Thursday, September 29, 2011

116. நல்ல பங்கு

நல்ல பங்கை மட்டும் நாடிட வேண்டும்
நானிலத்தில் எனக்கு வேறென்ன வேண்டும்

தீய செயல்களை தூரவே நீக்கி
துன்மார்க்க வழியை அறவே போக்கி
மாறுபடும் மனதை நேர்வழியாக்கி
மனதின் இருளை என்றுமே நீக்கி--நல்ல....

கோபம் பொறாமை கோள்சொல்லும் புத்தி
கொடும் வார்த்தை பேசும் கடின இதயம்
சொல்லவும் கூசும் செயல்கள் யாவும்
செய்யாமல் இனியென்றும் உன்பாதம் நாடி--நல்ல....

01-07-2004. மத்திகிரி (ஓசூர்)

117. உறவாடவேண்டும்

உள்ளான உணர்வினிலே உன்னோடு உறவாடி
ஒவ்வொருநாளும் நான் வாழ வேண்டும்
உறவாட என்னிடம் நீ வரும்போது நான்
தடை ஒன்றும் போடாமல் காக்க வேண்டும்
அன்னையாய் என்னை நீத் தழுவிடும்போது
அழுகின்ற குழவியாய் நான் மாற வேண்டும்
தந்தையாய் என்னை நீ தட்டிக் கொடுத்திட
தாள் சேர்ந்து பணிவாக கற்க வேண்டும்
தனயனாய் எனக்கு நீ வழிகாட்டும் போது
தயங்காமல் உன் பின் செல்ல வேண்டும்
தோழனாய் என்னை நீ தோள்சேர்க்கும் போதிலே
தோள்மீது தலைசாய்ந்து கண்மூட வேண்டும்
காதலாய் என்னிடம் கனிவுடன் வரும்போது
கசிந்துருகி உன்மார்பில் தவழவேண்டும்
எத்தகைய உறவாக என்னிடம் வந்தாலும்
உள்ளான உணர்வோடு நான் வாழ்வேண்டும்!
03-07-2004. மத்திகிரி (ஓசூர்).

118. அருள்வாயே

இத்தனை அன்பும் இருந்து விட்டால் இறைவா
இத்தகைய வாழ்வும் வாழ்ந்திடு வேனோ?
எத்தனை குறைவாக என் அன்பு உள்ளது
என்பதைக் கூறவும் என்னாலே ஆகுமோ?

கண்ணீரால் உன்பாதம் நீராட்ட முடியாது
சிரம் கொண்டு உன்னடி சேவிக்க இயலாது
மனதுள்ளும் உன்னை கணநேரம் நினைக்காது
மனம்போன போக்கில் வாழ்கிறேன் இப்போது

கொஞ்சமோ மன்னிப்பு கொடுத்தாய் நீ எனக்கு
கூறவும் முடியுமோ என்பாவத்தின் கணக்கு?
எத்தனை மன்னித்தும் உன் மீது எனக்கு
உள்ளான அன்பில்லை என்பதே வழக்கு

மன்னிப்பின் தேவையை இன்னும் உணராமல்
மதிகெட்டு வாழ்கிறேன் மன்னவா அறியாயோ?
விடுதலை அன்றி வேறென்ன வேண்டுவேன்?
கரம் ஏந்தி நிற்கிறேன் கனிவாக அருள்வாயே!
06-07-2004. மத்திகிரி (ஓசூர்)

119. பணிகிறேன்

குருவாய் வந்து அருவாய் நிற்கும்
குமரா உன்னைத் தொழுகின்றேன்
மதியால் மட்டும் அறியா வண்ணம்
உறவால் உன்னைப் பணிகின்றேன்
கதியே என்று அடைந்தோர்க் கெல்லாம்
புகலிடமானாய்ப் புகழ்கின்றேன்
மன இருளை நீக்கி ஞானம் தந்தாய்
என்றும் உன்னைப் பணிகின்றேன்
18-08-2004. மத்திகிரி. (ஓசூர்)

120. அடையாளம் காணவேண்டும்

சரணம்

அடையாளம் நான் காண வேண்டும் ஐயனே
அனுதினம் என்னுடன் உறவாட வரும்போது--அடையாளம்....

பல்லவி

கனல் கொண்டு என்னுள்ளம் எரிய-நீ
கருணையால் ஒரு சொல்கொண்டு போதிக்க--அடையாளம்....

வழிப்போக்கன் போலவே வாழ்வில் நான்
வழி தெரியாது தடுமாறி நடக்கின்ற போதும்
கரம் கொண்டு என்னை நீ பற்ற, உன்
உடன் சென்று நானும் உலகையே வெல்ல--அடையாளம்....

தங்கவோர் இடமின்றி நீயும், உலகிலே
திரிந்தேதான் சேவையும் செய்தாய்
இடம் ஒன்று என்னிடம் உண்டு, நீ
இளைப்பாற என்னுள்ளம் ஒன்றேதான் என்று--அடையாளம்....

வர வேண்டும் அப்பனே நீயும், என்
மனம் கோயிலாய்க் கொண்டுமே வாழ
விடமாட்டேன் இனிஎன்றும் உன்னை, நீ
விரும்பியே வேறிடம் செல்லவே விழைந்தாலும்--அடையாளம்....
2004.

121. இல்லை இல்லையே

நாடவில்லை நாதனே நான் நின்னடி
நாடி என்னை நீ தேடி வந்ததால்
மனம் கூடவில்லை தொண்டர்குழாமொடு
குறைவும் பல என்னிடம் உள்ளதால்
ஓயவில்லை போராட்டம் என்னிலே
உள்ளபடி நான் உன்னை அறியாததால்
தேறவில்லை வாழ்விலே நானும் இன்னும்
தெய்வமே மனதில் உண்மை இல்லாததால்
ஒன்றும் செய்ய இயலவில்லை என்னால்
உன்னாவி தன்னை நான் இழந்ததால்
சொல்ல இயலவில்லை என்நிலை தன்னையே
சொற்களும் என்னுளே வெட்கி நின்றதால்
செல்வதும் வேறெங்கும் இல்லையே இனி
சேவடியன்றி வேறு நான் அறியாததால்
எவ்விதம் நான் இங்கு வாழ்ந்த போதும்
எல்லாமும் நீயும் உள்ளபடி அறிந்ததால்
கூற வரவில்லை மீண்டும் மீண்டுமே
கவலை என்மீது நீயும் கொண்டதால்.
12-09-2000. ஈரோடு

122. தா தா

உனக்குள் வாழும் உரிமையைத் தா
உன்னையே தொழுதிடும் மனதினைத் தா
உலகம் ஆயிரம் சொல்கின்ற போதிலும்
உன்னோடே நடந்திடும் துணிவினைத் தா
என்னையே துறந்திடும் அறிவினைத் தா
எனதென்ற எண்ணம் அழிந்திடத் தா
எல்லாம் உனதென்ற உணர்வினைத் தா
என்னையே அளிக்கும் உணர்வினைத் தா
"தா" வெனக் கெஞ்சியே உன்னிடமே
தாழ்மையாய் நான் வரும் போதினிலே
"வா" வெனக் கொஞ்சியே என்னையுமே
வாரியணைத்திடும் தாயாக நீ வா!
04-06-2000. ஓசூர்

123. தாங்குவாய்

பலவீனம் மீறி தாங்கட்டும்
பரனே உன் கிருபை என்றும்
பயனேதும் காணேன் இனி நானும்
என்பெலன் கொண்டு வாழுமட்டும்

தோல்வியும் வெற்றியும் மாறி மாறி
தொடர்ந்து வாழ்வினில் வந்த போது
பயமும் பெருமையும் வந்து சேர
கலங்கினேன் என்நிலையை எண்ணி

சீராக வாழ்க்கையும் சென்றிடாது
சிந்தையும் ஒருநிலை நின்றிடாது
போராடும் மனதுடனே வாழ்வதாலே
தடுமாற்றம் ஒன்றே நிலையானது

ஆயினும் உன்னடி தேடி வந்தேன்
ஐயனே நீயன்றி வழியும் காணேன்
தடுமாறும் மனதினை நிலை நிறுத்த
தயவுடன் தருவாய் அருளை நீயும்
04-07-2006. மத்திகிரி (ஓசூர்)

124. வென்றிடுவேனே

உலகை வென்றவன் நீயே-அதனால்
உலகை நானும் வென்றிடுவேனே
துன்பமும் துயரமும் தோல்வியும் சேர்ந்து
சோதித்து என்னை ஆழ்த்திய போதும்--உலகை....

அமைதி இழந்து அலைந்திருந்தேனே-அதை
பல இடங்களில் தேடித் திரிந்தேனே
கோபமும், மூர்க்கமும், தாபமும் தாக்கியே
தோல்வியில் என்னை ஆழ்த்திய போதும்--உலகை....

அமைதி என்பது உலகினில் இல்ல-வெறும்
ஆரவாரம் ஒன்றே வாழ்வினில் உண்மை
காயமடைந்தே உன்னிடம் வந்தேன்-உன்
ஆறுதல் ஒன்றிலே அமைதி அடைந்தேன்--உலகை....

29-08-2006. மத்திகிரி (ஓசூர்)

125. காரணம் வேறில்லை

காரணம் இனிஎதுவும் கூறிடமுடியாது
கள்ள மனம் கொண்டு செய்திடும் தீமைக்கெல்லாம்--காரணம்...

அறியாமல் இருந்தாலே தவறேதும் கிடையாது
புரியாமல் செய்தாலும் பிழையேதும் கிடையாது
தெரிந்தேதான் செய்கின்றேன், தேடியே செல்கின்றேன்
தீமை பலசெய்ய துணிந்தேதான் நின்றேன்--காரணம்....

பறிகாரம் பலத்தேடி பலவழி செல்கின்றேன்
சடங்குகள் பலசெய்து பிழையாகத் திரிகின்றேன்
மனதினுள் இருள்கொண்டு மாய்மாலம் புரிகின்றேன்
மனிதர்கள் காணவே வேடமாய் வாழ்கின்றேன்--காரணம்....

ஆயினும் ஓர்வழி உன்னிடம் கண்டேன்
ஐயனே அருள்தேடி உன்னடி வந்தேன்
தள்ளியே என்னை நீ தண்டிக்கலாகாது
நீயன்றி வேறொரு பரிகாரம் கிடையாது--காரணம்....
28-08-2006. மத்திகிரி (ஓசூர்)

126. ஆட்கொண்டாய்

இறை ஞானமாய் இவ்வுலகில் வந்து
என்னை ஆட்கொண்ட வள்ளலே
மன இருள் நீக்கி உன்தன் ஒளிதந்து
என்னைக் காக்கின்ற தெய்வமே
அறிவின் துணைக்கொண்டு உன்னைத்தேடி
அலைந்த காலங்கள் உண்டு
அர்சனை, பூஜை, நோன்பு, நியமமென
ஆயிரம் செயல் செய்ததுண்டு
இவை அத்தனையும் மனித எத்தனமாய்
எப்பயனும் தராத போது
உன்பக்தனைத் தேடி பரிவுகொண்டு நீ
பாங்குடனே உலகில் வந்தாய், நான்
எத்தனம் எதுவும் செய்திடாமலே, இனி
பக்தியால் மட்டும் உன்னைத் தொழ
பரிவுடன் அருள் தினம் தருவாயே!
24-05-2007. மத்திகிரி (ஓசூர்)

127. காப்பாய்


எனது பெலன்கொண்டு நான்
என்றும் வாழ இயலாது
உனது கருணை என்னும் துணை
கொண்டு வாழ முயலும்போது
மனது என்னும் குரங்கினோடு நான்
படும் பல பாடு எண்ணி
கலங்கிடாது காக்கவேண்டும் என்
கடவுளே உன் பெலத்தினால்

25-05-2007. மத்திகிரி (ஓசூர்)

128. இருக்கச்செய்யும்

குழந்தையாய் இருக்கச் செய்யும்-குணத்தில்
குருவே உன்தாள் பணியும் பக்தனாய்
இருக்கச்செய்யும், பரனே பாரில் உள்ளமட்டும்
தொண்டனாய் இருக்கச்செய்யும் சேவை செய்ய
தெய்வமே உன்சாயலாய் வாழச் செய்யும்
தேடுவோர் உனைக்காண ஓர்
கருவியாய் இளங்கச் செய்யும் கடைசி மட்டும்
களங்கமில்லாமல் வாழ ஓர் குழந்தையாய்...

24-08-2007. குருகுலம்

129. தரவேண்டும் நிறைவாய்

வரவேண்டும் வரவேண்டும் இறைவா
அருள் தரவேண்டும் தரவேண்டும் நிறைவாய் நிறைவாய்

அறிந்தேதான் பிழைபல செய்தேன், நான்
அறியாமல் பல பாவம் செய்தேன்
மனதாலும் நினைவாலும் அழிந்தேன், என்
மதிபோன போக்கிலே நடந்தேன், நடந்தேன்--வரவேண்டும்.....

விடைதேடி வாழ்விலே திரிந்தேன், ஆனால்
வழிமட்டும் தெரியாமல் திகைத்தேன்
குணத்தாலும் நலத்தாலும் குறைந்தேன், மனக்
குருடனாய் ஏனோ நான் வாழ்ந்தேன் வாழ்ந்தேன்--வரவேண்டும்.....

முறையிட உன்னிடம் வந்தேன், என்
முரண்பாட்டை சொல்லியே நின்றேன்
இரங்காதோ உன்மனம் இன்னும், ஏன்
வீணிந்தத் தாமதம் இன்னும் இன்னும்--வரவேண்டும்.....

04-12-2007. குருகுலம்

130. விளக்கிட முடியுமோ

கற்பனைக் கதைகளை நம்பவில்லை-நான்
கல்லையும் மண்ணையும் பணிவதில்லை
நிச்சயமாய் உலகில் வந்த உன்னை-என்
நெஞ்சிலே வைத்துமே வாழ்கிறேன்

சித்தமென்று ஒன்று உண்டுனக்கு-அதை
செய்திட என்னையே தெரிந்தாய்
அத்தனே அனைத்தையும் அறிந்த நீ-என்
புத்தியின் செயலிலே ஆளுகின்றாய்

செய்திடும் செயல்களை நானறிவேன்-அவை
செய்திட மட்டுமே துணைபுரிந்தாய்
புத்திக்கெட்டாத உன்பேரருளை-என்
பக்கியின் உணர்விலே காட்டுகின்றாய்

மனம் மொழி செயல்களை அறிந்ததால்
மனிதனாய் உலகில் நீ வந்தாய்-என்
குறைகள் அனைத்தும் உணர்ந்த உனக்கு
கூறிடவேண்டுமோ நான் கணக்கு?

முக்திக்கு ஈசனாய் வந்தவனே-உன்னை
முழுமையாய்ப் புரிந்தவர் எவருமில்லை
சிந்தைக்கு எட்டாமல் நின்ற உன்னை-என்
சொல்கொண்டு மட்டுமோ விளக்கிடுவேன்?

17-12-2007. குருகுலம்

131. தேடுகிறேன்

பாடுகிறேன் உன் பரமபதம் தேடி
பக்தியால் மட்டும் அனுதினம் நாடி
ஓடுகிறேன் பல தேவைகள் தேடி
ஒருவழி காணாமல் திகைக்கிறேன் வாடி
யாரிடம் சொல்வேன் என்தன் நிலையை
இப்புவி வாழ்வே மாபெரும் தொல்லை
ஆயினும் விடவில்லை இதன்மீது ஆசை
என்றுதான் முடியுமோ மனதின் இவோசை
10-11-2007. குருகுலம்

132. எல்லாம் நீ

அம்மை நீ அப்பன் நீ
அருள்காட்டும் தெய்வம் நீ
இம்மை நீ மறுமை நீ
இருள் நீக்கும் ஒளியும் நீ
வாய்மை நீ வழியும் நீ
வாழ்வளிக்கும் ஜீவன் நீ
முதலும் நீ முடிவும் நீ
முக்திக்கு ஈசன் நீ
தொன்மை நீ தொடக்கம் நீ
தொடக்கத்தின் முடிவும் நீ
அருளும் நீ அபயம் நீ
ஆனந்தத்தின் எல்லை நீ
கருணை நீ கடவுள் நீ
காக்கின்ற தெய்வம் நீ
தருமம் நீ தலைவன் நீ
தயைகாட்டும் அன்னை நீ
இறுதி நீ எல்லை நீ
இனி அனைத்தும் நீ எனக்கே
22-07-2008. குருகுலம்

எல்லாவற்றிலும் முதல் பங்கு இறைவனுக்கே என்ற வாதத்தை கேட்டபோது எழதிய பாடல்

133. எல்லாம் உனதே


முழுதும் உனதானால்
முதன்மை எதுவாகும்
கணக்கிட்டுக் கொடுப்பதும்
கருமியின் செயலாகும்

முழுதும் தந்தாய் நீ
முறையிட்டு அளக்காமல்
நான்மட்டும் தரும்போது
விரல்விட்டு எண்ணுவதோ?

காணிக்கை பெயராலே
காசுகளை எண்ணிநான்
ஆலயத்தில் அளித்துவிட்டால்
அத்துடன் முடிந்ததுவோ?

நேரத்தில் முதல்பங்கு
எதுவென்று சொல்லுவது
காலைமாலை மதியமெல்லாம்
கணக்கிடும் முறைதானே!

எண்ணாமல் உன்னையே
எனக்கே அளித்தாய் நீ
எனது என்று இல்லாமல்’
இனியெல்லாமே உனதேதான்!
06-11-2008. குருகுலம்

No comments: