Friday, September 23, 2011

24-08-1993 மத்தேயு 8:19-22 வாசகங்களை தியானித்தபோது எழுதிய பாடல்:

55. பின்செல்

தலைசாய்க்க இடமே இல்லை
தரணியில் இறை மைந்தனுக்கு
அனைத்தையும் படைத்த உனக்கு
அண்டிட இடமில்லை இங்கு!
உன்பின் செல்கின்ற எமக்கு
இதுவே நீ நியமித்த கணக்கு.
"எங்கே சென்றாலும் பின்னே
ஏகிடுவேன்" என்ற போதும்
"எஞ்சிய செயல் ஒன்று உண்டு
என்னை ஈந்திட்டவர்க்கு
ஈமக்கடன் செய்யும் வரை
என்னாலாகாது உன்பின் செல்ல"
என்றுரைத்து நின்றபோது
"இறந்தோரை சுமந்து செல்ல
எத்தனையோபேர் உண்டு உலகில்
மரித்தோரை மரித்தோர் எரிப்பர்
மாறாத மாந்தர் செயலை
செய்திட உனக்கில்லை நேரம்
செல்வாய் என்பின்னே நீயும்"
சொல்லிய இறைமகன் தானும்
சென்றானே தன்கடன் செய்ய
திகைத்தே நின்றிட்ட சீடன்
செய்திட்ட தீர்மானம் என்ன?
பதிலேதும் வேதத்தில் இல்லை
பரிகாரம் அவனிடம் இல்லை
பகிர்ந்திடக் காரணம் பலவே
பாங்காய் நம்மிடம் உண்டே!
ஏர்மீது கைவைத்த பின்னே
திரும்பிட நேரமே இல்லை
விரைவோமே அவன்பின் நாமும்
வெகுதூரம் செல்லும் முன்னே!

போராட்ட மற்ற நாளே, நேரமோ மனித வாழ்வில் இல்லை. அதுவும் ஆன்மீக வாழ்வில் ஜான் ஏறினால் முழம் சறுக்குதல் என்பது இயல்பான ஒன்று. இச்சூழ்நிலையில் இறைவன் பாதம் பிடிப்பதுவன்றி வேறு வழியும் இல்லை. முக்தேசனுக்குள்ளாக நாம் ஏற்கனவே வென்றவர்கள். எனவே தோல்வியையும் அப்படியே ஏற்காமல், அதேசமயம் சுயபெலத்திலும் நிற்காமல் இறைவன் பாதம் சரணடைவதுமட்டுமே ஒரு பக்தனின் இயல்பு:

56. ஏற்கேன் தோல்வியை

கதறிடும் ஏழைகுரல் கேட்கலையோ?
கடினப்பட்டதோ உன்மனம் இங்கு?
காரணம் உண்டே என்னை நீ வெறுக்க!
பதிலில்லை என்னிடம் அதையே மறுக்க
உலகம் மாமிசம் பிசாசு என்று
என்னிடம் போராடும் சக்திபல உண்டு
அவற்றை மேற்கொள்ள ஆகாதுஎன்று
அண்டினேன் திருவடி கலங்கியே நின்று.
நீ எனக்களித்த வாக்கினை நினைந்து
நாடினேன் மாறாத கருணையில் நனைந்து
தள்ளிடாதே என்னை சற்றேனும் மறந்து
தவிக்கின்றேன் என்நிலை தன்னையே நினைந்து
நிலையான புத்தி என்னிடம் இல்லை
உனக்கதை உரைக்கத் தேவையும் இல்லை
வாக்கினைப் பற்றியே வாழவும் இல்லை
வருந்திய செயலுக்கோ எல்லையும் இல்லை
ஆயினும் நான்செய்ய அறிவேனே ஒன்று
தோவிதனை அப்படியே ஏற்காமல் இன்று
தோள்தட்டி நின்றேன் உன்பெலன் கொண்டு
தோற்பதோ நிச்சயம் நானில்லை என்று
துணிவாகத் தெரிந்தபின் உறுதியாய் நின்று
எதிர்த்திடத் துணிந்தேன் தைரியம் கொண்டு
எனவே தோல்வியே இல்லையே என்றும்!

25-08-1993. டா (உ.பி)

உள்ளம், எண்ணம், நோக்கம், செயல் ஆகிய அனைத்திலும் உண்மையாய் இருக்கவேண்டும் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

57. உண்மை வேண்டும்

பல்லவி

உள்ளத்தில் உண்மையே வேண்டும்
உத்தமனே உன்னைப் பற்றி நடந்திட--உள்ளத்தில்....

சரணம்

எத்தனை பலவீனம் என்வாழ்வில் வந்தாலும்
எவ்வளவுமுறையே தடுமாறி வீழ்ந்தாலும்--உள்ளத்தில்....

கவி

உள்ளத்தை அறிந்தவன் நீ
உன்னிடம் மாறைத்து
ஓர்செயல் செய்வதாய்
என்னை நானே
ஏமாற்றிக் கொள்ளாமல்--உள்ளத்தில்....

எண்ணத்தை அறிந்தவன் நீ
மனம்போன போக்கிலே
மருவியே வாழாமல்
மாய்மாலம் எதுவுமே
வாழ்விலே செய்யாமல்--உள்ளத்தில்....

நோக்கத்தை அறிந்தவன் நீ
பிறர்நலம் கருதியே
உழைப்பதாய்க் கூறியே
சுயநலம் கருதியே
காரியம் செய்யாமல்--உள்ளத்தில்....

25-08-1993.. கோண்டா. (உ.பி)

58. இதயத்தின் நிறைவு

உதடால்மட்டும் துதித்தால் போதுமோ?
உள்ளம் உன்னிடம் வந்தே சேராமல்?
ஊர்மெச்ச நாமும் வாழ்ந்தாலே போதுமோ?
உண்மை ஒன்றும் வாழ்க்கையில் இல்லாமல்!
குருடருக்கு வழிகாட்டும் குருடர் போலவே
குவளயத்தில் பலர் போதனை செய்கிறார்
இடறுவார் அவர் ஒருவரில் ஒருவர்
இகத்தில் இதுவென்றும் மாறாத உண்மையே!
அகத்தில் அசுத்தம் ஆயிரம் இருக்கையில்
ஆடம்பரம் என்ன புறம்பான செயலில்
இதயத்தில் உண்மை என்றும் வேண்டும்
ஐயனே அதற்கு நீ உதவிடவேண்டும்!
இதயத்தின் நினைவால் வாயது பேசும்
இதைஉணர்ந்தே நான் இங்கு நன்று
தீட்டுள்ள இதயம் தூய்மை பெறவே
தூயவா உன்னருள் நாடினேன் இன்று
31-08-1993. கோண்டா (உ.பி)

59. உன் பிள்ளையாய்

அறிவால் உன்னை அறிந்திட முடியுமோ
ஆன்மாவில் உண்மைத் தாகமே இல்லாமல்
ஆயிரம் கற்றாலும் உன்னருள் கிட்டுமோ?
ஆவியில் எளிமை என்னிடம் இல்லாமல்!
புவியின் ஞானியைப் புறம்பேத் தள்ளி
புலப்பட்டாய் நீயும் பேதையாம் எனக்கு
பாலகன் என்வாயின் துதியே உனக்கு
உவப்பாய் இருப்பதும் என்ன கணக்கு?
இவ்வருள் ஒன்றையே என்வாழ்வில் என்றும்
முத்தேசனே இறங்கி அருளிட வேண்டும்
உன்மடி மீதில் வளர்ந்திடும் பிள்ளையாய்
உலகில் என்றும் வாழ்ந்திட வேண்டும்!

31-08-1993. கோண்டா (உ.பி)

"ஹேபரமேஷ்வர் சரணு துமாரி" என்ற ஹிந்தி பாடலைத் தழுவி எழுதப்பட்டது:

60. என் கதை சொல்ல

திருவடி தன்னைத் தேடியே வந்தேன்
என்மன வேதனை உன்னிடம் சொல்ல
உன்னிடம் மறைக்க ஒன்றுமே இல்லை
உள்ளம் முழுதும் நீ அறிந்ததினாலே
உருக்கம் நிறைந்தவன் என்பதினாலே
உன்னிடம் வந்தேன் என்கதை சொல்ல--திருவடி....

உள்ளொளி நீயே என்மனதினிலே
உண்மை வழி நீ உத்தம நண்பன்
உன்னிடமன்றி யாரிடம் சொல்வேன்
உள்மனப் பாரம் துன்பங்கள் யாவையும்--திருவடி....

அன்பின் கயிற்றால் உன்னுடன் பிணைத்தாய்
முக்திவழிதனை எனக்காய்த் திறந்தாய்
எனக்காய் உனது இன்னுயிர்த் தந்தாய்
அதனால் வந்தேன் இக்கதை சொல்ல--திருவடி....

13-09-1993. கோண்டா (உ.பி)

18-09-1993 (கோண்டா) அன்று இரவு இரண்டு மணிக்கு மீண்டும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியின் காரணமாக வியர்க்க ஆரம்ப்பித்து மயக்கம் வந்தது. அருகில் யாரும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டேன். மறுநாள்காலை தொடர்ந்து வயிற்று வலியால் கஷ்டப்பட்டபோது, காலை தியானத்தில் இப்பாடலை எழுதினேன்:

61. ஓர் புலம்பல்

ஏன் என்று கேட்கவில்லை ஐயா
என்வாழ்வில் இத்துன்பம் ஏன்வைத்தாய் என்று?
உன்சித்தம் ஒன்றே வாழ்வில் நிறைவேற
ஒப்புவித்தேன் அன்றே உன்கையில் நிறைவாக
ஆனாலும் துன்பம் மிகவாகும் போது
என்செய்வேன் உன்னிடம் புலம்புதல் அல்லாது?
முணுமுணுக்கவில்லை முறண்பட்டே நானும்
முனகுகிறேன் இவ்வலி தாக்கிடும் போதும்
அறிந்தவன் நீயே அத்துன்பம் தானும்
அதனாலே வந்தேன் சிறுபிள்ளை நானும்!
மடிமீது தலைவைத்து தலைகோதி மெல்ல
"மகனே" எனக்கூறி ஆறுதல் சொல்ல
தாய்யன்றி இங்கு தனிமையில் உள்ள
சேய்க்கு நீயன்றி யாருள்ளார் சொல்ல?

26-10-1993 (கோண்டா)-அன்று சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டி இருந்தது. எதிர்காலம் பற்றிய சில கேள்விகளும் தோன்றின. ஆனால் அனைத்தையும் இறைவனிடம் கொண்டு சென்றபோது எழுதிய பாடல்:

62. எது வேண்டும்

இது வேண்டும் அது வேண்டும்
என நிதம் பல வேண்டாமல்
எதை நான் செயவேண்டும்
என உளம் நீ கொண்டாயோ
அதையே நான் செய்ய வேண்டி
அருளை நீ தருவாயே!

63. உள்ளபடி வா

வாழ்கின்றேன் இன்னும் வையகம் தன்னில்
வள்ளளே உந்தன் கிருபையதனால்
வீழ்ந்திட்ட நாட்களை எண்ணியே நின்றால்
வேதனை ஒன்றே மிஞ்சிடும் என்னில்
நொந்து நிற்பதால் பயனேதும் காணேன்
நோக்கினேன் உந்தன் அன்பினை நானும்
"உள்ளபடி வா" என்றுரைத்ததினால்
உருகியே வந்தேன் உன்னடி நானும்
படிந்திட்ட கறைகளோ பலப்பல வாழ்வில்
வழியேதும் காணேன் அவைகளை நீக்க
பரிவாக அன்று நீ சிந்திய குருதி
பரிகாரம் ஆயிற்று என்குறை நீக்க

17-02-1994

64. அருளுக்குக் குறைவில்லை

வேதாந்தம் சித்தாந்தம்
விளங்காத தத்துவம்
உருவாக்க முடியாத
உள்ளான ஒளியை
அருளான உன்வார்த்தை
ஒன்றாலே உள்ளத்தில்
நிறைவாக உருவாக்கி
நிலைபெறச் செய்தாய்
தவறாக வழிமாறித்
தடுமாறும் போது
தத்துவம் ஏதுமே
உதவாத போது
உன்னாவி ஒன்றாலே
உண்மையை விளக்கி
உன்னடி பின்செல்ல
உன்னருள் தந்தாய்
எதனாலே என்மீது
இத்தனைப் பரிவு
ஏதுதான் நீகண்டாய்
என்னிலே நிறைவு?
நோக்கினால் என்னில்
குறையன்றி வேறில்லை
ஆயினும் அவைநீக்க
அருளுக்கும் குறைவில்லை

இப்பாடலும் அடுத்த பாடலும் திருமதி. எம். எஸ். சுப்புலஷ்மி பாடிய இரண்டு பிரபலமான பாடல்களைத் தழுவி எழுதியது. அடிப்படைவாதிகள் இதை எதிர்க்களாம். ஆனால் என்போன்ற இந்து முக்தேசன் பக்கதர்களுக்கு அப்படிப்பட்ட உரிமை உள்ளது:

65. குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை மறைகூறும் இறைவா
குறை ஒன்றும் இல்லை ஸ்வாமி எனக்கு
எனக்கு குறை ஒன்றும் இல்லை ஐயா...

புலனுக்குப் புறம்பாக நிற்கின்ற போதும்
புனிதனே உன்னருள் எனக்கென்றும் வேண்டும்--குறை ஒன்றும்....

வேண்டிடும் நலம் யாவும் நிறைவாய் அருள்வாய்
வேண்டாத குணம்போக்க அருளும் தருவாய்--குறை ஒன்றும்...

தேவா அருள் நாதா
இறைவா என் தலைவா....
11-05-1994.

66. காண்பதெப்போது ஐயனே

காண்பதெப்போதென் ஐயனே
கண்குளிர நான்
என்கலித் தீர--காண்பதெப்போதென்....

புவிதனுக் கிறங்கியே
சிலுவையில் மரித்தாய்
அபயமென்றே வந்த
கள்வனைக் காத்தாய்
உபச்சாரம் அறியேன்
சிறியேன் நான் செய்பல
அபச்சாரம் பொருத்து
ஆட்கொண்ட உந்தனை--காண்ப....

01-04-1994

பஜகோவிந்தத்தின் ஒருபாடலின் அடிப்படையில் எழுதியது:

67. கழிந்தது காலம்

காலையும் சென்றது மாலையும் வந்தது
கழிந்தது ஓர்நாள் வாழ்வினிலே
கடந்தது கோடை வந்தது வசந்தம்
காலமோ விளையாடுது வாழ்வினிலே
கழிந்தது இளமை வந்தது முதுமை
காலமும் போனது வாழ்வினிலே
கண்கூடாய் இந்நிலைக் கண்டும்
களங்கமும் நீங்கலை மனதினிலே!

29-05-1994

68 வேண்டும்

சிந்தையில் தூய்மை வேண்டும்
செயலிலே உண்மை வேண்டும்
வாக்கிலே அருளும் வேண்டும்
வாழ்க்கையில் கிருபை வேண்டும்
நோக்கத்தில் தெளிவு வேண்டும்
ஆக்கத்தில் ஆர்வம் வேண்டும்
அழைப்பிலே நிலைக்க வேண்டும்
அதற்கு நீ உதவ வேண்டும்

07-08-1994. லக்னோ.

69 முடியாத மன்றாடல்

மன்னியும் ஐயாஎன மன்றாட முடியாத
மாபெரும் பாவியானேன்
மனதாலே செய்த பிழை பலவாகி அதனாலே
மீளாத பழிக்கும் ஆனேன்
எவ்வளவோ முறை என்னென்ன தீர்மானம்
எடுத்துமோர் பயனும் காணேன்
ஏன்னிங்கு என்வாழ்வில் இவ்வளவு தோல்விகள்
இதற்குமோர் விடையும் காணேன்
சோதனை பலவாக தாக்கிடும் போதிலே
செயலற்று நின்று போனேன்
சொல்லினில் கூறிட இயலாத இந்நிலையில்
சோர்வினால் தளர்ந்து போனேன்
பலவீனம் அதன்மீது பழிகூறி பலமுறை
பாவத்திலே உழன்றேன்
பரிகாரம் நீயன்றி வேறெங்கும் காணாமல்
பதறியே மீண்டும் வந்தேன்
கொண்டாலும் தள்ளினும் கோவே உன்னருளன்றி
குணம்காண வழியும் காணேன்
அன்றென்னை ஆட்கொண்ட அருளுண்டு உன்னிடம்
அதனாலே வந்து நின்றேன்
புலம்பிடும் புலையனின் பிழைதனைப் பொறுத்திடு
புனிதனே சரணடைந்தேன்.
13-09-1994. பெங்களூரு.

70 மீண்டும் தொடு

கேளாயோ இன்று
கதறலை இங்கு
கதறிடும் ஏழையின்
குரலை
பாவியே நானும்
பக்தியே காணோம்
பரிதபித்தே வந்தேன்
நானும்
உன்சித்தம் செய்ய
உடன்பட்டேன் இல்லை
அதனாலே குருடானேன்
வாழ்வில்
காணாதோர் காண
காண்போர்கள் வீழ
வந்தாயே புவிக்கு
நீயும்.
காணாதவன் என்றே
கதறியே வந்தால்
கண்திறப்பாய் நீயும்
இன்று.
காண்கின்றேன் என்றே
பெருமிதம் கொண்டால்
குருடனாய் நிற்பேனே
என்றும்.
நீதொட்ட குருடனாய்
நான்மாற இங்கு
நம்பியே வந்தேன்
அருளை.
வேறொன்றும் வேண்டேன்
வீணே இப்புவியில்
ஒருமுறை தொடுஎன்னை
மீண்டும்.
04-11-1994.

71 பேராசை வேண்டும்

பேராசை எனக்கிதில் வேண்டும் என்றும்
பேரின்ப வெள்ளத்தில் பாய்ந்துநான் நீராட
மூவாசை என்னும் மலமும் முற்றிலும் நீங்கிட
முதல்வனே என்றும் உன்னைப் பற்றியே நாடிட--பேராசை....

மண்ணாசை பொன்னாசை மற்றெல்லா ஆசைகளும்
மானிடர்க் கியல்பான ஒன்றே-ஆனால்
மனதினை மயக்கியே மாயையில் ஆழ்த்திடும்
வீணாசை எனில் நீக்க வேண்டியே--பேராசை....

உள்ளான வாழ்க்கையில் உறுதியாய் வளர்ந்திட
உன்வார்த்தை அனுதினம் வேண்டும்--அதுவன்றி
வீண் "ஓசை" எழுப்பிடும் வீணான தத்துவப்
பேரோசை நீக்கியே பொழுதும் உன்னருள் நாட--பேராசை....


72. மூடனே நானும்

மூடனே நான் முழுமனதாய் உன்னை
நாடியே நாளும் நன்கு தேடாவரை
வீணிலே போக்கினேன் காலமதை-உலகின்
ஞானமனதை வீணில் நாடும் வரை
மெச்சினர் மனிதர் ஞானியென்று-ஆனால்
கொச்சையான என் குணமறியாமலே
நல்வாழ்வை நாடாமல் நாளும்-பொய்
ஞானமதை வீணில் நாடியதால்
பயன் என்னபெற்றேன் கல்வியினால்
மனப்பரிசுத்தமற்று வீணில் வாழும்வரை
பாவிக்கிரங்குவாய் பரம்பொருளே
பக்தியுடன் அடிபணியும் மூடனுக்கே!

02-03-1995

73. உறவு வேண்டும்

உன்னோடு உறவு வேண்டும்
அதில் உள்ளான நிறைவு வேண்டும்
கல்லாகிப் போனபோதும் மனதுள்
கசிந்துருகும் உணர்வு வேண்டும்
சொலோடு செயலும் ஒன்றாய்
இல்லாத போது என்னில்
பொய்யான வாழ்வு ஒன்றே
மேலோங்கி என்றும் நிற்கும்
போராடித் தோற்றேன் நாளும்
பொழுதெல்லாம் என்னோடு நானும்
புனிதனே உன்னருள் வேண்டும்
புதுவாழ்வு என்னில் காண!
14-03-1995

74. நீ வர வேண்டும்

உள்ளான உணர்வோடு
உன்னோடு உறவாட
உனதருள் எனக்குவேண்டும்
பொய்யான வாழ்விலே
மெய்யான உன்னடிநாட
பேரருள் எனக்குவேண்டும்
கல்லாத மூடன்நான்
காண்கிலேன் வழிவேறு
ஐயனே உன்கருணை வேண்டும்
கணப்பொழுதும் தள்ளாமல்
கதறிடும் இக்குழவியை
காத்திட நீ வரவேண்டும்!
20-03-1995

75. பேதைக்கு குறைவேது?

எந்த நிலையிலும் மகிழ்வாய் இருக்க
எந் நாளும் நானும் அறிவேனே
எதையும் செய்ய என்னால் ஆகுமினி
என் ஐயன் என்னோடு உள்ளவரை
வாழ்வும் தாழ்வும் நான் அறிந்தேனே
பாங்காய் எனக்கவன் போதித்ததால்
குறைவும் நிறைவும் எனக்கினி இல்லை
எல்லாம் அவனுள் நிறைந்ததினால்
பலவீனன் ஆயினும் பெலன்பெற்றேன்
மதியீனன் ஆயினும் உள்ளபடி அறிந்தேன்
போதிக்கும் குருவாக என்நாதனிருக்கையில்
பேதைக்கு குறைவேது இவ்வுலகில் வாழும்வரை!
22-04-1995

76. ஓர் வேண்டுதல்

ஞானம் வேண்டும் நானொன்றும் அறியாத
மூடன் என்ற உண்மை அறிய!
நேயம் வேண்டும் உன்னை என்றும்
ஊள்ளபடி உணர்ந்து உன்னடி தொழுதிட!
ஆசை வேண்டும் ஆன்மீகக் கடல்மூழ்கி
அழியாமை என்னும் நல் முத்தெடுக்க!
அருளும் வேண்டும் அச்செல்வம் பிறர்க்கும்
பகிர்ந்து அளித்து உன் ஆசிபெற!
இரக்கம் வேண்டும் இல்லார்க்கு என்னால்
இயன்றவரை தந்து சேவை செய்ய!
எல்லாம் இருந்தும் ஐயனே நான்
உன்னோடு வாழும் உயர்வே வேண்டும்!
13-08-1995

77. புதிதாய் வேண்டும்

மீண்டும் எனக்கருள் வேண்டும்
முடிவில்லா உன்கிருபை வேண்டும்
தோல்வியுற்ற இவ்வாழ்வில் வெற்றி
தொடர்ந்திட உன்னருள் வேண்டும்
காமம், கோபம், லோபம் என
கணக்கில் அடங்கா துன்பம்
தாக்குகின்ற போது எல்லாம்
தயவுடன் எனைக்காக வேண்டும்
இவ்வேண்டுதலும் புதியதல்ல
மனவேதனையும் புதியதல்ல
ஆயினும் நீ காட்டும் தயவோ
அனுதினம் புதிதாய் வேண்டும்!
13-10-1995. ரீவா (ம.பி)

கீழ்வரும் பாடலை (அமெரிக்கப் பெண்கவி) எமிலிடிக்கன்சன் தன் நண்பருக்கு திருச்சபையைக் குறித்து எழுதியதைப் படித்த போது, அவரைப்போன்றே என்கருத்தும் இருப்பதை உணர்ந்து எழுதினேன்:

78. தி(தெ)ருச் சபை

கூடுகின்றார் ஒரு சபையாக
ஒருகொள்கை தன்னை அறிவிக்கவே
கும்பலோடு ஓர் "கோவிந்தா"
கண்டதே அல்லாது பயன் என்ன?
"சபை" என்கின்ற பெயராலே
சடங்காய்ப் போனது "மதமே"
சரியில்லை ஈது என்றால்
சபை எதிரி என்கிறார் என்னை
சட்ட திட்டங்கள் போட்டு
ஓர்கட்டிடத்திற்குள் கூட்டி
நடத்துவதும் சபை அல்ல
நான் அறிந்த உண்மை இது
வாரம் ஒருமுறை கூடியே
வழிபாடு என்ற பெயராலே
நடப்பதும் ஓர் நாடகம்
ஒத்திகை சில பார்த்தபின்
அனுமதி என்றால் இலவசம்
ஆனால் அனைவர்க்கும் அல்ல
"அச்சபை" கொள்கை ஏற்கும்
அங்கத்தினர்கட்கு மட்டும்
நல்லவேளை நாம் பிழைத்தோம்
நாடிவந்த இறை அருளால்
காத்திடு எஞ்சும் வாழ்வில்
கடைதேற உன் பக்தனாய்!
16-10-1995-௧௯௯௫.

பல சமயம் பிரார்தனை செய்யும் சமயங்களில், என் தோல்வி, பயம் போன்றவையே பெரிதாகத் தோன்ற, அதைக்குறித்து எழுதிய பாடல்:

79 கோழை

எல்லாம் இழந்திட்ட ஏழை
என்னில் பயம்கொண்ட கோழை
சொல்ல ஒண்ணா துன்பங்கள்
சோதனைகள் எனைத்தாக்க
வாழ்வில் சோர்ந்திட்ட மோழை!
சொல்லிடத் தேவையோ உனக்கு
என்துன்பத்தின் மொத்த கணக்கு
சோதனை வேதனை அத்தனையும்
வென்ற முக்தேசனே உனக்கு
என்னுடன் உனக்கென்ன பிணக்கு
அடித்தாலும் அணைத்தாலும் நீயே
ஆறுதல் கூறிடும் தாயே!
இணைத்தாலும் பிரித்தாலும் என்றும்
என்நிலைக்கானாலும் நானும்
என்றும் உன்னடி நாடும் சேயே!
09-12-1995. லக்னோ (உ.பி)

என் போராட்டங்கள் எவ்வளவாக இருந்தாலும் நாளும் என்னை நாடிவரும் இறைவனின் கிருபையை மட்டும் எண்ணியபோது, இப்பாடலை எழதினேன்:

80. நாடி வரும் கிருபை

நாளும் நாடிவரும் கிருபைக்காய்
நாதனே உனக்கு நன்றி
தேடித்தேடி என்னை தொடர்ந்து வந்தாய்
தொலைந்தே போதும் நாடியே வந்தாய்
எட்டி எட்டி சென்றேன் மனதாலே
கிட்டிக் கிட்டி வந்த பாவத்தாலே
கட்டியம் கூறி கோவே நீ வந்தாலும்
தட்டிக் கழித்தேனே கிட்டிய அன்பை
விட்டுன்னை விலகி எங்கு சென்றாலும்
தொட்டென்னை தொடர்ந்து மட்டில்லா அன்பால்!
காற்றைச் சிறகாக்கி கடைதூரம் சென்றாலும்
உனக்கு மறைவாக ஒளிவதும் எங்கே?
என்ன கண்டாயோ பாவி என்னிடம்!
உன்னைத்தான் மறந்தே ஓடிய போதினும்
தள்ளிடா உன்னருளை தியானிக்கும் போது
தடுமாறி வந்தேனே மீண்டும் உன்பாதம்
மனமும் கரைந்து மன்றாடி நானும்
ததும்பிய விழியோடு வந்தேனே நாளும்.
11-12-1995. லக்னோ.


81. அருளொடு செயல்

என்னுள்ளே அமைதி வேண்டும்
எனக்கதை அருளவேண்டும்
சொல் செயல் எனப்பலவாறு
வரும் சஞ்சலம் நீங்கவேண்டும்.
சிந்தையின் ஓட்டத்தை என்றும்
சீராக்க முயலும் போது
சிதறிடும் மனதை ஒன்றாக்கி
உன்சித்தம் அறிந்திட வேண்டும்
என்விருப்பம் போல எல்லாம்
என்வாழ்வில் நடக்காத போதும்
உன்சித்தம் எதுவென எண்ணி
உன்பாதம் பணிய வேண்டும்
நாள்தோறும் நான்வாழும் வாழ்வில்
பிறர் நலமெண்ணி உழைக்கவேண்டும்
சுயநலம் தலைத்தூக்கும் போது-உன்
சிலுவை என் சிந்தையில் வேண்டும்
கூறுவதும் மிகவெனக் கெளிது
ஆனால் கைகொள்ள முயலும் போது
உன்கருணையின் துணையில்லாது
கடைபிடிக்க என்னால் ஆகாது!
வெறும் தத்துவம் பேசி இவ்வாழ்வில்
முக்தியும் பெற இயலாது
அருளோடு செயலும் வேண்டும்
அதற்கும் நீ உதவ வேண்டும்.
15-01-1996. லக்னோ. (உ.பி)

82. வரும் வரை பொறுத்திரு

உன்னை உணர்வது என்பது
ஒருநாளும் இயலாத காரியம்
உள்ளொளி பெருக்கி நீயே
வரவேண்டும் என்னிடம் நாளும்
சஞ்சலமான என் மனமே!
சற்றேனும் நிற்கமாட்டாயோ?
என்னிடம் வருகின்ற இறையிடம்
ஓர்வார்த்தை பேச விடமாட்டாயோ?
ஆயிரம் காரியம் உனக்குண்டு
அறிவேனே அதனையும் நானும்
அவையாவும் சிறப்பாக செய்ய
அவன் அருள் வேண்டும் நாளும்
தேடி என்னிடம் வலிய வருகின்ற
தெய்வத்தைக் காணவே ஒருமுறை
எத்தனிக்கும் போதினிலே நானும்
கூத்தடிக்கின்றாய் ஆனாலும் நீயும்.
ஆ! என்செய்வேன் இறைவனே?
அருகில் வந்தபின் உன்னையே!
தடவியாகிலும் ஒருமுறை காணவே
தவிக்கின்ற என்நிலை காண்பாயே!
எட்டி நின்றபடி வேடிக்கை
பார்பதென்பதே உன் வாடிக்கை
அருளோடு நீகாட்டும் புன்னகை
அதுவே என்வாழ்வில் நம்பிக்கை
இவ்வளவு தூரம் வந்தபின்
இன்னும் சிலகணம் பொறுத்திடு
எனக்குள்ள வேலை முடித்தபின்
வருவேன் அதுவரைநீ பொறுத்திடு!
18-01-1996. லக்னோ

83. சுய சித்தம்

சித்தம் இருந்தாலே போதுமோ?
என்சுய சித்தம் இருந்தாலே போதுமோ?
இனிஒருபோதும் இப்படிச் செய்யேன்
என்றே நான்செய்த தீர்மானம் என்ன?
ஆயினும் என்செயலை ஆராயும்போது
ஐயகோ என்சொல்வேண் வீழ்ந்தேனே பின்னே
சுயபெலத்தை நம்பியே நாமும்
செய்யும் தீர்மானம் ஆயிரமாயினும்
தெய்வத்தின் அருள் சேராதவரை
வென்றிடமுடியாது இதுஇங்கு உண்மை!
19-01-1996. லக்னோ (உ.பி)

17-02-1996 அன்று மாலை, வழக்கப்படி மஹரியில் (ரீவா. ம.பி) நதிக்கரையோரம் உலவச்சென்றபோது இருந்த அமைதி என்னை மிகவும் கவர்ந்தது. பறவைகளின் இனிய ஓசை, மென்மையான குளிர், சிவப்பாய் மறையும் சூரியன் எனக்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுத்தது. அநேரம் இறைவனை போற்றி எழுதிய பாடல்:

84. வேறென்ன வேண்டும்?

அமைதியான இந்த மாலையிலே--என்
ஐயனுடன் அமர்ந்த வேளையிலே
இனிமையான இசை சூழ்ந்திருக்க
என்னை மறந்துமே நானிருக்க--அமைதியான....

மெல்லிய குரலால் புள்ளினம் யாவும்
புனிதனைப் போற்றியே புகழ்ந்திருக்க
ஆர்பரித் தெழுந்த என்மனமும்
ஐயனைப் போற்றி பணிந்திருக்க--அமைதியான....

வேறென்ன இன்பம் வேண்டி நிற்பேன்
இங்கு மாறுபடும் இந்த உலகினிலே
அருகினில் அமர்ந்தே அவன் பாதம்
வருடியே சேவை செய்வதல்லால்--அமைதியான....

85. நிறைத்திடு நம்பிக்கை

நம்பிக்கை எனக்கு உண்டு
ஆயினும் ஐயனே என்னுளே
போராடும் இம் மனதிலே
அவ நம்பிக்கையும் உண்டு!
என்னதான் செய்வேன் நானே?
நீக்கிட அதனையும் தானே?
முயன்றேனே நானும் பலமுறை
ஆனால் தோற்றேனே இதுவரை
கூறிடத் தேவையோ உனக்கு?
என்நிலை அறிந்த உனக்கு?
நீக்கி அவநம்பிக்கை என்னில்
நிறைத்திடு நம்பிக்கை மீண்டும்!
வாரணாசி (காசி)14-03-1996. மாற்கு. 9:24.

86. ஆட்கொள்வாயே!

உன்பெலன் மட்டும் இல்லாவிட்டால்
ஓயாத இவ்வுலக வாழ்க்கையிலே!
உள்ளான மனதில் அமைதியே இல்லை
உருண்டோடும் இம்மனித வாழ்வில்
நாள்தோறும் என்னை நாடிவருகின்ற
நன்மை-தீமை எண்ணப் போனால்
எண்ண முடியுமோ அனைத்தையும்?
என்மனம் அவைநாடி செல்வதாலே!
கானல்நீர் தேடிய மானைப்போல
கதறியே என்மனம் ஓடினாலும்
நீர்காணா மான்போல் ஆகிடாது
நிலையான அருள்ளால் வாழ்கிறேன்
என்பெலன் தன்னை நம்பிநானும்
எதுவரை ஓடிட முயன்ற போதும்
ஆட்கொள்ளும் உன் அன்பினாலே
ஐயனே வாழ்ந்திட அருளிடும்!.
22-06-1996. பூனே (மஹாராஷ்டிரா)

No comments: