வாழ்க்கை என்னைப் பொருத்தவரை ஒரு வேடிக்கையாகவே இருக்கின்றது. இதை எண்ணியபோது எழுதிய பாடல்:
42. ஓர் வேடிக்கை
வேடிக்கை ஒன்று
வாடிக்கை யானது
விந்தையான உலகினிலே
விடிகின்ற நாளுமோ
முடிந்து போனது
புதுமை ஒன்றும்
இதில் காணாமலே
பிறந்தான் பிள்ளையாய்
நடந்தான் பேதையாய்
வளர்ந்தான் வாழ்க்கையில்
வளமுடன் வாலிபனாய்
பொழுதெல்லாம் எண்ணங்கள்
புதுப்புது கற்பனை
பொங்கியது அவன்
மனதினிலே தினம்
முதுமை பெற்ற
மனிதனாய் அவனும்
முயன்றிட்டான் உலகில்
முழுமை பெற
முடவன் தேனெடுக்க
முயன்றது போல
முடிந்தது மனதின்
எண்ணங்களும் இங்கு
கனவில் கண்ட
காசு பணமெல்லாம்
கவைக் குதவாது
என்பது போல
கழிந்தது இளமை
குறைந்தது வளமை
தளர்ந்தது மனதின்
எண்ணங்களும் நாளும்
தள்ளாடும் மனிதனாய்
தடிஊன்றி நடகையில்
மீண்டும் கண்டான்
அந்த வேடிக்கையை
1995, ஜனவரி.
கான்பூரில் சுமதி என்ற தமிழ் எழுத்தாளரின் பெற்றோரை சந்தித்தபோது, சுமதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட காரியம் கேட்டு, மிகவும் வருத்த முற்றேன். சுமதி பல தமிழ் புதினங்களை ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு அஞ்சலியாக, 04-01-1995 அன்று கோண்டா திரும்பியபின் எழுதியது:
43. ஓர் அஞ்சலி
மலரும்முன் மொட்டிலே கருகியதே
மாந்தரின் மன வெறியினால்
"மாக்களே" அவர் மக்களல்ல
மங்கை உன்வாழ்வை அழித்ததினால்
இந்திக்கும் தமிழுக்கும் இடையேபாலமாய்
இதுவரை நீ செய்த சேவையினை
தரணி உள்ளமட்டும் நிலைத்திருக்க
தங்கையே நாங்களும் விரும்பிடுவோம்
சுந்தரத் தமிழுக்கு மெருகு கூட்ட
சுமதி நீ செய்த சேவையினை
இழந்ததாள் அழுகின்றாள் தமிழன்னை
யார் துடைப்பார் அவள் கண்ணீரை
அழுகின்றோம் நாங்களும் அவளுடனே
அதுவன்றி என்செய்வோம் இனிமேலுமே
பூதவுடல் உலகினிலே அழிந்தாலும், உன்
புகழ் என்றும் நிலைநின்று ஓங்கட்டும்
ஒருவர் மற்றவரின் வாழ்க்கையையுடன் தன் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமை படுவதோ, நிம்மதி கொள்வதோ பொய்யான ஒரு கற்பனை என்பதைக் குறித்து சிலருடன் பேசிக்கொண்டிருந்த போது எழுதிய வரிகள்:
44. அக்கரைப் பச்சை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதே
அனைவரின் வாழ்விலும் உண்மையே
அவரைப் போல் நானும் இல்லையே
என்பதே மனதின் ஏக்கமே
ஒப்பிட்டுப் பார்த்து வாழ்வதாலே
ஓயாத தொல்லைதான் மனதினிலே
அவரைப் போல் நாம் இருந்துவிட்டால்
ஐயகோ வேறேது தொல்லையே
ஒருவரைப் போலவே அனைவரும்
உலகில் எல்லோரும் இருந்துவிட்டால்
சுவையேதும் இராது வாழ்விலே
சற்றே எண்ணிப்பார் இவ்வுண்மையே
அடுத்தவர்க்குள்ள அழகு பணம்
ஆடம்பரமான வாழ்க்கை முறை
இவைமட்டுமே விரும்புகின்றோம்
உள்ளபடி அறியாது உண்மைநிலை
கரைமாறி நின்றே பார்க்கும் போது
கண்ணில் படும் அவர் உண்மைநிலை
அங்கிருந்து நாம் பார்க்கும்போது
அறிவோம் நம்கரையின் பசுமையினை
25-01-1995. லக்னோ
மஹரியில் (ரீவா, ம.பி) மாலை நேரத்தில் வழக்கப்படி நதிக்கரையோரம் உலவச்சென்ற போது, ஒரு மீன்கொதிப் பறவையின் செயலைக் கண்டு எழுதிய பாடல்:
45. முயல வேண்டும்
மீன்கொத்திப் பறவைப் போல
முயற்சியும் செய்திட வேண்டும்
முழுமூச்சாய் செயலிலேயும்
முழுமனம் வைத்தே நாமும்
வேகம் விவேகம் கொண்டு
நேர்த்தியாகவும் சென்று
இரையைக் கொத்தியே செல்லும்
திறமையும் என்னே! என்னே!
நோக்கம் கொண்டுமே நாமும்
முழுமனதாய் முயன்றால் நாளும்
முடியாத செயலென்று ஒன்று
மேதினியில் இல்லை! இல்லை!!
01-03-1995.
எடுத்த தீர்மானத்தில் தோல்வி அடைந்த போது எழுந்த விரக்தியால் எழுதியபாடல்:
46. நிழல் நிஜமல்ல
நிற்கின்றேன் என்று எண்ணியே நானும்
நிழலை நிஜமாக்க மாற்றிட முயன்றேன்
கானல் நீர் தேடியே ஓடிய மான்போல
ஏமாற்றம் கொண்டு சோர்வுற்று நின்றேன்.
16-03-1995
சிலசமயம் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்ற எண்ணம் தோன்றும். அப்படி ஒருமுறை தோன்றியபோது எழுதிய பாடல்:
47. மரணமே
மரணமே! நீ மட்டும் இல்லாதிருந்தால்
மானிடர் வாழ்வு ஓர் நரகமே
எதையோ எண்ணி ஓடுகின்றார்
ஒருநாளும் அதை அடையாமலே
உளுத்த அவர் வாழ்க்கைக்கு
நீயன்றி வேறில்லை பரிகாரமே
நீதரும் அந்த இளைப்பாறுதல் அறியாமல்
நாடுகின்றார் இவ்வுலக வாழ்வினையே
பேதையாம் அவர்செயல் பொறுத்தருள்வாய்
போராடும் எனக்கிங்கு புகல் அளிப்பாய்.
22-04-1995.
வாழ்க்கை துன்பம் இன்பம் நிறைந்த ஒரு தொடர்கதையாக உள்ளதை எண்ணியபோது எழுதிய வரிகள்:
48. தொடர் ககை
துன்பமும் இன்பமும்
நிறைந்த இவ்வாழ்க்கை
தொடர் கதையாகிப்
போனது வே
தொடக்கமோ எளிது
முடிப்பதோ அரிது
முடிவே தொடக்கமாய்
உள்ள வரை.
22-04-1995
மஹரியில் (ரீவா, ம.பி) சஷிகாந்திடம் தோவியை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பேசியபின் எழுதிய பாடல்:
49. ஓர் சரித்திரம்
தோல்வி காணாத
நாளே இல்லை
தொல்லை மிகுந்த
இவ்வாழ்க்கையிலே
தொடங்கிய போராட்டம்
முடிவதோ இல்லை
புவியில் வாழ்ந்திடும்
நாள் வரையில்
தோல்வி காணாத
மனிதனும் இல்லை
வாழ்வு துவங்கிய
நாள் முதலே
ஆயினும் சரித்திரம்
அவர்தாய் இல்லை
ஆராய்ந்து கண்ட
உண்மை இதே
தோவி கண்டே
துவண்டிடாமல்
தொடர்ந்து நாமும்
முன்னேறினால்
தொடர்ந்திடும் வெற்றி
தொடர்கதைபோல
தொடங்கலாம் நாமும்
புதிய சரித்திரம்
17-10-1995
கீழ்வரும் பாடலை எழுதிய பின் எனக்குள் நானே சிரித்தேன். சிலர் எதிர்காலத்தில் என் பாடல்களைப் படித்தபின், என்னைப்பற்றி தவறான முடிவுகளுக்கு வரக்கூடும். ஆனால் கவிதை என்பது கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் ஒரு வகையே. ஒரு கவிஞ்ஞன் தன் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் சுதந்திரம் உடையவன். பல முறை அந்த சுதந்திரம், உபயோகப் படுத்தும் வார்த்தைகளின் காரணமாக மிகைப்படுத்தலாகவும் அமைந்துவிடும். அதைக்கொண்டு ஒருவனின் வாழ்வை தீர்மானிப்பது தவறாக முடியும்.
50. ஒன்றேயாகும்
காமம் வேறென்பார் காதல் வேறென்பார்
கருத்தறியாத காரணத்தால்
காமமும், காதலும் ஒன்றேயாகும்
வகுத்தே பார்த்து வாழ்ந்தவருக்கு
ஆசைவேறென்பார் அன்பு வேறென்பார்
அவையறியாத காரணத்தால்
ஆசையும் அன்பும் ஒன்றேயாகும்
அனுபவித்தே வாழ்ந்தவருக்கு
மனம் வேறென்பார் மதி வேறென்பார்
சரியாய்ப்புரியா காரணத்தால்
மனமும் மதியும் ஒன்றேயாகும்
செயலை எண்ணிப் பார்க்கும்போது
வார்த்தை வேறென்பார்
வாழ்க்கை வேறென்பார்
வகை தெரியாத காரணத்தால்
வார்த்தையும் வாழ்க்கையும்
ஒன்றேயாகும் முடிவை
யெண்ணிப் பார்க்கும்போது
எதிர்மறையாகத் தோன்றுபவை யெல்லாம்
வார்த்தையில் காட்டும் வித்தைகளாகும்
வார்த்தையில் எத்தனை
வித்தைகள் காட்டினும்
வாழ்ந்திடும் வாழ்க்கை ஒன்றேயாகும்.
17-10-1995. மஹரி (ரீவா. ம.பி).
காசியிலிருந்து லக்னோவிற்கு ரயில் வந்துகொண்டிருந்தேன். அப்போது சிலருடன் பேசியபோது, அடிப்படையான உடல்தேவைகள் எல்லை மீறும்போது அது எப்படி நம் மன உணர்வை அழிக்கின்றது என்று கூறினேன். அதை “மிருக உணர்வு” அல்லது “மிருக வெறி” என்று கூறுவது தவறு என்பதையும் வாதிட்டநான், அவை உண்மையிலேயே மனிதவெறி என்று எடுத்துக்காட்டினே. அச்சமயம் வண்டியிலேயே எழுதியபாடல்:
51. மனித வெறி
என்னையும் அறியாமல் ஒரு மிருக வெறி
மெல்ல என்னுள் தலைதூக்கியே
மென்மையான மன (மனித) உணர்வுகளை
என்னையும் மீறி மெள்ள அழிக்கின்றதே
இப்போராட்டம் இல்லாத மனிதருமே
இல்லை உலகினில் எங்குமே--ஆனால்
பொய் சாக்கு கூறியே நானும்
போடுகிறேன் தீனி என் வெறிக்கே
மிருக வெறி எனக்கூறிய நானும்
ஆராய்ந்து நோக்கினேன் அவை வாழ்வை
அறிந்து கொள்ள “அவ்” உணர்வின்
உண்மைத் தன்மையினை என் வாழ்வில்
என்னே ஆச்சர்யம்! அவை வாழ்வில்
இல்லை உண்மையில் ஒரு “மிருக வெறி”
இயல்பாய்த் தம்வாழ்வை வாழ்வதினால்
இயற்கையோடு ஒன்றாய்க் கலந்ததினால்
வயிறு பசித்தால் மட்டும் இரைதேடும்
வாய் உலர்ந்தால் மட்டும் நீர் தேடும்
உடல் பசித்தால் மட்டும் துணைதேடும்
எல்லாம் இயல்பாய் ஒரு நியதிக்குள்
ஆனால் என்வெறிக்கு தீனி போட
அலைகின்ற மனதின் தன்மைக்கு
“மிருக வெறி” என்றே கூறாமல்
“மனித வெறி” என்றே கூறவேண்டும்
எனவே-என்னையும் அறியாமல் “மனிதவெறி”
மெல்ல என்னுள் தலைத்தூக்கி என்மன
உணர்வை அழிக்கின்ற தென்பதே
இவ்வாழ்வின் உண்மை நிலை.
18-09-1995
நம்மிடம் இருக்கும் திறமை மற்றுள்ள வளங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர பெருமையுடையவர்களாக மாறக்கூடாது என்று எண்ணியபோது எழுதிய பாடல்:
52. வேண்டாம்
அழகிலே பெருமை வேண்டாம்
அறிவிலே பெருமை வேண்டாம்
பெலத்திலே பெருமை வேண்டாம்
பண வளத்திலே பெருமை வேண்டாம்
குணத்திலே பெருமை வேண்டும்
கொள்கையில் திண்மை வேண்டும்
அடக்கமுடன் பணிவு வேண்டும்
அறிவிலே முதிர்ச்சி வேண்டும்
வந்த வண்ணமே போவாய்
வாராது ஏதும் உன்னுடன்
கூடச் செல்வதோ என்றால்
கருமத்தின் பலனே யாகும்
அறிவு, அழகு, பணம், பலமோ
பரமன் அளித்த ஈவேயாகும்
பாங்காய் அவற்றைக் கைக்கொண்டால்
பெறலாம் நன்மை வாழ்வினிலே!
16-11-1995. லக்னோ.
அன்றாட நாட்குறிப்பை (டைரி) எழுதும்போது உள்ளதை உள்ளபடி எழுதாமல், என்னைப் பற்றிய பல காரியங்களை எழுதாமல் விடுகின்றேன் என்பதை எண்ணியபோது எழுதிய பாடல்:
53. உண்மை நிலை
உள்ளதை உள்ளபடி பகிர்ந்து கொள்ளும்
உத்தமன் எவனும் உலகில் இல்லை
ஊர்மெச்ச கூறுவோம் பல பொய்கள்
உள்ளது அவை மறைக்க வழி நம்மில்
பார்மெச்ச வேண்டுமென நடித்தோம் நாமும்
“பாவலன்” எனக் கூற மகிழ்ந்தோம் நாமும்
ஆ! என்சொல்ல நம் உண்மை நிலை
அந்தோ பரிதாபம் நம்மனதின் தன்மை
பெற்ற புகழினால் கர்வம் பெருகியது
கர்வம் பெருகியதால் கண்ணும் சொருகியது
குருடன் என உணரமல் வழிகாட்ட எத்தனிக்க
குழியில் விழுவதன்றி வழியும் வேரேது?
குற்றமில்லா மனசாட்சி, குறையில்லா வெளிவாழ்க்கை
மற்றவரை மதிக்கின்ற மாண்பான மனித நெறி
பணிவான வார்த்தை, பாசமுடன் சேவை
பாரில் இவையன்றோ பறைசாற்றும் நம்நெறியை
ஐயோ என்சொல்வேன் ஆடிடும் நாடகத்தை
போடுவதோ வேடம் மேடையில் ஆடும்வரை
ஆட்டம் முடிந்தபின்பு அனைவரும் சென்றபின்பு
வேடம் கலைந்தபின்பு, காண்கின்றேன் உண்மைநிலை!
13-12-1995
இந்நாட்களில் தென் தமிழகப்பகுதிகளில் நடக்கும் ஜாதி/குலச் சண்டை பற்றி எண்ணியபோது எழுதிய பாடல்:
54. நமக்கல்ல
"ஒன்றே குலமாகும்
ஒருவனே தேவனவன்"
நன்றே உரைத்தார்கள்
நானிலத்தவர்க்கு
ஒன்றே குலமானால்
குலத்தின் பெயராலே
குருதியும் பாய்வதுஏன்?
ஒன்றே தெய்வமென்றால்
இறைவன் பெயராலே
இத்தனை மதங்களும் ஏன்?
"சொல்லுதல் யார்க்கும்
எளிதாம், அறிதாம்
செல்லியவண்ணம் செயல்"
என்றே வளுவனும்
உரைத்த சொல்லதுவும்
உண்மை இவ்வுலகில்
கூறிடும் கொள்கையெல்லாம்
கூடிடும் மக்களுக்கே
ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கல்ல எனக்கல்ல
என்பதே உண்மை நிலை.
20-12-1995
பல சமயம் பத்திரிக்கைகளுக்கு நாம் அனுப்பும் கவிதை, மற்றும் கதைகளை--அங்கேயுள்ளவர்களே திருடி, சற்று மாற்றி வெளியிடுகின்றனர். இதைக்குறித்து எண்ணியபோது எழுதியது:
55. திறனிருக்கு
சொந்தமாகக் கவி எழுத
திறமை இல்லாவிட்டாலும்
திறனிருக்கு திருடுவதற்கு
பிறர் கருத்தை தனதாக்கி
சொல்லில் அதைவடித்து
உலா வருகின்றார் சிலர்
"புலவர்" என்ற பெயருடனே!
டிசம்பர், 1995.
உறக்கத்துடன் எனக்கு என்றுமே பெரும் போராட்டம். ஆனால் சிலசமயம் ஆழ்ந்து உறங்கி எழுந்தபின், இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஏங்குவேன். என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நேரமென்றால், நன்றாக உறங்குவது ஆகும். எனவே அதை விரும்பி எழுதிய பாடல்:
56. தூக்கமே
உண்மையான சுகம் உண்டு என்றால்
உறக்கமன்றி உலகில் வேறு இல்லை
என்னை மறந்து நான் தூங்கையிலே
இல்லை ஓர் போராட்டம் வாழ்க்கையிலே
உறக்கம் கலைந்தே நான் எழும்போது
உதித்திடும் ஓராயிரம் நினைவுகளும்
வரிசையில் வந்திடும் கவலைகளும்
வாழ்வின்மீதே ஒரு வெறுப்பு வரும்
அமைதியான ஓர் வாழ்வென்றால்
ஆழ்ந்துறங்கும் போதன்றி வேறில்லை
ஆயினும் இச்சுகமும் உண்மை இல்லை
நிரந்திரமாக உண்மையில் "தூங்கும்" வரை
என்று வருவாய் என ஏக்கமுடனே
எதிர்பார்க்கின்ற இவ்வேழையிடமே
வருகின்றாய் நீ வெகு தயக்கமுடனே
வாராயோ விரைந்தருகே ஆர்வமுடன்.
23-12-1995, லக்னோ
மனப்போராட்டம் என்பது யாருக்கும் தவிர்க்கமுடியாத ஒன்று. அதை எண்ணியபோது எழுதிய பாடல்:
57. போடு ஆட்டம்
எவ்வளவு கற்றாலும்
ஏதருள் பெற்றாலும்
மனமே உன்னோடு
உள்ளதே பெரும்பாடு
வேண்டாத நினைவுகள்
விரும்பாத செய்கைகள்
வேண்டாம் இனிஎன
வெறுத்த போதும்
செக்கு மாடுபோல்
மீண்டும் மீண்டும்
சுற்றியே வருகின்றோம்
ஓர் வட்டத்தில்
உன்னோடு போராடி
நான் ஓய்ந்தபோதும்
ஓயாது ஓர்நாளும்
உன்சுற்று மட்டும்
உடல் உள்ளவரை
போடு நீயாட்டம்
கட்டை சாய்ந்தபின்
அடங்கும் உன்கொட்டம்
24-12-1995. லக்னோ
ஜனவரி ஒன்றாம் தேதியை புது வருடமாக கொண்டாடும் வழக்கம் எனக்கு வேடிக்கையாக இருக்கும். இது குறித்து எழுதிய பாடால்:
58. ஊஞ்சலாட்டம்
போனது ஒருவருடம்
வந்தது "புது" வருடம்
புலப்படவில்லை என்றும்
புதுமை இதில் ஒன்றும்
வருவதும் போவதும்
வாழ்க்கையில் உண்மை
இடையில் நடப்பதோ
நாடக ஒத்திகை
போடும் வேடமோ
சிலமணி நேரமே
ஒத்திகை பார்க்கவோ
நாள் பல ஆகுமே
எத்தனை ஒத்திகை
பார்க்கினும் நாளுமே
ஆட்டம் முடிந்தபின்
அத்தனையும் மறையுமே
போடும் வேடமும்
ஆடும் நாடகமும்
பொழுது போக்காகும்
உண்மை வாழ்க்கையில்
மேடையும் நமதல்ல
கூட்டமும் நிலையல்ல
போடும் வேடமோ
சொப்பனம் ஆகுமே
கனவு நினைவிடையே
காலம் முழுவதும்
ஊஞ்சல் ஆடிடும்
உண்மை வாழ்க்கையே
01-01-1996 லக்னோ
Wednesday, August 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment