
சீர்திருத்தப் பாதையில் சென்றனர் சிலரே!
"புதுமை புதுமை" எனக்கூறிய பலருக்கு
கேளிக்கையானது ஆன்மீக வாழ்வே
நல்வழி காணவே நானும் முயன்றே
நாடினேன் பலவழி நாளும் இங்கே!
சிறுமையாய்த் தோன்றிய சிலுவை ஒன்றே
தெளிவாக்கித் தந்தது ஆன்மீக வழியை.
25-05-1993. தில்லி.
47. ஆட்கொள்வாய்
என்னையும் மீறி என்னை
ஆட்கொண்டருளாவிட்டால்
என்மீதே எனக்கு வெற்றி
என்பதும் இல்லையன்றோ!
நடைபயிலும் குழவியே நான்
நாலடி எடுத்து வைத்தால்
தடுமாறி விழுகின்றேன்
நன்கறிந்த தாயே நீ
மெல்ல என் கரம்பிடித்து
என்னுடனே நீ நடந்து
தடுமாறும் போதெல்லாம்
தாங்கிடுவாய் தயவாக
விட்டுப் பிடிப்போமென்று
வேடிக்கைப் பார்த்தாயானால்
விழுவதோ உண்மையது
ஆனால் பழிவரும் உன்மீது
வேண்டாம் இவ் வேடிக்கை
வேண்டுதல் அல்ல இது!
ஆணை இடுகின்றேன்
ஆட்கொண்டு வழிநடத்து!
முக்தி நாதனே உன்மீது
எனக்குள்ள உரிமையினால்
உளறுகின்றேன் இதுபோல
மழலைமொழி பொறுதருள்வாய்!
27-05-1993. வாரணாசி. மாத்ருதாம் ஆஸ்ரம்.
வாரணாசியில் மாத்ருதாம் ஆஸ்ரமத்தில் ரீவாவில் உள்ள என் சீடர்களுக்காக நடந்த ஒரு கூடுகையில், லலன் பாண்டே, செய்த ஒரு காரியம் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆயினும் அதை அவனிடம் கூறும்முன் 28-05-1993 அன்று மாலை நான்கு மணிக்கு அவனுக்காக குறிப்பாக பிரார்த்தனை செய்ய அமர்ந்தேன். ஆனால் அவன் குறையை இறைவனிடம் கூறும்முன், என்குறைகள் பெரிதாக என் மணக்கண் முன்னே வர ஆரம்ப்பித்தன. உடன் அவனுக்காக பிரார்த்தனை செய்வதை விடுத்து என்குறைகளுக்காக இறைவனிடம் புலம்ப ஆரம்பித்தபோது எழுதிய பாடல்:
48. என் குறை
என்குறை பெரிதாக என்முன் நிற்கையில்
எப்படி உரைப்பேன் பிறர்குறை உன்முன்?
பெரிதே மனப்போராட்டம் அதன்மீது
பெற்றிலேன் வெற்றியே பலமுறை முயன்றுமே!
என்தகுதி ஒன்றையே ஆதாரமாய் எண்ணியே
பிறர்குறை நீக்கிட முடியாது உண்மையே
புனிதனே திருவடிப் புகலிடம் தேடியே
போராட வந்துள்ளேன் என்குறை போக்கவே
என்குறை பிறர்குறை எல்லாமே உன்மீது
ஏற்றுக்கொண்டாய் அன்று சிலுவையின் மீது
எனவே உன்னருள்மீது நம்பிக்கை வைத்து
நாடினேன் மீண்டுமே நாதனே உன்திருவடி
16-06-1993 அன்று காலை தியானத்திற்குப்பின் கோண்டாவில்(உ.பி) இருக்கும்போது எழுதியது:
49. மீட்கும் கருணை
விழுவதோ என் இயல்பு
விழுந்தபின் எழுந்திருக்க
இயலாமல் நான்கிடக்க
தூக்கிமீண்டும் விடுவதும்
துங்கவனே உன் இயல்பு!
ஆனால் எத்தனை நாள்
ஐயனே இது தொடரும்?
ஒன்று செய் இனிமேலே
விழுந்தாலாலே விட்டுவிடு
எப்படியோ போவென்று!
பாவிமேல் கருணையினால்
பன்றிபோல் சாக்கடையில்
பலமுறை புரண்டாலும்
பதைபதைத்துத் தாய்போலப்
பரிவுடனே மீட்கின்றாய்.
செய்நன்றி கொன்றுன்னை
சிலுவையிலே அறைகின்ற
சிறுமையினாய் ஆனேனே
சீற்றம்கொள் தயங்காதே
சிறிதேனும் கலங்காதே!
தாங்க இயலவில்லை
தவிக்கின்றேன் நாளுமே
தடுமாறும் பாவியென்னை
ஆட்கொண்டு வழிநடத்து
அண்டினேன் திருவடியை!
உதைத்து நீ தள்ளினாளும்
உன்னடி தன்னை விடேன்
வேறெங்கு கண்டிடுவேன்
மீட்டெடுக்கும் கருணையினை
மேதினியில் உனிலன்றி?
தேவயற்ற பல அன்றாட காரியங்கள் நாம் இறைவனுடன் செலவிடவேண்டிய நேரத்தையும், அவனுடன் உள்ள உறவையும் பலவாறு பிரிப்பதை எண்ணியபோது எழுதியபாடல்:
50. பிரிவினை
பிரிக்குதே எனதன்பை உன்மீது
புவியின் பலவித காரியங்கள்
அவைமீது நான்கொண்ட ஆசைகளும்
ஐயனே அழிக்குதே ஆதி அன்பை
நான்செய்யும் பலவித காரியங்கள்
நாளுமே என்நலம் நாடி மட்டும்
நானுமே செய்கின்ற காரணத்தால்
நலிந்தது எனதன்பு உன்மீது!
சொல்லிட காரணம் பல உண்டே
செய்திடும் செயல்கள் அத்தனைக்கும்
ஆயினும் என்மனம் நன்கறியும்
அவைமீது நான்கொண்ட பற்றினையும்
ஒவ்வொருநாளும் எதோ ஒன்று
நம்மிடைப் பிரிவினை செய்திடவே
ஆயத்தமாகிக் காத்து நிற்கும்
ஐயனே என்செய்வேன் இந்நிலையில்?
என்மீது கொண்ட அன்பதனால்
இம்மட்டும் காத்து வந்ததுபோல்
இனிமேலும் தாங்கி நடத்தாவிட்டால்
எனக்கில்லை வெற்றி இப்போராட்டத்தில்
16-03-1993. கோண்டா (உ.பி)
தனிமையான வாழ்க்கை பல இழப்புக்களைச் சந்தித்தாலும், அதில் உள்ள சில நன்மைகள் வேறுவிதமான மன நிறைவைத் தரும். அதில் ஒன்று இறைவனுடன் நாம் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளும் நிலை. அதைக்குறித்து எண்ணியபோது எழுதியபாடல்:
51. இனிமை
தனிமை என்றதோர் இனிமை
என்தலைவன் தாள்பணிந்து
வணங்கும் போதெல்லாம்
அரவணைக்கும் ஓர் புதுமை
சொந்த பந்தம் நம்மைச்
சூழ்ந்து நின்ற போதும்
தேடி அவனடிப் பணியும்போது
நாடி வருகின்ற இன்பம்
சொல்லில் கூற முடியா
சுகமே அந்த நேரம்
சுவைத்து அறியா மூடர்
புரிந்திடாத பேரின்பம்!
26-06-1993. கோண்டா (உ.பி).
நாமாவளி என்பது இந்திய பக்தி வழிபாட்டின் ஒரு அங்கம். வட இந்தியா, தென் இந்தியா என எப்பகுதியிலும் இறைவனின் நாமம், புகழ், குணம் சொல்லி மக்களை ஆராதிக்க அழைப்பது வழிப்பாட்டின் ஒரு பகுதி. குறிப்பாக கதாகாலட்சேபங்கள் நடக்கும்போது, ஆரம்பிக்கும் முன் நாமாவளி கூறுவது மரபு. அதன் அடிப்படையில், வட இந்தியாவில் சத்-சங் நடத்தும்போது ஹிந்தியில் நான் கூறும் நாமாவளியைப்போல் தமிழிலும் கூறவேண்டி இதை, 08-07-1993-ல் பெங்களுரில் சில வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தபோது எழுதினேன்.
52. நாமாவளி
அழைப்பு: எல்லோருக்கும் இறைவனாம் முக்தேசனே போற்றி
பதில்: எமக்கும் தலைவனாம் இறைவனே போற்றி
அழைப்பு: தந்தையாம் இறைவனின் தாளடி போற்றி
பதில்: எந்தையாம் இறைவனின் இணையடி போற்றி
அழைப்பு: அரூபியாய் இளங்கிடும் ஆவியே போற்றி
பதில்: அருளினை அளித்திடும் அண்ணலே போற்றி
அழைப்பு: மூவரில் ஒன்றாய் இளங்குவோய்ப் போற்றி
பதில்: முதல்வனே இறைவனே போற்றி போற்றி
53. காணக் கண் போதுமோ?
காணக் கண் போதுமோ ஐயனே
கருணையினால் நீ எமக்கு படைத்தளித்த
இணையில்லா இயற்கையின் மாட்சியைக் காண--காணக் கண்.....
உயர்ந்த மலையின் உச்சியின் மீது
உலவி வருகின்ற அழகிய முகில்கள்
ஓடிவருகின்ற நதியின் அலைமீது
வருடி வருகின்ற குளிர்ந்த தென்றல்
பாடிச் செல்கின்ற பல இனப்பறவை
கோடிக்கணக்கான வண்ண மலர்கள்
இத்தனையும் அளித்தது போதாதென்று
உன்னையே நீயளிக்க வந்தனை அன்று
சத்திய வேதத்தின் சாட்சியும் உண்டு
சரித்திர நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு
உன்னைப் பின்தொடர்ந்த சீடரும் உண்டு
உருகாத மனம் உண்டோ அன்பினைக் கண்டு--காணக் கண்.....
30-07-1993. கோண்டா (உ.பி).
பல சமயங்களில் நம் பிரார்த்தனை என்பது ஒருவிதமான சடங்காகப்போய்விடுகின்றது. ஓரேமாதிரியான வார்த்தைகள், முறைகள். பலமுறை நமது பிரார்த்தனை ஒருகடமைக்காக செய்யும் அர்த்தமற்ற சடங்காக ஆகிவிடுகின்றது. பிரார்த்தனை செய்யாவிட்டாலோ, குற்ற உணர்வு. ஆனால் வழக்கமான பிரார்த்தனையிலோ மனநிறைவு அற்ற தன்மை! மனதின் எண்ணங்களே ஏன் பிரார்த்தனையாக இருக்கக்கூடாது? வெறும் வார்த்தைகள் எதற்கு? 18-08-1993 (கோண்டா?) அன்று இரவு ௧௧-மணிக்கு படுக்கும்முன் வழக்கமாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தபோது, உடனே இப்பாடலை பத்து நிமிடங்களுக்குள் ஒரு பிரார்த்தனையாக எழுதினேன்:
54. தஞ்சம்
உள்ளும் புறமும் எல்லாம் அறிந்த உனக்கு
உரைப்பதற்கென்று ஒன்று உண்டோ எனக்கு?
நன்றோ தீதோ இனி நானறியேன் நானிலத்தில்
ஒன்றறிவேன் அதுஉன் பாதமன்றி வேறு இல்லை
வெறும்வார்த்தைக் கூறி "ஜெபம்" என்ற பெயராலே
புலம்புவதால் என்னபயன் புனிதனே இனிமேலே?
என்னை அறிந்து கடையேனுக்கிறங்கி
கருணையினால் வந்து ஆட்கொள்வாய்
கதறிடும் என் ஆன்மாவில் குரலே ஜெபமாகும்
தோற்றேன் போராடத் தொடங்கிய நாள்முதலே
தோவியன்றி வெற்றியேதும் காணேன் வாழ்வினிலே
என்பெலன் நம்பி இறங்கியதால் யுத்தமதில்
இழந்தேனே என்னையதில் இனிசக்தி இல்லைஎன்னில்
நன்கறிந்த உனக்கினி நான்கூற ஒன்றுமில்லை
நாவும் எழவில்லை நான்புலம்ப உன்னிடத்தில்
ஐயனின் அருள்மூலம் வருகின்றேன் உன்னிடத்தில்
எனக்காய் உயிரளித்த என்நாதன் எனக்குண்டு
ஏற்றபடி பரிந்துரைக்க ஆவியின் அருளுண்டு
தந்தையென நீயுண்டு தாங்கிட உன்தயவுண்டு
"தஞ்சம், தஞ்சம்" என தாள்பணிந்தேன் ஜெபமாக
Wednesday, September 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment