Monday, September 26, 2011

87. எல்லாம் அளித்தாய்

உள்ளம் அளித்தாய்
உணர்வும் அளித்தாய்
உன்னருள் தன்னை
உவந்தே அளித்தாய்
எண்ணம் அளித்தாய்
ஏற்றம் அளித்தாய்
ஏழைக்கு இறங்கி
ஞானம் அளித்தாய்
சிந்தை அளித்தாய்
சீலம் அளித்தாய்
சீர்பட வேண்டியே
சித்தம் வைத்தாய்
எல்லாம் அளித்து
ஏழை எனக்கு
உன்னை அளித்தாய்
உவப்பாய் நீயே!
உள்ளம் எண்ணம்
சிந்தை எல்லாம்
உவப்பாய் நானும்
உன்னில் வைக்க
என்றும் வைப்பாய்
என்மீது இறங்கி
ஐயனே உன்
கிருபை தன்னை!
ஈரோடு, 28-08-1996.

88. பேதைக்கிறங்கு

தடுத்து நீ ஆட்கொள்ள
தலைப்படாவிட்டால்
கெடுத்து எனில்நானே
கெட்டொழிவேனே!
எடுத்து இனிக்கூறி
இயம்பிட வேண்டுமோ?
வடுக்கள் சுமந்தெனக்காய்
சிலுவையில் தொங்கியவா?

குற்றம் குறைஒன்றோ
கண்டாய் என்மீது
கோடியே அவையாவும்
எண்ணிட முடியாது
அத்தாநீ அத்தனையும்
அறிந்த பின்னாலும்
பித்தன் எனைநீயே
புறப்பதுவும் முறையாமோ?

குறைகூறி உன்னில்
முறை இடவில்லை
குருவே மறுவழியன்றி
திருவடி வந்தேனே!
என்ன கூறியினி
ஏழை புலம்பிடுவேன்
அண்ணலே ஆட்கொள்வாய்
அன்றுபோல் மீண்டுமெனை

ஞானியும் அல்லநான்
பேதையும் இல்லைஇனி
மனவேழையாய் ஆகிவிட்ட
கோழையே என்றுமினி
பாவிகளைத் தேடியே
பார்வுலகில் வந்தவனே!
கூறிடத் தேவையோஎன்
குற்றங்கள் அத்தனையும்?

முப்பத்தி எட்டாண்டு
முடமாகி இருந்தவனை
பரிவோடு தேடிச்சென்று
பாங்கான சுகமளித்தாய்
அத்தனை கருணைஇங்கு
அருளாவிட்டாலும்
ஓர்வார்த்தை கூறியே
உயிர்பிப்பாய் மீண்டுமெனை

நான்கேட்டு நீவந்து
நாதனே உதவிசெய்தால்
கைகொட்டி எக்களிப்பார்
குவளயத்து மாந்தருமே!
மாந்தர் நிலையுணர்ந்து
மனுவாய் வந்துனக்கு
என்நிலைத் தெரியாதோ?
ஏன்னிந்தத் தாமதமோ?

விட்டுப் பிடிப்பதெல்லாம்
சிறுபிள்ளை விளயாட்டு
இனிவேண்டாம் என்னிடம்
உன் அவ்விளையாட்டு
தட்டுத் தடுமாறி
கரையேறும் முடவனிடம்
இன்னுமா வேடிக்கை
இதுஎன்ன விளையாட்டு?

கூறத் தெரியாமல்
குழந்தைபோல் புலம்புகின்ற
ஏழையென் வார்த்தைகளை
ஏற்கா விட்டாலும்
உன்பக்தன் என்பதனால்
தன்மதிப்பை காத்திடவே
உடனே இறங்கிவிடு
உரிமையால் கேட்கின்றேன்!

தாயைப்போல் என்மீது
நீகொண்ட தயைஎங்கே?
தாசனாம் என்மீது
நீவைத்த பரிவெங்கே?
நேசன்போல் உன்மார்பில்
நான்சாய்ந்த சுகமெங்கே?
நீசனாய்ப் போனதால்
நீயும் கைவிட்டாயோ?

புலம்பித் தவிக்கின்ற
புலையன் மனநிலையை
புரிந்த பின்னாலும்
ஏனிந்த வீண்மொளனம்
ஆயிரம்முறை நான்கூற
அறியாதவன் நீயல்ல
ஆயினும் கூறுகிறேன்
பேதைக்கு நீ இறங்கு!
(ஆயினும் கூறிடுவேன்
பேதைக்கு இறங்கும்வரை)

04-10-1997. மஹரி (ரீவா. ம.பி)

89. போராட்டம்

உன்னோடு போராட வேண்டும்-அது
உவப்பாய் எனக்கிருக்க வேண்டும்
உடலோடு, உளமோடு போராடி ஓய்ந்தபின்
உன்னோடு போராட வேண்டும்!

விட்டேனோ பார் உன்னை என்றும்
விடாமல் பிடிவாதமாய் நின்று
போராடியேனும் நான் பெறவேண்டும்
அந்த புண்ணியம் நீ தரவேண்டும்

வலியவந்தென்னை ஆட்கொண்டு
உன்வழியை காண்பித்து-அதில்
தொடர்ந்து நான் முன்னேற
தெய்வமே உன் அருள்வேண்டும்

உலகின் போராட்டம் எல்லாம்
ஓயாது ஒருநாளும் தன்னில்-ஆனால்
உன்னோடு போராடி பெற்ற அருளினால்
வெல்வேனே அதனை நான் என்னில்
ஜெய்நகர் (மதுபனி. பீஹார்) 17-02-1997.

90. எது வேண்டும்?

ஓயாத உன்னருள் வேண்டும்
உலகம், மாமிசம், பிசாசென்றே
ஒவ்வொருநாளும் தாக்கிடும் போது
ஒருபோதும் மாறாத உன்னதமான--ஓயாத....

பக்தனாய் வாழ்ந்திட வேண்டும்
பலகற்றுத் தடுமாறும் மதியினைச் சாராமல்
தடுத்தாட்கொண்ட உன் தயவினால்
மனதுருகி உன் மாண்பினை எண்ணிடும்--பக்தனாய்....

முக்தியினை நீயருள வேண்டும்
செத்தபின் செல்லும் சொர்கத்தை எண்ணி
நிதமும் வாழ்கின்ற நிலையில்லா வாழ்வு
நரகமாய் மாறிடும் நிலையினை மாற்றிடும்--முக்தியினை....

அத்தா வேறென்ன வேண்டும்?
அடியவன் உன்பக்தன் என்றபெயர்
அடையாமல் வேறெந்த மாண்பும்
அறியாமல் கூட மனதினில் நாடாமல்--அத்தா....
05-04-1997. மன்கவா (ரீவா. ம.பி)

91. உயிர்த்தெழுந்தபின்

உள்ளான அந்த உணர்வில் என்றும்
உனதருளை நான் பெறவே வேண்டும்
உயிர்த்து எழுந்த உன் வல்லமையை
உவந்து நீ எனக்கருள வேண்டும்
உன் மரணத்திற்குள்ளாக மரிக்கும்
மஹிமையை நான் அடைய வேண்டும்
மனிதர்க்காய் துன்பத்தை ஏற்கும் உன்
மர்மத்தை நான் இங்கறிய வேண்டும்
உலகம் இதுவரை அறியாத இந்த
உண்மையை பிறர்க்கு உரைக்க வேண்டும்
உயிர்த்து எழுந்த தெய்வமே அதற்கு
உன்னுடன் நான் ஒன்றாக வேண்டும்
உனக்குள் மரித்து எழுந்த பின்னே
உலகில் நான் வாழ்கின்ற போதும்
உலகம் என்னுள் மரிக்க என்றும்
உனக்காக நான் தினம் வாழ்வேண்டும்
அடைந்து விட்டேன் என்று எண்ணியே!
என்னுள்ளே சும்மா இருந்து விடாமல்
தேறிய வரையிலே நாளும் நான்
தொடர்ந்து உன்பின் ஓடிடவேண்டும்.
மஹரி (ரீவா. ம.பி), 30-03-1997. பிலிப்பியர் 3:7-16.

இவ்வளவு தெய்வங்கள் நம்மிடை இருக்க, நீ ஏன் முக்தேசன் பக்தனாக மாறினாய் என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றது. அதற்கான ஒரு பதிலாக எழுதிய பாடல்

92. முக்தேசன் பின்னே

நூறாயிரம் தெய்வம் நம்மிடை இருக்க
நீ ஏன் சென்றாய் முக்தேசன் பின்னே?
இக்கேள்வி தன்னை என்னிடம் கேட்காதீர்
ஏனென்றால் பதிலும் அறிவீர் நீர்தானே!
எதனால் புவியில் மனிதனாய் வந்தானோ
அதனால் குருவாகி நின்றானே என்வாழ்வில்
நாடியே நான்செல்லவில்லை அவன்பின்னே
தேடியலைந்தேனே தெய்வத்தைக் காண
தெளிவாய்த் தெரியாமல் அலைந்தேன் என்போக்கில்
அறியாத இருந்த அக்காலத்தை மன்னித்து
அவனாகத் தேடி வந்தானே என்வாழ்வில்
தேடிவந்தவனை "சீ" எனனத் தள்ளுவதோ?
என்தேவை உணர்ந்து அவன்பின் செல்லுவதோ?
தெரிவை என்னிடம் அவன் தந்த பின்னாலே!
தெளிவாய் ஆராய்ந்து சென்றேனே அவன்பின்னே!
17-06-1997. ஈரோடு

93. போராடத் தயங்கமாட்டேன்

நம்மிடை போராட்டம்
நாலுபேர் அறியார்
நான் என்செய்வேன்
நாதனே இனிமேலே
போராடும் மனதுடனே?
எத்தனகாக வாழ்ந்து
தத்தளிக்கும் என்னிடம்
எதுவரை நீபொறுப்பாய்?
சத்தமிட்டே உன்னை
சண்டைக் கழைத்தாலும்
சித்தம் இன்னும்
இறங்கவில்லையோ?
நொண்டியாய் ஆவேனே
என்றே அஞ்சியே!
தள்ளியே நிற்கிறாயோ?
நடமாட முடியாது
முடமாகிப் போகாமல்
நாதனே நீயிறங்கி
நொண்டியாய் ஆக்கிடு
என்று வேண்டியே
சண்டைபோட வந்தேன்
நாலுபேர் அறிய
போராட வேண்டாம்
நல்லபடி கூறுகின்றேன்
ஆயினும் அதுவே
உன்சித்தம் என்றால்
தயங்கிடமாட்டேன்
அதற்கும் நானே!
17-06-1997. ஈரோடு.

94. இயலவில்லை

ஏறெடுத்துப் பார்க்கவும் இயலவில்லை
என் பாவங்களை நினைக்கையிலே
தூரநிற்கவும் துணியவில்லை ஐயா
தொடர்ந்திங்கு பாவத்தில் வாழ்வதாலே!
வேறெங்கு போவேன் வழியேதுமில்லை
மனவேதனைக் கூற மொழியிங்கு இல்லை
"நீதிமான்" என்றே நீ கூறவேண்டாம்
நன்கறிவேன் அதற்கு நான்தகுதி இல்லை
உன்நீதி தன்னை உணராமல் நானும்
ஊர்மெச்ச வேண்டி என்நீதி கூற
பரிசேயன் போலவே பலமுறை நின்று
சுயநீதிமூலம் சோரமே போனேன்
ஆயக்காரன் போல் ஆதங்கம் கொண்டு
ஆலயம் தேடி நான் ஓடவில்லை
நீதேடி வந்து மீட்காவிட்டால்
நான் உய்ய இனி வழியேதுமில்லை
தில்லி. 10-09-1997

95. என்ன செய்வேன்?

வருகின்ற நேரத்தை அறிந்திருந்தால்
விழித்திருப்பேனே உன்னை வரவேற்க
வரும்போது வரட்டும் எனயெண்ணி
சற்றெ அயர்ந்தேன் இளைப்பாற
புத்தியில்லா அப்பெண்களைப் போல்
புலம்பக்கூடாது பின்னே என்று
தீபமுடன் எண்ணைய்யும் கொண்டுவந்தும்
தூங்கும்முன் மறந்தேனே எண்ணை ஊற்ற!
வாக்களித்தபடி நீ வந்தபோது
வாடினேன் நான் கண்விழித்த போது
தூங்கிய காரணத்தால் எண்ணைய்யும் குறைந்தது
தூண்ட மறந்ததால் தீபம் அணைந்தது!
இருட்டிலே விளக்கினைத் தேடும்போது
கைதட்ட எண்ணைய்யும் கீழ்சாய்ந்தது
தீப்பெட்டி தடவிநான் எடுத்த போது
தவறிவிழுந்தது அது எண்ணெய் மீது
தீப்பெட்டி, தீபமுடன் எண்ணைய்யுமே
என்னிடம் இருந்தும் என்ன பயன்?
என்தவறினால் அவற்றை இழந்தபின்பு
ஒன்றுமே உதவவில்லை நீ வந்தபோது!
ஒருமுறை இருமுறை என்றில்லாமல்
பலமுறை இத்தவரை செய்ததினால்
பழகிவிட்டதால் இருட்டு கூட
சோர்ந்து விட்டது மனது கூட
என்ன செய்வேன் இந்நிலையில்?
அவசர(எமெர்ஜெச்சி) விளக்குகூட இல்லை கையில்
வழக்கம்போல் நீயே தேடிவந்து
வழிகாட்டு உன் ஒளியதனால்.
15-09-1997. லக்னோ (உ.பி)

96. கூடவே போராடு

எதிலும் ஓர் குறைவில்லை ஸ்வாமி
எல்லாம் எனக்கு நிறைவாய்த் தந்தாய்.
அழகைத் தந்தாய், அறிவைத் தந்தாய்
அமைப்பாய் ஓர் வடிவைத் தந்தாய்
மதியுடன் பல திறமைகள் தந்தாய்
மாண்புடன் வாழவே வழியும் தந்தாய்
எல்லாம் தந்தது போதாதென்று
உன்னையும் தந்தாய் உய்யவேண்டி
கேட்காமலே எல்லாம் தந்தநீ
கேட்டும் ஒன்றை ஏனோ மறுத்தய்
குட்டும் தூதனாய் கூடவே என்னுடன்
முள்ளாய் வாழும் "சுயத்தை" மட்டும்
கிள்ளி எறிய பலமுறை வேண்டியும்
ஏனோ இன்னும் இறங்க மறுத்தாய்
என் குறையில் உன் பெலன் விளங்க
பல வழிகள் உனக்கே இருந்தும்
ஏனோ வைத்தாய் இப்போராட்டத்தை
என்ன செய்வேன் இனி புரியவில்லை
"என்கிருபை உனக்குப் போதும்"
என்றுமட்டும் கூறி ஒதுங்கிடாதே!
கூடவே வந்து என்னுடன் போராடு
உன்குணம் என்னில் காணும் வரை!
15-09-1997. லக்னோ (உ.பி)

97. மறுவழி ஏது?

உன்சித்தம் என்னவென்று அறியாமலே
ஓராயிரம் செயலை முன்வைத்தே நாளும்
ஓடியே திரிகின்ற பேதைக்கு இறங்கி
ஓர்வழி காட்டுவாய், வேண்டினேன் நானும்.
சஞ்சலம் கொண்ட மனதுடனே வாழ்ந்து
சரியான பாதை எதுவென அறியாமலே
மதிகாட்டும் வழியிலே மனதையும் செலுத்தி
ஓடுகின்ற பேதைக்கு ஓர்வழி காட்டு
அறியாமல் செய்த பிழை என்றேகூறி
ஐயனே வரவில்லை உன்னடித் தேடி
தெரிந்தே செய்தபிழை என்பதால்தானே
தேடினேன் உன்னடி முக்தேசன் நானே!
ஓர்நாள் இருநாள் என்றே இல்லாமல்
ஒவ்வொருநாளும் போராடு கின்ற
உன்னடியானுக்கு உதவவில்லை என்றால்
உய்ய வழிவேறுண்டோ உன்னருளுமன்றி?
28-02-1998. துர்காபூர் (மேற்கு வங்கம்)

98. வாழ வேண்டும்

இந்நாளிலும் நீதந்த வாழ்வினை
வாழ்ந்திட வேண்டும் உன்துணை
அந்தந்த நாளில் வந்து சேர்ந்திடும்
காரியங்களை எண்ணிடும் போதிலே!
சொந்த பெலத்தில் செய்து முடிக்க
துணிவுகொள்ளாது உன்னருள் நாடி
வந்து நிற்கும் அடியேனுக்கிறங்கி
வரவேண்டும் நீயும் வழிவேறு இல்லை!
19-06-1998. ஈரோடு.

99. உன்னருள் வேண்டும்

அனுதின வாழ்வில் உன்னருள் ஒன்று போதும்
ஐயனே எனக்கிங்கு இனிவேறென்ன வேண்டும்?
பொல்லாத உலகினில் போராடும் போது உன்
பெலன்மட்டும் வேண்டும் புனிதனே நாளும்
எல்லாம் நிறைவாக நடந்திடும் போது
என்மனம் நாடாது உன்னருள் வேண்டி
பொல்லாத உலகினில் சிறு போராட்டம் வந்தால்
உடன் புலம்பிடும் மனம் நாளெல்லாம் வேண்டி
நன்றே, தீதே வறினும் நான் அதை எண்ணி
கலங்காமலே உன்சித்தம் ஒன்றே நிறைவேற
என்சிந்தை சரீரத்தை நீயாள நாடி
எப்போதும் வரவேண்டும் உன்னடி தேடி
14-08-1998. ஈரோடு

100. உன் சுதந்திரம்

ஒருநாள்போய் மறுநாள் வந்தது
உன்னருளாலே எல்லாம் கிடைத்தது
இந்நாளும் நன்நாளாயிருக்க
ஐயா அருள்வாய் உன்தயவிருக்க
வாழ்வின் நோக்கம் இதுதானென்று
வகையாய்க் கூறியவர் எவரும் இல்லை
நோக்கம் இன்றி நீ படைக்கவும் இல்லை
இதையுணர்ந்தால் தொல்லை யில்லை
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே-ஆனால்
வகையாய் அதை உணர்ந்தவர்க்கே
சுயநலம் கருதியே வாழ்ந்திருந்தால்
அதுபோல் நரகம் வேறு இல்லை
உண்ண, உடுத்த உடல்சுகம் தேட
உரிமையுள்ளது அனைவருக்கும்-ஆனால்
பிறர் நலம் அழித்து அவற்றை அடைய
உரிமை இல்லை இங்கு எவருக்கும்
தன்னுரிமைக்காய் போராடும் நீ
தயவாய் அறிவாய் ஒரு நீதி
உன்கைகோலின் சுதந்திரம் என்பது
அடுத்தவர் மூக்கின் எல்லை வரை
இந்த நீதியை இறைவா நீயும்
உன்நெறிமூலம் உலகில் வைத்தாய்
அந்நெறியின்படி அனுதினம் வாழ
அருளைத்தருவாய் மீண்டும் ஒருமுறை!
19-03-1999. மஹரி (ரீவா. ம.பி)

No comments: