Friday, August 26, 2011மஹரியில் (ரீவா, ம.பி.) எமிலி டிகன்ஸன் கவிதைகளைப்படித்துக் கொண்டிருந்தேன். அவரது தனிமை வாழ்க்கைகுப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அவரது காதல் தோல்வி; ஆனால் உண்மையான காரணம் எவர்க்குமே தெரியாது. வெறும் கற்பனையிலும், அனுமானத்திலும் பிறர் வாழ்க்கையைப் பற்றி எத்தனைக் கதைகள் கூறுகின்றார்கள். அதில் என்னைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

29. சுயசரிதை

என்னென்ன கூறுவார்கள்
இறந்தபின் என்னைப் பற்றி
இருக்கும் போது கேட்கமாட்டார்
எந்தன் மன நிலைப்பற்றி
துறவரம் இவனும் பூண்டான்
துணிவற்றதால் வாழ்ந்து காட்ட
போட்டதெல்லாம் வெறும் வேஷம்
காணவில்லை அவனில் பெரும் மாற்றம்
காரணம் ஏதாய் இருக்கும், இவன்
வாழ்வைத் துறந்து இங்கு ஓட?
காதல் தோல்வியாய் இருக்கும் என
கதையும் கூறுவார் பலவே
துறக்கவில்லை வாழ்வை நானும்
தோற்கவில்லை வேறெதில் தானும்
வாழ்கிறேன் வாழ்வில் நாளும்
வளமுடனே உம்மைப் போல
காசு, காதல், பெண்டு, பிள்ளை
எல்லாம் உலகின் வெளி வேஷம்
போகும் போது கூடவாரார் எனவே
இருக்கும் போதும் எனக்கு வேண்டாம்.
11-11-1994.

வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது இன்று எழுதிய பாடல்

30. ஓர் உளறள்

குருடன் வரைவதும் ஓவியமோ
குழந்தை கட்டுவதும் வீடாகுமோ
ஊமையின் உளறலும் பேச்சாகுமோ
பேதைஎன் எழுத்துமே கவியாகுமோ
ஆயினும் உள்ளத்து உணர்வுகளை
அடக்கிட முடியாத காரணத்தால்
எழுத்திலே கூறிட இங்கு வந்தேன்
கவிதை என்ற பெயராலே
ஊமையும் கண்டான் ஓர் கனவு
உணர்த்திட காணான் வார்த்தையினை
ஊமையான என் மனநிலையும்
ஊமை கண்ட கனவதுவே
வாழ்க்கையின் தத்துவம் என்னவென்று
வாழ்ந்திடும் பலரையும் நானும் கேட்டேன்
‘மாயையே வீண் மாயையே இது
பேதையே நீயும் உணர்வாய்’ என்றார்
‘மாயையே இவ் வாழ்க்கை யென்றால்
வீணில் இப்போராட்டம் உம்மில் ஏன்";
கேள்விக்கு பதில் இல்லை அவரிடமே
இக்கேள்வியே வீண் மாயை என்றார்
அறிந்தவர் யாரும் இங்கு உண்டோ?
அறியாத இப்பேதைக்கு பதில்லளிக்க
ஊமையின் உளறலே இக்கேள்விதானும்
உளறலைப் பொருத்துமே பதிலளிப்பீர்!
மஹைரி (ரீவா. ம.பி.), 12-11-1994.

இந்நாட்களில் நான் எழுதும் பாடலில் ஆன்மீகம், பக்தி, இறைவன் போன்றவை மட்டுமல்லாமல் சாதாரணமான வாழ்க்கையை, பொதுவான எண்ணங்களை பிரதிபளிப்பனவாய் உள்ளன. என்னைப் போன்றோர் ஆன்மீக சம்பந்தமான பாடல்களை மட்டுமே எழுதவேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு பதில் கூறும் முகமாய் எழுதிய பாடல்:

31. இறைவன்

எழுதினால் இறைவனைப் பற்றியே
எழுதவேண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பக்கத்னல்ல
என்கிறார் போலி பக்தருமே
எழுத்தினால் இறைவனைக் கூறிவிட்டால்
சிந்தையே தெய்வமாய் ஆகிவிடும்
தெரிந்தவர் கூறும் பதிலிதுவே
மஹரி. (ரீவா. ம.பி.) 12-11-1994.

ரீவாவில் உள்ள ஒரு சீடனின் தவறான செயலுக்கு நான் உடன்படாதது மட்டுமன்றி அதை எதிர்த்ததால், அவன் என்னைப் பற்றி மற்றவர்களிடம் பல குறைகள் கூறத் தொடங்கினான். அதுபற்றி சஷிகாந்திடம் பேசிக்கொண்டிருந்த பின் எழுதிய பாடல்:

32. குறை

தம்குறை தன்னை உணர்ந்திடாத
தரணியின் மாந்தருமே
பிறர்மீது பழிகூறி, தம்குறை
மறைப்பார் பேதமை அவர் செயலுமே
சொல்லொன்று செயலொன்று
எனக் கொண்டு வாழ்ந்திடும்
சிறுமையான மனிதருக்கே
சுயபிழை தெரியாது, பிறர்பிழை
பெரிதாக்கி கூறுவார் பலகுறையுமே
குறையில்லா மனிதரும்
உலகினில் கிடையாது
உணர்ந்தால் இதை நாமுமே
தம்பிழை போலவே பிறர்பிழை
பொறுப்போம் தயவுடன் நாளுமே!
மஹரி, (ரீவா. ம.பி.) 13-11-1994

‘Success is Counted sweet;
By those who ne’er succeed;
To comprehend A Nector;
Requires the sorest need’
—Emily Dickinson. இப்பாடலை படித்த போது எழுதிய பாடல்:

33. தோல்வியும் வெற்றியும்

வெற்றி என்பது கிட்டாத கனியே
எட்டியே பார்த்து ஏமாந்தவர்க்கு
தோல்வி என்பதும் தாங்காத சுமையே
தளர்ந்தே வாழ்வில் நிற்போருக்கு
வாழ்வெண்ணும் வண்டியை
விபத்தின்றி நாளுமே
வகையாக் கொண்டே செல்லும்
தண்டவாளமே அவையிரண்டும்
மஹரி (ரீவா. ம.பி.) 17-11-1994.

சஷிகாந் தூபே வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்டதற்கு என் பதிலைக் கூறியபின் எழுதிய பாடல். (‘What is the purpose of life?’—Shashi. ‘The purpose of the life is to live’.--dayanand).

34. வாழ்க்கை என்பது வீண் மாயையல்ல
வார்த்தையும் அர்த்தமில்லா உளறல்லல
கூறிடும் வார்த்தையில் அர்த்தமுண்டானால்
வாழ்ந்திடும் வாழ்வில் பயனும் உண்டே
முழுமையாய் வாழ்ந்தவர் யாருமில்லை, இங்கு
வாழ்வின் ரகசியத்தை அறிந்து கொள்ள
முயல்கின்றார் தம்மால் இயன்றமட்டும்
முயன்றிடு நீயும் உன்னால் ஆனமட்டும்
“மாயை” என்கின்ற பெயராலே வீணில்
நாளையும் கழிக்கின்றார் சோம்பலாய்--அந்த
பேதமை நிறைந்த மாந்தரை விட்டு--நீ
புறப்படு நிறைவாய் வாழ்ந்து காட்ட.
மஹரி (ரீவா. ம.பி.), 18-11-1994.

35. மனிதன் ஓர் புதிர்

மனிதனும் ஓர்
மாறாத புதிரே
மண்ணில் தோன்றிய
நாள் முதலே
புரியாத இப்புதிருக்கு
தெரியாத விடைதேடி
போராடு கின்றான்
வழி அறியாமலே
புரிந்தவர் கூறிய
வழியிலே சென்றாலும்
திரும்புவது என்னவோ
தொடங்கிய இடமே
தொடக்கமும் முடிவும்
ஒன்றே ஆனபின்
தொடர்ந்திடும் வரையில்
புதிரே மனிதனும்
ரீவா, (ம.பி.) 23-11-1994.

பலசமயம் நடுஇரவில் உறக்கம் கலைந்தபின் வெகுநேரம் விழித்தவாரே படுக்கையில் இருக்கும்போது, மனிதவாழ்வைக் குறித்து ஆழமாக சிந்திப்பேன். அப்போது மனதில் ஓடும் எண்ணங்களை, பக்கத்தில் வைத்திருக்கும் காகிதத்தில் கவிதையாக எழுதுவதுண்டு. அதில் இப்பாடல் ஒன்று:

36. வாழ்க்கை

உறக்கமற்ற இரவுகள்
உணர்வற்ற உறவுகள்
கலக்கமுற்ற நினைவுகள்
கலந்ததே வாழ்க்கை
வரவுவரை உறவு
வந்தவரை வரவு
நிறைவற்ற குறைவு
கொண்டதே வாழ்க்கை
உள்ளவரை வருவார்
உதவும்வரை நினைப்பார்
சென்றபின்னே மறப்பார்
வெறுமையே வாழ்க்கை
எதையெண்ணிப் புலம்ப
யாதெண்ணி வருந்த
மனமே நீ கலங்காதே
மாயையே வாழ்க்கை
ரீவா, 29-11-1994.

காலை யாதுராம் வீட்டிலிருந்து லலனைப் பார்க்கப் போகும்போது என்னையே எண்ணி நான் சிரித்தேன். என்வாழ்க்கையைப் பலர் வேஷம் என்கின்றார்கள். ஆனால் நானே என்வாழ்க்கையை ஒரு வேஷம் என்று எண்ணும்போது, பிறர் என்ன எண்ணுவார்கள் என எண்ணாமல், என்னைப் பற்றிய எனது எண்ணங்களே எனக்கு சிரிப்பை வரவழைக்கும். இப்பாடல் ரோடில் நடந்துகொண்டிருக்கும் போதே மனதில் எழுதிக்கொண்டு போய், பின் லலன் அறையில் எழுதியது:

37. ஏமாற்றம்

ஏமாற வந்தோம் ஏமாற்ற வந்தோம்
இன்றும் என்றும் வாழ்க்கையிலே
இதுபோன்ற உண்மை வேறொன்றுமில்லை
நான்கண்ட வரையில் இவ்வுலகினிலே
தாய்தந்தை அன்று ஏமாந்ததால் இங்கு
தரணியில் நாம்வந்தோம் ஏமாற்ற இன்று
போடுவதெல்லாம் வெறும் வேடமே என்று
புரிந்துகொள் மனமே அனுதினம் நன்று
போடும் வேடமோ ஏமாற்றவென்று
புலம்பலும் வீண்ணி ஏனிங்கு இன்று
ஏமாறும் மனிதரும் இருக்கின்றவரையில்
ஏமாற்றும் மனிதரும் இருப்பதும் உண்மை
ரீவா, 29-11-1994.

எனது நண்பன் ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, தன்னில் இருக்கும், தனக்கே தெரியாத தவறுகளுக்காக இறைவன் அளிக்கும் தண்டனையாக இருக்குமோ என்று எண்ணி எனக்கு கடிதம் எழுதியபோது, அவனுக்கு பதிலாக நான் எழுதியபாடல்:

38. யாருமே இல்லை

தண்டிப்பதற் கென்றே
இறைவனும் தலைப்பட்டால்
தரணியில் எஞ்சுபவர்
யாருமே இல்லை
குணமன்றி குற்றேமே
காணவும் தலைப்பட்டால்
குறயில்லாத மனிதரும்
உலகிலே இல்லை
தவறெண்ணி வருந்தி
குறையெண்ணி திருந்தி
சோர்வுகளை நீக்கி
செயல்படப் புறப்படு
11-12-1994

நான் ஓரளவு பகுத்தறிவு வாதியும், தர்க்கவாதியாகவும் இருந்தும் என்மனதின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. என்பகுத்தறிவின் மூலம் என் மனதின் மீது முழுக்கட்டுப்பாடு கொள்ளமுடியவில்லை. இதைப்பற்றி யோசித்தபோது எழுதிய பாடல்:

39. மனம்

சஞ்சலமானதே மனது, அது
தன்போக்கிலே போகும் போது
தடுத்தாட்கொள்ள முடியாது
தவிக்கின்றேன் நானும் அப்போது
அடக்க எண்ணினால் எதிர்க்கும்
எதிர்க்க எண்ணினால் நகைக்கும்
சோர்ந்து நின்றாலே வெறுக்கும்
துணிந்து சென்றாலோ மறுக்கும்
நான் விரும்பும் வகையாக
மாறுவது நீயும் எப்போது
மனமே உன்சித்தம் போல
முடிவுசெய் அதையும் இப்போது.
14-12-1994


“Believe not those prattlers”, says one often quoted mystical work, “who boast that they know God”, who knows Him is silent’.—P.V.Kane, History of Dharmasaastras, vol.V, part II, p. 1505. --என்ற வரிகளைப் படித்தபோது, உடன் எழுதிய பாடல்:

40. சும்மா இருத்தலே அன்றி

இறைவன் இருப்பதும் எங்கே
கேள்வியும் புதிதல்ல இங்கே
சிந்தையால் அறியமுடியாது
சொல்லாலும் கூற இயலாது
சித்தத்தை அவன்பால் அடக்கி
’சும்மா’ இருத்தலே அன்றி
சிறந்த வழியும் கிடையாது
தெய்வத்தைப் பற்றி கூற.
14-12-194


No comments: