Thursday, September 29, 2011

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மஹரியில் (ரீவா. ம.பி) படித்துக் கொண்டிருக்கையில், இடையே நிறுத்தி விட்டு பின்வரும் அந்தாதியின் முதல் பத்து பாடல்களை, 18, 19, 20-03-1990-ல் எழுதினேன். பிறகு பல சமயம் மற்றவற்றை எழுதினேன். என் நோக்கம் மொத்தம் நூறு பாடல்களை எழுதவேண்டும் என்பது. எனவே இந்த "முக்தி அந்தாதி" இன்னும் முற்றுப் பெறவில்லை:

101 முக்தி அந்தாதி

நீயே என்தலைவன் நின்னையல்லால்
நாயேன் யாரை நினைப்பேன் நானிலத்தே
வீணே வாழும் வறியவனை உன்னருளால்
கோனே மீட்பதும் என்நாளோ குணக்குன்றே! 1

குன்றேயணைய குணம்கொண்டாய்
குற்றமொன்றே செய்யும் என்னை நீ
வலியவந்தாட்கொண்டாய் குருசிலன்று
நன்றே கொன்றாய் பாவமதை நான்வாழ 2

வாழ வகையறியா வன்கள்வனை உய்விக்க
தாழ மனுவாய் வந்திறங்கித் தன்னுயிரை
மீள் ஆட்கொண்டாய் மீண்டுமெனை உனதாக
ஆள வரவேண்டும் அனுதின வாழ்வினிலே 3

அனுதின வாழ்வினிலே உன்னருள் வேண்டும்
ஐயனேநீ அதை நிறைவாய்த் தரவேண்டும்
மெய்வழிதனிலே நான் செல்ல வேண்டும்
உன்மறைகூறும் சொல்லின்படி ஒழுக வேண்டும் 4

ஒழுகேன் நான் உன்னருளன்றி உலகினிலே
உய்யேன் நான் உவந்தென்னை மீட்காவிட்டால்
செய்யேன் என்பணிகளைச் செவ்வையாகச்
செய்யும் வகை எனக்கு நீ கூறாவிட்டால் 5

கூறாவிட்டால் அறிவேனோ குணமறியா மனதினிலே
கூறி என்னிடம் நீயேவந்து நாடாவிட்டால்
வாழ்வேனோ நானிலத்தே நாதனே நீஎனைத்
தேடாவிட்டால் கிடைப்பேனோ தெரிந்துனக்குச் சொல்வேனோ 6

சொல்வேனோ உன்பெருமையன்றி என் வாயால்
சொல்லித்தான் முடியுமோ அவையாவும் என்வாழ்வில்
அள்ளித்தான் நீயளித்த நன்மைகள் ஆயிரமே
அவையனைத்தும் எண்ணித்தான் முடியுமோ யாராலும் 7

யாராலும் அறியமுடியா நாதனை, நன்மறையோர்
எவராலும் கூறமுடியுமா வேந்தனை, தூதர்கோடி
போற்ற முடியுமோ முதல்வனை, பக்தர்மட்டும்
காணலாம் காணமுடியா இறைவனை பக்தியாலே 8

பக்தியால் யான்னுனைப் பலகாலும் பற்றியே
உன்புகழ்பாடி, உத்தமா, வித்தகா, எனக்கூறி
உடல்பொருள் ஆவியால் உனைப் போற்றி
நித்தமும் வாழ்ந்திட அருள் கூறாய் 9

கூற முற்பட்டால் என்பாவம் கோடியே
குற்றம் காணமுற்பட்டால் கணக்கில் அடங்குமோ?
குருவே உன்னருளன்றி நாடமுற்பட்டால் நன்னுமோ
நலம் வாழ்வில், தேடிமுற்பட்டு தேடிவந்தவனே! 10

வந்தாய்நீ வறியவற்காய் வான்விட்டே
தந்தாய் உன் இன்னுயிரைத் தான்விட்டே
எந்தாய் இனியென்செய்வேன் என் மனம்விட்டே
செய்வாய்யிச் சேய்க்கருள் எனக் கூறுவதல்லால் 11

கூறுவதல்லால் வேறொன்றறியேன் உன் நாமமன்றி
கூறிச்சேர்வதல்லால் வேறொன்றையறியேன் உன்திருவடியன்றி
சேர்ந்தோதுவதல்லால் வேறொன்றறியேன் உன் புகழன்றி
ஓதிஓய்வதல்லால் வேறொன்றறியேன் உன் அருளன்றி 12

அருளொன்றை வைத்தாய் இருளுக்கு மாறாக
மருண்டுலகில் வாழும் மனிதருக்கே, மன்னவனே!
செருக்கொண்டு இதையறியாமல் பேதையவர்
மனயிருள்கொண்டு உனைவதைத்தார் ஒரு சிலுவையிலே 13

சிலுவையிலே நீசெய்த தியாகமதை, சில
மணிநேரமட்டுமே தியானித்தாலும், பல
பவவசப்பட்டு நிற்கும் மாந்தர்தம், குல
முழுதும் உய்யும்வழி தான் விளங்கும் 14

விளங்கும் உன்னருளும் நீ விளக்கும்போது
கலங்கும் என்மனம் அதை அறியும்போது
மயங்கும் என்வாழ்வு அதை மறுக்கும்போது
தியங்கும் எனக்கதை நீ தருவதும் எப்போது? 15

எப்போ முடியுமோ வாழ்வின் போராட்டம் என்றே
என்நாளும் முறையிடுகின்ற மூடனேநான், இனி
தப்பேதும் செயமாட்டேன் எனக்கூறி தவறிடாமல்
நாள்தோறும் செய்கின்றேன் பல தவறினையே 16

தவறே செய்கின்ற போதும் தள்ளிடாமல்
தாய்போல் தருகின்றாய் உனதன்பைத் தவறாமல்
அறவேநான் திருந்துவதும் என்நாளோ?
ஐயாநான் உன்னருளை என்றும் மறவாமல்? 17

மறவாமல் நானுன்னை துதிக்க வேண்டும்
மன்னவா எனக்கது உவக்க வேண்டும்
பிறழாது நான் இங்கு வாழவேண்டும்
பேதைக்கு இறங்கி நீ அருளவேண்டும் 18

அருளுண்டு நிறைவாய் உலகினிலே ஐயன்
திருப்பாதம் அண்டி வருவோர்க்கே, தினம்
தொழுதுண்டு நிற்போர்க்கு குறையுண்டோ, இனி
துன்பமே போயிற்று இவ்வுலகில் என்றும் 19

என்று காண்பேன் இணையில்லாத் திருவடியை
எல்லோரும் தெழுதேத்தும் ஐயன் மலரடியை
பாதகர்க்காய்த் தழும்பேற்ற பொன்னடியை
பாரின் பாவமெல்லாம் போக்கிய அருளடியை 20

அடிதொழுதிட வந்தேன் ஐயாநான் உன்
அடியான் என்னும் தகுதியினால் இனி
கதியென ஒன்றெனக்கு வேறுண்டோ உன்
கருணையே அன்றி மற்று வழியுண்டோ 21

102. துதியுங்கள்

போற்றித் துதியுங்கள் புகழ்ந்து பாடுங்கள்
புனிதவன் நாமத்தையே உயர்த்திக் கூறுங்கள்
பாவம் போக்கினான் சாபம் நீக்கினான்
பாரில் அவன்போல் தெய்வம் வேறுயாருளார்
அமைதியளித்தான் அன்பையளித்தான்
அவனியிலே அவன்போல் தெய்வம் வேறுயாருள்ளார்
தன்னையளித்தே ஓர் தியாகமே செய்தான்
தரணியிலே அவன்போல்தெய்வம் வேறுயார் உளார்
ஞானமளிப்பான் நலமும் அளிப்பான்
நாதன் அவன்போல் தெய்வம் வேறுயாருள்ளார்
பக்தியளித்தான் முத்தியளித்தான்
பரமன் அவன் புகழினையே போற்றிப்பாடுங்கள்
என்னையும் மீட்டே ஓர் ஏற்றம் அளித்தான்
முக்தேசனைப்போல் தெய்வம் வேறுயாருளார்
மீண்டும் வருவான் உடன் கூட்டிச்செல்லவே
அந்த மீட்பனவன் நாமத்தையே மீண்டும் கூறுங்கள்
02-04-1999. தில்லி.

"தீபு ஜலே" என்ற ஹிந்தி பாடலைத் தழுவி எழுதியது:

103. தீபமேற்று

உள்ளம் என்னும் கோயிலிலே
அன்புஎனும் ஓர் தீபமேற்றி
புகழ்ந்து கூறு அவனை நினைந்துபாடு
கருணாமூர்த்தி அவன் கருணாமூர்த்தி...

காலையும் மாலையும் கனிவுடன் கூறுவாய்
முக்தேசனின் நாமம், முக்தேசனின் நாமம்
புகழ்கூறு மனமே, அவன் பெயர்கூறு மனமே!

தீபமே ஏற்றியே, நாமமே போற்றியே
வழிபடுவோம் உலகில் வாழும்போது
வாழ்வதே அவனருளால்,
நாம் வாழ்வதே அவன் அருளால்

உலகின் ஜோதியாம், உண்மை வழியுமாம்
உயர்த்திடுவோம் அவனை வாழ்த்திடுவோம்
வழிகாட்டுவான் வாழ்வதற்கே அவன்
வழிகாட்டுவான் வாழ்வதற்கே....

03-04-1999. ரோதக் (ஹரியானா)

104. எது வேண்டும்

அருள் வேண்டும் அதுவன்றி உலகினிலே
அமைதியாய் வாழ ஒரு வழிவேண்டும்
தொழவேண்டும் தொண்டர் குழாமொடு
தெய்வமே நின்பாதமதில் பக்தியோடு
மதிவேண்டும் மாயையான இவ்வாழ்வினிலே
மனம்போன போக்கில் போகாமல் இருக்க
குணம் வேண்டும் குற்றம் ஒன்றும்செய்யாது
கூடவே நின்துணைவேண்டும், தனித்துவாழத்
துணிவிலாகோழை எனக்கு வேறெதுவேண்டும்?
வேண்டியபடியே நீ தரவேண்டும் என
எண்ணாமல், நின் சித்தம் ஒன்றே செயவேண்டும்
எனக்கூறிச் சேவடி தனைச் சேர்வதல்லால்
09-08-1999. ராணிகேத் (உத்ராஞ்சல்)

105. எல்லாம் உனக்காக

எனது என ஒன்றும் இல்லை இனி
எல்லாம் உனக்காக ஆனபின்னே!
பின் ஏன் வந்தது வீண் சிந்தையும்தான்
என்மனம் போல ஓர் வாழ்க்கை வாழ?
என்தேகம், திறமை, காலமெல்லாம்
நீயளித்த பிச்சை என உணர்ந்தபின்னும்
என்சொந்தம் அவையெல்லாம் என் எண்ணியே!
என்னையே ஏமாற்றும் தன்மை தன்னை
நீக்கிட மீண்டும் உன்கிருபை தந்து
எல்லாம் உனதே என உணர்ந்து மீண்டும்
உனக்காக வாழ அருள் கூறுவாய்.
12-08-1999. ராணிகேத் (உத்ராஞ்சல்)

106. நன்நிலம்

விளை நிலமாக்கிடு என்னை
உன் வார்த்தை வந்தபோது
அதை வீணாக்கிடும் கரம்பாக
நான் இனி மாறிடாது--விளை....

பாதையில் வீழ்ந்திட்ட வித்தோ
பறவை கொத்திச் சென்றதால்
பயனற்றுப் போனதே வீணாக
அதுபோல் நானும் மாறிடாது--விளை...
பாறையில் விழந்த விதையும்
வேர்விட்டுச் செல்ல முடியாமல்
விரைவில் கருகியதே வீணே
அதுபோல் நானும் மாறிடாது--விளை...

புதரிடை வீழ்ந்த வித்தும்
காலத்தில் கனிதரும் முன்னே
செயலற்றுப் போனது வீணில்
அதுபோல் நானும் மாறிடாது--விளை...

என்மனம் என்ன நிலமோ?
எனக்கே தெரியாது அதனால்!
விதைக்க புறப்படும்முன் நீயே
விபரம் அறிந்து விதைப்பாயே.--விளை....
12-01-1998. சிகந்திராபாத்.

107. செய்நன்றி மறவாமல்

என் நன்றி கொன்றாலும்
என்வாழ்வில் நானென்றும்
செய்நன்றி மறவாமலே
நீசெய்த உதவிக்கு நான்
கைமாறு என ஒன்று
செய்ய முடியாததால்
நாள்தோறும் இவ்வாழ்வில்
நன்றி அதை மறவாமல்
நாடி உன்னடி தேடிவந்து
உன்னருள் போதுமென
ஓய்வாய் அமர்ந்து உன்
கருணையினை சிந்தித்து
எஞ்சிய காலத்தை தஞ்சமென
உன்னடி தனைச் சேர்ந்து
வாழ நாடுகின்ற எனக்கு
வஞ்சனை செய்யாமல் நீயும்
வாரி வழங்கிடு அருள்
கெஞ்சுகின்ற உன் அடியானுக்கு.
08-10-1998. கந்தைலா (ரீவா, ம.பி)

108. திசைக்காட்டு

எது நலமென எனக்குத் தெரியாது
என்வாழ்வின் திசையும் புரியாது
தடுமாறும் ஏழைக்கு சற்றுத் தெளிவாக்கித்
திசைக்காட்டும் தெய்வமே தேடினேன் உன்னடி

புத்தாயிரம் ஆண்டு புதிதாய் பிறந்ததென்று
புரியாத கணக்கிட்டு புவியின் மாந்தரும்
போற்றி வரவேற்ற இப்புதிய நூற்றாண்டில்
போதும் எனக்கென்றும் உன்பொற்பாதம்!

அடுத்தடுத்த நாட்களும் அதிவேகமாகச் செல்ல
வாரம் மாதமாகி வருடமும் விரைந்து செல்ல
முடிவறியா வாழ்க்கைக்கு ஒர்முடிவை நீகாட்ட
தேடி அடிவந்தேன் திசைக்காட்டு நானுய்ய!
01-01-2000. ஈரோடு.

109. மீட்டிடுவாய்

மரித்தவனை நீ எழுப்பிடுவாய்
மனம் முறிந்தவனை தேற்றிடுவாய்
இழந்தேன் எல்லாம் என்பவனுக்கும்
இரட்டிப்பாய் திரும்ப அளித்திடுவாய்

வேண்டுதல் யாவும் கேட்டிடுவாய்
வேண்டா வழியினை நீகிடுவாய்
நல்லவன் நான் இல்லை எனினும்
நாடியே வந்து நீ மன்னிப்பாய்

அருளினை அள்ளி அளித்திடுவாய்
ஆதரவளித்தே காத்திடுவாய்
அருகதை இல்லை என்னிடம் எனினும்
அதையும் தாண்டி வரமளிப்பாய்

எல்லாம் உனது செயலன்றோ!
எதுவும் என்னிடம் இல்லையன்றோ!
சரண் அடைந்தேன் திருவடியில்
தாயே உன் சேய் நானன்றோ

அன்னையும் தந்தையும் ஆனவனே
ஆதியும் அந்தமும் நீதானே
பக்தியின் வலையில் சிக்குண்டு
பக்தனுக்கென்றே வாழ்பவனே!

பாவம் என்ற படுகுழியில்
பலமுறை தவறி வீழ்ந்தபோதும்
பரிவான உன் கரம் நீட்டி
பக்தனை என்றும் மீட்டிடுவாய்.
18-08-2001

110. வழிகாட்டு

புறக்கவில்லை உன்னை புலையனாம் நான்
புலம்புகின்றேன் என்னுள் பெலனின்றுதான்
தள்ளிடுவாயோ என்னை தயைஇல்லையோ?
தவிக்கின்றேன் என்னுடன் போராடியேதான்

அரக்க குணம் பல ஆயிரம் ஓங்கி
அழிக்கின்றதே என்மன உணர்வை
அவைகளை அகற்றவும் இயலவில்லை
ஆதரவுதர நீயேன் இன்னும் வரவில்லை?

முடியவில்லை பலமுறை முயன்றபோதும்
மூர்க்க மனதினை அடக்க நானும்
முடிவே இல்லையோ இதற்குத் தானும்
ஓர் முடிவுசொல் எனக்கு இன்றே நீயும்

பழகிவிட்டதால் பாவம் கூட
பயம் இல்லை எனக்கு அவைகளிடம்
பாவி நான் என்செய்வேன் பதறுகிறேன்
"புறக்காதே" என்றுதான் கதறுகின்றேன்

கதறலும் உன்காதில் விழ வில்லையோ
கல்லாகிப்போனதோ உன்மனதுமே
அழைக்கின்றேன் ஆயிரம் வார்த்தை சொல்லி
அதில் ஒன்றுகூட உன்காதில் விழவில்லையோ?

நான் தவர நீ அதை அனுமதித்தால்
நானிலத்தோரும் உன்னை என்ன சொல்லுவார்?
"பக்தனைக் காக்கவே சித்தமில்லா-இந்த
பகவானும் யாரவன்" என்று கேட்பார்!

என்னைக் காக்கவே இல்லாவிட்டாலும்
இறைவா உன்பெயர் தன்னைக் காக்க
விரைந்தே நீ உடன் செயல்படு
இல்லையேல் என்னை நீ கொன்றுபோடு

ஆத்திரத்தில் ஆயிரம் சொல்லிடுவேன்
அவைகளை மட்டுமே நீ கணக்கிடாது
மாறாத உன் கருணையினால்-மனம்
மருகும் பாவிக்கு ஓர் வழிகாட்டு!
24-09-2000. ராணிகேத் (உத்ராஞ்சல்)

111. அனுதினம் வாழ அருள் புரி

ஒவ்வொரு நாளாய் உலகத்தில் வாழ
உதவிசெய்வாய் இறைவா நீயும்
உலகத்தின் ஆசைகள் உள்ளத்தை நெருக்காமல்
காத்திடுவாய் நீயே என்தலைவா!

நடுக்கத்துடனே நாளும் கழிந்திடும், நான்
நெருக்கத்தின் மத்தியில் வாழ்ந்திடும்போது
வீண் கலக்கத்துடன் காலமும் கழிந்திடும்
கருணை நீ என்மீது வைக்காதபோது!

ஒவ்வொரு நாளும் உலகினில் வாழ
ஓயாமல் போராடும் பக்தனின் மீது
இத்தனைக் கோபமும் இன்னமும் ஏனோ?
வீண் இத்தாமதமும் ஞாயம் தானோ?

எதிர்காலம் என்பது வீணான கனவு
கடந்தகாலமோ போராடியே கழிந்தது
நிகழ்காலம் மட்டுமே உண்மையானது
அதுவும் போராட்டமானால் என்செய்வது?

நன்றும் தீதும் நான் நன்கறியேன்
நடிக்கின்றேன் மேடையில் உன்விருப்பம்போல
தீர்மானம் செய்வதோ உன்தனின் பொறுப்பு
எனக்கில்லை ஒன்றும் இதில் விருப்பு-வெறுப்பு!
26-06-2001. ராணிகேத் (உத்ராஞ்சல்)

"துமேஹி மாதா, துமேஹி பிதா" என்ற ஹிந்தி பாடலை தழுவி எழுதியது"

112. தாய் தந்தை நீயே

தாய்தந்தை ஆனாய் தமயனும் ஆனாய்
தரணியில் எனக்கு நண்பனும் ஆனாய்
துணையாக வந்தாய் தூயவன் நீயே
வேறில்லை யாரும் வழிகாட்டத் தானே
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

மலராத மொட்டாய் வாடினேன் நானே
மலரடி தன்னில் வாழ்கின்ற நானே!
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

கல்லாத மூடனாய் வாழ்கின்றேன் நானே
கருத்தில்லாப் பேதையாய் மாறினேன் நானே
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

திருவடி காண துடிக்கின்றேன் நானே
தரிசனம் காணாமல் தியங்கினேன் தானே
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

இவ்வருள் அன்றி வேறென்ன வேண்டும்?
இவ்வாழ்வில் ஒளி நீ காட்டிட வேண்டும்
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

23-12-2003. மத்திகிரி (ஓசூர்)

113. சுயசரிதை

உத்தமன் இல்லை நான் உள்ளத்திலே
உள்ளபடி அறிந்தேன் இறைவா நான்
செத்தவன் ஆனேன் சிந்தையிலே-என்
சிறுமதி உணர்ந்தேன் தலைவா நான்
நித்தமும் நான்வாழும் வாழ்வினிலே
நேர்மையோ இல்லை என் எண்ணத்திலே
புத்தித் தடுமாறி பேதலித்தவன்போல்
போகிறேன் என்போக்கில் வாழ்வினிலே
சத்தியம் தன்னை நான் அறிந்தாலும்
சற்றேனும் துணியவில்லை அதை செயல்படுத்த
சுயபெலன் இல்லாத கோழையே நான்
சொல்லிவிட்டேன் இதை உன்னிடம் தான்
இன்னும் என்னதான் கூறுவேன் நான்
எப்படி உரைப்பேன் என் உள்மனதை?
அத்தா அத்தனையும் நீ அறிந்ததினால்
அதிகம் கூறவேண்டாம் வார்த்தையினால்
நித்தம் நீகாட்டும் கருணையினால்
மீண்டும் வாழ்கிறேன் வாழ்க்கையில்தான்!
17-05-2004. மத்திகிரி (ஓசூர்)


114. உன் சித்தம் செய்ய வேண்டும்

உன் சித்தம் ஒன்றே செய்யவேண்டும்-ஸ்வாமி
உலகில் என்சித்தம்போல் ஏதுமே செய்யாமல்
உன் சித்தம் எதுவென்று உண்மையாய் அறிந்து--உன் சித்தம்....

சிந்தை பலவாறு சீர்கெட்டுத் தடுமாறி-ஐயோ
செய்ய நினைப்பதை எண்ணிநான் பாராமல்--உன் சித்தம்....

கண்கொண்ட ஆசைக்கும் கணக்கேதும் உண்டோ?
கண் இல்லாமல் வாழ்வதே உத்தமம் அன்றோ--உன் சித்தம்....

மாமிச இச்சையால் மயங்குதல் தகுமோ
நெய்விட்டுத் தீயை அணைக்கவும் ஆகுமோ--உன் சித்தம்....

என்வாழ்வை எண்ணி என்னென்ன பெருமை
நீசனாய் வாழ்வதே உண்மையான நிலமை--உன் சித்தம்....

மூவாசை என்னும் மலம் வேறெங்கும் இல்லை
முக்திக்குத் தடையும் வேறாரும் இல்லை--உன் சித்தம்....

24-05-2004. மத்திகிரி (ஓசூர்)

115. சாரம்

சாரமற்றுப் போனால் சற்றேனும் உதவுமோ
சற்றெண்ணிப் பாராய் நீ என் மனமே!
மாற்றென்று வாழ்வினில் வேறு வழிஇல்லை
மனம்போன போக்கில் செல்ல இடமில்லை

உப்பில்லா பண்டம் குப்பையில் நிச்சயம்-ஆனால்
உப்பே குப்பையாகும் தன் தன்மை இழக்கையில்
மனிதனாய் வாழ்வதே உண்மையில் நம்நிலை-இதை
மறந்தால் என்னாகும் அந்தோ நம் நிலை!
26-05-2004. மத்திகிரி (ஓசூர்)

No comments: