Tuesday, August 23, 2011



வாழ்க்கையின் அன்றாட போராட்டங்களை எண்ணியபோது எழுதிய பாடல்.

22 . வாழ்க்கை

என்னதான் வாழ்விதுவோ?
எப்படித்தான் வாழ்ந்தாலும்
எஞ்சுவதோ என்றுமிதில்
ஏமாற்றம் ஒன்றுமட்டும்
தனக்கெனவே வாழவும்
தலைப்படும் மனிதனுமே
நிறைவேதும் காணாமல்
தேடுகின்றான் ஏதோஒன்றை
கிட்டியது எட்டவில்லை
எட்டியதோ கிட்டவில்லை
என்றாலும் போராட்டம்
எப்போதும் ஓய்வதில்லை
கைநிறைய சோறள்ளி
வாயருகில் சென்றாலும்
பல்தட்டிய காரணத்தால்
சிதறியது அத்தனையும்
ஆனாலும் தோல்விதனை
அப்படியே ஏற்காமல்
பொறுக்கி எடுக்கின்றான்
புழுதியது ஒட்டாமல்
நாளும் தொடர்ந்திடுமே
நானிலத்தில் உள்ளமட்டும்
வேண்டா இப்போராட்டம்
வேறென்ன செய்திடுவான்.
16-08-1993. கோண்டா, உ. பி.

மனதின் போராட்டங்களை எண்ணியபோது எழுதியபோது எழுதிய பாடல்.

23. மனமே!

மனமே உன்தன் நிலைதான் என்ன?
மதிற்மேல் பூனைபோல் வாழ்கிறாய் நாளும்
நன்றும் தீதும் நன்கறிந்த போதும்
நீ நாடுவதேதோ புரியவில்லை நாளும்
உன்னுடன் போராடி ஓய்ந்துவிட்ட நானும்
உன்னிஷ்டம்போல் செய் உன்பாடு எனக்கென்ன?
என்றெண்ணிக் கைகழுவ எவ்வளவு முயன்றாலும்
என்னிடமே முறைக்கின்றாய் ஏற்றிடவும் மறுக்கின்றாய்
வேடிக்கை என்னவென்றால் என்வாழ்வில் நீயும்
வேண்டாத விருந்தினனாய் ஆகிவிட்ட போதும்
அழைத்துன்னைப் படைக்கின்றேன் அருஞ்சுவை உணவு
அதன்பின் தவிக்கின்றேன் என்செயல் நினைந்து
உன்னையன்றி என்னாலே வாழ்ந்திடவோ முடியாது
என்னையன்றி புகலிடம் உனக்குலகில் கிடையாது
எனவே வேண்டும் நம்மிடைஓர் உடன்பாடு
இல்லையெனில் நம்நிலை ஆகிவிடும் பெரும்பாடு
பதவிப் போராட்டம் நம்மிடை இனிவேண்டாம்
நானின்றி நீயில்லை நீயன்றி நானில்லை
உன்னைச்சை போல செயல்படும் போதினிலே
என்நிலை தன்னை நீசற்றே எண்ணிவிடு
‘மாட்டேன்’ என்று மறுத்தே நீ நடந்தால்
மாற்று உண்டொன்று மருந்தாக என்னிடத்தில்
அடக்கி ஒடுக்க ஆனமட்டும் முயன்றிடுவேன்
அதில்தோற்றால் உன்தனுக்கு ஆகிவிடுவேன் அடிமையாக.
25-08-1993. கோண்டா, உ. பி.

15-06-1994-ல் வந்த இண்டியா டுடே என்ற ஆங்கில வார இதழில் படித்த ஒரு செய்தி (ப. 146-152) என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருவருக்கொருவர் தம் மனைவியை மாற்றிக்கொள்ளும் அவலநிலை பற்றிய செய்தி அது. அப்போது எழுதிய பாடல்:

24. மாக்கள்

பாரமே இந்த உலகவாழ்க்கை
பாவம் நிறைந்ததோர் கடினவாழ்க்கை
ஆருளார் ஐயகோ இதில் கரைதேற
அழிந்திடும் நம்நிலை முற்றிலும் மாற்ற
காமம், குரோதம், லோபம், மோகம்
கட்டறுத்த நிலையிலே போட்டிடும் ஆட்டம்
எத்தனை முயன்றாலும் இதை மேற்கொள்ள
யாராலும் முடியாது ஐயோ என்சொல்ல
கணநேர சுகமே பெரிதன எண்ணி
காமத் தீயிலே மனதினைத்தள்ளி
கட்டுக் கடங்காமல் இம் ‘மாக்கள்’ போடும்
காமக் களியாட்டின் முடிவென்ன ஆகும்?
பிறன்மனைவி தன்னையே பெண்டாள எண்ணி
தன்மனைவி தன்னையே தாசியாகப் பண்ணி
தறிகெட்ட மிருகமாய் தம்மையே மாற்றி
தடுமாறும் மாந்தரின் நிலைமையே என்ன?
சீர்கெட்ட இந்நிலை மாற்றிட வேண்டும்
சேதம் பெருகும் முன் காத்திடவேண்டும்
நேர்மை விரும்பிடும் மாந்தரே வாரும்
காரியம் கைமீறும் முன் போராட இன்று.
15-06-1994. லக்னோ

ஒருமுறை மனதில் மிகவும் போராட்டம் மிக அதிகமாகியது. அப்போது என்நிலை எண்ணி நானே சிரித்தேன். அப்போது எழுதிய பாடல்

25. போராடப் பொழுதில்லை

போராட்டம் என்கிறார்
வாழ்க்கையைப் பலர்
பொழுது போக்கு
என்கிறார் சிலர்
பொழுதும் போனது
தீர்மானம் செய்வதில்
போராடப் பொழுதில்லை
அதனாலே இனிமேலே
08-11-1994, மஹரி (ரீவா. ம. பி).

எதிர்ப்பார்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் ஏமாற்றமும் வாழ்க்கையின் ஒருபகுதியே. அதை சிந்தித்த போது எழுதிய பாடல்

26. எது உண்மை

எது உண்மை இங்கு வாழ்விலே
எதிர்பார்ப்போ ஏமாற்றமோ?
எதிர்பார்த்து நின்றால்
ஏமாந்தே போவாய்
ஏமாறுவேன் என்றால்
எதிர்கொள்ள மறுப்பாய்
எதிர்பார்ப்பு ஏமாற்றம்
இவ்விரண்டும் தேவையே
இவை இல்லா வாழ்வுமோ
சிறகில்லா பறவையே
08-11-1994. மஹரி (ரீவா. ம.பி.)

ஏமாற்றம் ஏற்படும்போது வாழ்க்கையில் விரக்தியும் வரும். ஆனால் அதை மேற்கொள்வதே உண்மை போராட்டம். இதைக்குறித்து எண்ணியபோது எழுதிய பாடல்.

27. வீணில் புலம்பாதே

பெருமூச்சு விட்டு வீணில் புலம்பாதே
போனது போகட்டும் புறப்படு இனிமேலே
தோல்வியே காணாத மனிதனும் உலகில்
தோன்றவில்லை இதுவரை தெரிந்துகொள் வாழ்வில்
விரக்தி என்பது வீணான கற்பனை
வீழ்த்திடும் உன்னையும் அதுவுமோ பலமுறை
விலக்கிடு அதனையும் வீரமுடன் இன்று
வீறுகொண்டு எழு எதுவந்தாலும் என்று.
08-11-1994. மஹரி (ரீவா. ம.பி.)

மஹரியில் (ரீவா. ம.பி) டாக்டர் சஷிகாந்த் தூபே வீட்டில் இருந்தபோது அவனுக்கு முனைவர் பட்டம் பெறவேண்டி உதவிசெய்ய, அமரிக்க பெண் கவிஞ்ஞர் எமிலி டிக்கன்சன் கவிதைகளை படித்தேன். அவருடைய தனிமை (Recluse) வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று என் அறையில் தனிமையில் இருந்து ஜன்னல் வழியக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எமிலியின் அத்தகைய வாழ்க்கை எண்ணிய போது என்நிலை எண்ணி எழுதிய பாடல். (இங்கு ஆஸ்ரமத்தில் என் தாயாருடன் இருப்பதால் மாதக்கணக்கில் வெளியே செல்வதில்லை. அது எனக்கு பாரமாகவே இல்லை. எனவே 1994-ல் எழுதிய கவிதை இன்றைய என் நிலைக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கின்றது. தனிமை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வெளிஉலகம் பார்க்காத தனிமை மிகவும் பிடித்த ஒன்று)

28. சும்மா இரு

திறந்த ஜன்னல் வழியாக
தெருவைப் பார்த்திடும் போது
சிறையில் நான் இருப்பதாக
தோன்றிடும் எண்ணம் அப்போது
யாரிருப்பது இங்கு சிறையில்
என்றே என்னை பிறர் கேட்டால்
நானல்ல உலகம் என்றே
நன்குணர்ந்து நான் கூறுவேனே!
ஆனால் இவ்வுலக மாந்தர்
எந்தன் நிலையை எண்ணி
‘அந்தோ பரிதாபம்’ என்பர்
அறிந்திடாமல் அவர்தம் நிலையை
அறையில் அடைந்திருந்தாலும்
அடைபடாத என் எண்ணம்
சிறகடித்துப் பறக்கும் நான்
விரும்பும் திசையெங்கும் செல்லும்
சுதந்திரமாக வெளி உலகில்
சுற்றிடும் மனிதர் நிலையும்
சொல்லில் கூற வொண்ணா
சுமையே அவர்க்கு நாளும்
சுறுசுறுப் பென்ற பெயரில்
நாடி ஓடி ஆடிச் சாடி
நாளையும் வீணில் கழிப்பார்
தம் நிலை உணர்ந்திடாமல்
‘சும்மா’ இருப்பது சோம்பலல்ல
சுறுசுறுப்பும் வேலை அல்ல
சிறப்பாய் உழைக்க வேண்டுமானால்
‘சும்மா இருக்கவும்’ வேண்டும்
11-11-1994. மஹரி (ரீவா. ம.பி.)


No comments: