Monday, August 8, 2011

1970-துகளிலிருந்து நான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் ஒரு கையேட்டில் தனியே எழுதி வைத்திருந்தேன். பிறகு அதை என் நண்பன் ஒருவனுக்கு படிக்க தந்திருந்தேன். ஆனால் அது எப்படியோ தொலைந்து போய்விட்டது. எனவே இப்பாடல்கள் தற்சமம் என்னிடம் இல்லை. இரண்டொரு பாடல்கள் மட்டும் நினைவில் உள்ளன. சில பாடல்களின் சில வரிகளும் பல்லவிகளும் நினைவில் உள்ளன. ஆனால் அவற்றை மீண்டும் எழுத முயற்சி செய்யவில்லை. எனவே நினைவில் உள்ளவற்றைமட்டும் முதலில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஆனால் 1982-க்குப் பின் எழுதிய பாடல்களில் பெரும்பான்மையானவை தனியாக உள்ளன. அவற்றை இனி வரும்காலங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

இப்பாடல் 1974 அலல்து 1975-ல் எழுதியது. சின்னக் குழந்தைகள் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு பொக்கைவாய்த் தெரிய சிரிப்பதைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும். அப்பொழுதெல்லாம் நினைப்பேன்: இதுபோலவே கள்ளம் கபடம் அறியாத பிள்ளைபோலவே காலம் முழுதும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.!

2. குழந்தையாக வேண்டும்

குழந்தையாக வேண்டும் மீண்டும்
குழந்தையாக வேண்டும்
இக்குவளையத்தின் கவலை மறக்க
குழந்தையாக வேண்டும்
குஞ்சுகாலும் பிஞ்சுகையும்
கொள்ளையழகுதான்
குறுகுறுக்கும் விழி இரண்டும்
பறக்கும் வண்டுதான்
பொக்கை வாயின் பல்லிரண்டு
மட்டும் தெரிந்திடும்
உன் புன்னகையின் அழகு கண்டு
உலகம் சொக்கிடும்
பரம்பொருளே உன்னை யொன்று
நானும் வேண்டுவேன்
இப்பாரினிலே எதுவரை நான்
வாழ்ந்திருந்தாலும்
கள்ள குணம் அறிந்திடாத
பிள்ளை மனம் போல்
காலமெல்லாம் வாழ்ந்திட
நீ அருள் புரிவாயே.


3. இன்னும் உறங்காதீர்

செவ்வொளி கதிர்பரப்பி செங்கதிரோன் வந்தான்
நல் ஒலி புவிக்குரைத்தே புள்ளினம் விழித்தன
ஒளி-ஒலி உணர்விலாமல் உறங்குகின்ற உலகுலோரே
இவ்விதம் வாழ்வு சென்றால் எவ்விதம் உய்வீர்சொல்
இயற்கையின் ஆட்சியிலே எங்குறக்கம் இல்லைகாண்
பூக்கின்ற மலர்களிலும் பாய்கின்ற நதியினிலும்
வீசிடும் தென்றலிலும் வெவ்வேறு காட்சியிலும்
இளமைத்துடிப்புடனே இயற்கையன்னை நகைக்கின்றாள்
ஆறறிவு பெற்றோமென்றே அறற்றுகின்றீர் பெருமையுடன்
ஓரறிவு புல்லுக்குள்ள உணர்வும்தான் உமக்கும் உண்டோ
காலைப்பொழுதினிலே பனிநீரல் தனைக்கழுவி
காத்திருக்கும் ஆவினிற்கே மனம்மகிழ் உணவாக
சோர்ந்து சோர்ந்து படுத்துறங்கி யாது சுகம் கண்டீர்
சொல்லும் ஓர் பயனுண்டோ உம்மால் இவ்வுலகினிற்கே
படைத்தோனும் உயிரையெல்லாம் பயனின்றிப் படைப்பதில்லை
பகர்கின்றீர் பலபொய்கள் பாழும் இச் சோம்பலுக்கே
இன்னும் உறங்காதீர் எழுவீர் துடிப்புடனே
செய்வீர் உம் தொழிலை செய்யும் முறையுடனே!


நான் விற்பனைப் பிரதிநிதியாக (1975-ல் என நினைகின்றேன்) வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு கட்டமொம்மன் கார்போரேஷன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனர் மிகவும் மெதுவாக ஓட்டினார். இடையிடையே பல நிறுத்தங்கள் வேறு. பல பயணிகளும் மிகவும் எரிச்சலுற்று முணுமுணுக்க ஆரம்பித்தனர். அப்போது உடனே என் கையிலிருந்த நோட்டில் எழுதியபாடல். எனக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் ஒரு கணவனின் கூற்றாக இதை எழுதினேன்:

4. கட்ட வண்டி

கட்டபொம்மா கட்டபொம்மா
உன் கட்ட வண்டியை கட்டமொம்மா
கடிதுடனே ஓட்டிச் செல்வாய்
கதறுகின்றோம் காற்றில்லாமல்
கட்டமொம்மன் பேரும் கொண்டாய்
கட்ட வண்டிபோல் ஓட்டுகின்றாய்
கட்ட வண்டிபோல் ஓட்டிச் சென்றால்
காலம் பூரா பஸ்ஸில் போகும்
காதம் பல கடந்து செல்லவேண்டும்
காலத்தில் வீடுபோய் சேரவேண்டும்
காலத்தில் வீடுபோய் சேராவிட்டால்
என்காதல் மனையாளும் கோபிப்பாளே
காதல் மனையாளும் கோபித்தாலே
காசுக்கு வீண் செலவு வந்துவிடும்
காசுக்கு வீண் செலவு வந்துவிட்டால்
இந்த மாசக்கடைசியில்
நான் என்னசெய்வேன்?

No comments: