Wednesday, September 7, 2011

வாழ்க்கையின் ஓட்டத்தை பற்றி எண்ணியபோது எழுதிய பாடல்:

97. ஓர் ஓட்டம்

எதை அடைய இந்த ஓட்டம்
ஏன் நம்முள் இத்தனை தடுமாற்றம்
ஒன்றை அடைய நாம் ஓடுகின்றோம்
அது என்னவென்று புரியாமலே
"வாழ்க்கை வாழ்வதற்கே" என்பது
நம் "கூவலாகவே" என்றும் உள்ளது
ஆனால் வாழ்க்கையும் என்ன என்பது
வெறும் கேலியாகவே என்றும் உள்ளது
சிற்றின்பம்-பேரின்பம் என்றே
சில சொற்களில் வித்தைகள் காட்டி
அதில் விளம்பரங்களையும் கூட்டி
வியாபாரம் ஆக்கினோம் வாழ்வையே
விடைகாண்கின்றோம் என்ற பெயராலே
விலையாகிப் போனது ஆன்மீகமே
ஆக, சிற்றின்பம்-பேரின்பம் இரண்டும்
கண்ணா மூச்சி விளையாட, அவை
இடையில் மாட்டிக் கொண்ட "அகமே"
உன் நிலை என்றும் பரிதாபமே
இந்த புரியா இலக்கை அடைய, வழி
தெரியாத பாதையில் விரைவாக ஓடி
நம் பாதையில் தடுமாறும் போது
நின்று மீண்டும் கண்கட்டை அவிழ்த்து
தெரிந்த இலக்கு ஒன்று வைத்து
வழி திருந்திய பாதையில் ஓடி
புது முயற்சி செய்வோம் மீண்டும்
நிறைவாக ஓர் வாழ்க்கை வாழ.
24-12-1998. ஈரோடு


98. எதைத் தேடி ஓட

எதைத் தேடி இங்கு ஓட
எதற்காக நான் இன்னும் ஓட
கரை காணா கடல் நடுவில்
தடுமாறும் சிறு தோணிபோல்
புரியாத இந்த வாழ்வில்
எதைத் தேடி நான் ஓட?
கல்வியைத் தேடி ஓடினேன்
பள்ளி நாட்களில் நானும்
பணம்-சுகம் தேடி ஆடினேன்
வாலிப வாழ்வினில் தானும்
நிறைவைத் தேடியே நடந்தேன்
நடுவயதிலே நாளும், ஓர்
முடிவைத் தேடியே தவழ்ந்தேன்
முதுமையிலே இங்கு தானும்
அதன் பின்பு என்னவாகும்
அதை அறியாமலே நானும்
மீண்டும் எதைத்தேடி நான் ஓட
எதற்க்காக இங்கு இன்னும் ஓட?

24-12-1998. ஈரோடு.

வாழ்வில் மனம்-உடல் இடையே நடக்கும் போராட்டம் ஏன் பல சமயம் வெறியும் தோல்வியுமாகி மாறி மாறி வருகின்றது என்ற ஒரு கேள்விக்கு, பதில் கூறிய பின் எழுதிய பாடல்:

99. ஓர் தொடர்கதை

எத்தனை நாள் செல்லும்
இத்தகைய வாழ்க்கை
எப்போது தான் முடியும்
என்மனதின் வேட்கை
வெல்வது யார் என்ற
கேள்விக்கே இடமில்லை
நான் கண்ட வெற்றியெல்லாம்
என் மனதின் தோல்விகளே
ஆவியொடு மாமிசமும்
அன்றாடம் போராட
தோல்வியும் வெற்றியும்
தொடர்கதை ஆனதே

07-02-1999. கொல்கத்தா

சஷி கிராமத்திற்கு வரும்போதெல்லாம் நான் கவிதை எழுதுவதை அறிந்த அவன், அதைப்பற்றி கேட்டபோது, என் கருத்தைக் கூறியபின் எழுதிய பாடல்:

100. எது கவிதை

ஊற்றுப் பெருக்கெடுத்தாற் போல்
உள் உணர்வையெல்லாம்
சொல்லாய் மாற்றி வகைப்படுத்தியே
கூற முயல்வதே கவிதையாகும்
எதுகையோடு மோனை சேர்த்து
இணைப்பதல்ல கவிதை
உள்ளான உணர்வை சொல்லாக்கி
உறைப்பதே கவிதையாகும்
13-03-1999. மஹரி (ரீவா. ம.பி.)

வாலாஜா பேட்டை மணி ஐயர், கொடைக்கானல் கூடுகைக்கு வர இயலாதது பற்றி எழுதிய போது, பதிலாக நான் எழுதிய கடிதம்:

101. பருப்பில்லாத கல்யாணம்

பருப்பில்லாத கல்யாணமாம்
மணி ஐயர் இல்லாத கூடுகையாம்
கேட்டதுண்டோ உலகினிலே
கேளீரோ இந்த வேடிக்கையை
உப்பில்லாத பத்தியம் உண்டு
உடல் நலம் இல்லாதவர்க்கு
உப்பே இல்லாமல் சாப்பிட்டால்
அதுவே நோயாகும் பிறகு
எனவே மணி இல்லாத கூடுகை
உப்பில்லாத உணவாகும், அதனால்
தப்பில்லாமல் கொடை வந்து
சுவையாக்க வேண்டும் கூடுகையை

30-04-1999. ஈரோடு.

மனித வாழ்வில் மட்டும் ஏன் இத்தகைய போராட்டம்? இதைப்பற்றி ஒரு வாலிபனுடன் பேசிய பிறகு எழுதிய பாடல்:

102. எவ்வளவோ நன்மை

மிருகமாய் இருந்துவிட்டால்
எவ்வளவோ நன்மை
வேண்டாத போராட்டம்
பல இல்லாமல் வாழ
பகுத்தறிவு என ஒன்றை
பயனின்றி ஏன் தந்தான்
"பகுத்தே" அறிந்தபின்னும்
"வகுத்து" அதன்படி வாழாமல்
சிந்தை போன போக்கில்
சித்தமும் தான் போக
சுய புத்தியும் இழந்து
செய்வதறியாமல் தடுமாறும்
சிறுமையான இவ்வாழ்வில்
மிருகமாய் இருந்துவிட்டால்
எவ்வளவோ நன்மை
மேன்மையான வாழ்க்கை
மேதினியில் நாம் வாழ.
26-06-1999. ராணிகேத் (உத்திரா காண்ட்)


எவ்வளவு கேள்விகள் வாழ்வில் இருந்தாலும், அவற்றுக்கு நிச்சயம் விடையும் உண்டு. ஆனால் நம் பிரச்சனை அந்த விடைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதுதான். இதைக்குறித்து சிந்தித்தபோது எழுதிய பாடல்:

103. தெளிவான வழி

விடையாக வாழ்க்கையில்
பலவேறு வழிகளை
வகையாகத் தேடினோம்
தேடிய வழிகளும்
கூறிய விடைகளைக்
கைக்கொள்ளத் தயங்கினோம்
தேடிய முறகளே
தெளிவாக இல்லாது
விடைகளை நாமடைந்தால்
போகின்ற வழியுமோ
பொழுது போக்காகி
ஊர்போக உதவிடாது
தேடுமுன் விடைகளை
தெளிவாக ஒன்றைநாம்
மனதினில் கொள்ளவேண்டும்
தெய்வத்தின் அருளொடு
தேர்ந்த வழியிலே
துணிந்தே செல்லவேண்டும்
10-01-2000. ஈரோடு.

இன்று மாலை மழை வந்தது. ஆனால் பலத்த காற்று வந்து சற்று நேரத்தில் அதைக் கலைத்தபோது எழுதிய பாடல்:

104. கூட்டணி சரி இல்லை

வானம் திறந்து நீ வாராயோ
வையம் குளிர உனைத் தாராயோ
வரண்ட நிலத்தையும் வாடிய பயிரையும்
வருடி அணைத்திட நீ வாராயோ?

இருண்டது வானம் இடித்தது மேகம்
மகிழ்ந்தது உள்ளம் உன் வரவை எண்ணி
ஆனால் கட்டியம் கூறிய காற்றோ சற்றும்
கருணை காட்ட மறுத்தது ஏனோ?

கோடையின் வெப்பம் தகித்திடும் போது
கொஞ்சமும் கருணை காட்டாத காற்று
உன் வரவைக் கூற வந்திடும் போது
விரைந்து உன்னை விரட்டுவது ஏனோ?

காறும் மழையும் கலந்தே என்றும்
கூட்டணி அமைப்பது சரியே இல்லை
தனித்தே வந்து அவை தந்திடும் சுகம்
அதை வர்ணிக்க வார்த்தை என்னிடமில்லை.

மத்திகிரி, 16-04-2000.

என் சீடர்களில் என்னை மிகவும் நேசித்து என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கீழ்படியும் ஒரே சீடன் பிரசாத்தான். அவன் விபத்தில் இறந்தபின் அவனை எண்ணி எழுதிய பாடல்:

105. பிரசாத்

பிரிவினைத் துயரிலே தவிக்கவிட்டு
பிரியா விடைபெற்று சென்றுவிட்டான்
பெயரிலே கருணை கொண்டிருந்தும்*
செயலிலே ஏன் அதை மறந்துவிட்டான்
பிரியமுடன் மணந்த பிரியாவின் மீது
பிரியாத காதல் கொண்டிருந்தும்
பரிதபித்து அவள் தவித்திடவே
பிரிந்து செல்ல ஏன் துணிந்துவிட்டான்?
ஆர்வமுடன் ஈன்ற பிள்ளைகள் மன
ஏக்கத்தில் வாழ்விட்டு எங்கு சென்றான்?
மடிமீது போட்டு வளர்த்த அன்னை
மனதினை துயரிலே மிதக்கவிட்டான்
நேசமாய்ப் பெற்ற தந்தை மனத்
துயரிலே என்றுமே இறக்கிவிட்டான்
பாசமாய் கூடவே வளர்ந்த தம்பி
பாரினில் தனியே தவிக்க விட்டான்
அன்புடன் அரவணைத்த சுற்றமெல்லாம்
என்றுமே எண்ணி புலம்ப விட்டான்
நாளெலாம் நட்பு பாராட்டிய
நண்பர்கள் மனம் திகைக்க விட்டான்
உபதேசம் அருளிய குருவும் கூட
ஓயாமல் எண்ணி புலம்ப விட்டான்
சென்றுவிட்டான் இனி செய்வோமினி
தெய்வமே உன்னிடம் வந்துவிட்டான்
"பிரசாத்" என்ற பெயருக்கேட்ப
பிரசாதமாய் உலகிலே வாழ்ந்துவிட்டான்
அவன் இட்ட வித்துகள் இனி
ஆல்போல் தழைத்து பலன் கொடுக்க
இறைவனே அருளுவாய் உன் பிரசாதம்
என்றுமே உன்புகழ் நிலைத்து நிற்க.
27-06-2006. மத்திகிரி.
*"பிரசாத்" என்ற சொல்லிற்கு கருணை, கிருபை என்ற அர்த்தம்.

No comments: