திருச்சி மலைக்கோட்டையில் என் பெற்றோருடன் வடக்குத் தெருவில் இருந்த (1972-ல்) போது ஒரு நாள் மாலை மேல் மாடியில் நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் காவிரி ஓடுவது தெரியும். அப்போது மாலை நேர ஆராதனைக்காக மலைகோயிலில் மணி அடித்தது. அந்நேரம் வாழ்க்கையைக் குறித்த சில எண்ணங்கள், கேள்விகள் மனதில் எழுந்தன. வாழ்க்கையின் அர்த்தம், நோக்கம், போராட்டம் ஆகியவை பற்றி எண்ணிய போது எழுதிய பாடல்:
5. நானொன்றும் அறிகிலேன்
பூண்கொங்கை அன்னையே
போற்றுதும் நின் திருநாமம்
வீண் பிறவி எடுத்தேனை
வினை நீக்கி ஆள்வாயே
நான் என் வினை செய்தேன்
நாயினும் இழி இப்பிறவிக்கு
நான் ஒன்றும் அறிகிலேன்
நான் முகனே பழிக்குறியான்
எடுத்த பிறவி போதும்
இனிப் பிறவி வேண்டிலேன்
தடுத் தென்னைக் காப்பாய்
தயாபரி நீ சங்கரியே
திருச்சியில் இருந்தபோது, சில சமயம் திருவானைக்காவல் கோயிலுக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் அங்கு சென்று வந்தபின் (1972-ல்) எழுதிய பாடல் இது. இதை என் அம்மா, தன் பஜனை மண்டலியிலும் அறிமுகம் செய்து பலரும் பாடியுள்ளனர். இன்றைக்கும் (2011) என் அம்மாவிடம் இப்பாடல் உள்ளது. அதை அவரிடமிருந்து கேட்டு வாங்கி இங்கு வெளியிடுகின்றேன்.
6. பாதாதி கேச வர்ணனை
அண்டமெல்லாம் பூத்து அகிலமெல்லாம் காக்கும்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
தண்டையணி பாதமதில் தெண்டனிட்டு நான் பணிந்தேன்
திருக்கண்டன் இடப்பாகம் கலந்தவளே காத்தருள்வாய்
அழகிய நின் பாதமதில் அணிசெய்யும் பொற்கொலுசும்
அண்டமெல்லாம் முழங்கும் மாணிக்கப் பரலழகும்
மஹிடன் தலைமிதித்த திருக்காலின் காப்பழகும்
கண்ட என் உள்ளம் களிகொண்டு கூத்தாடும்
சின்னஞ்சிறு மருங்கில் சாற்றிய மென்பட்டும்
சிற்றிடையின் மேல் ஓடும் முத்தான மேகலையும்
கொடி இடை அசைந்தாட குழைந்து வரும் நடையழகும்
கண்ட என் ஊள்ளம் களி கொண்டு கூத்தாடும்
ஆசையுடன் நான் சார்த்தும் அழகிய பொன்மாலைகளும்
அடியவர் தான் அளிக்கும் அழகிய பூ மாலைகளும்
வாசமுடன் உன்மார்பில் வலம்வரும் போதினிலே
ஓசையுடன் என் உள்ளம் ஓங்கி நின் புகழ்பாடும்
சங்கென்ன வெண் கழுத்தில் தான் ஒளிரும் சிறுதாலி
அகன்ற உன் தோளினிலே அணிசெய்யும் முத்தாரம்
நாற்றிசைக்கும் ஒளிசேர்க்கும் நவமணி மாலைகளும்
நான் கண்ட போதினிலே நயந்து என் உளம் பாடும்
எற்பு ஏசிய நாசியிலே எழில் கொஞ்சும் மூக்குத்தியும்
சின்னஞ் சிறுகாதில் திகழ்கின்ற தாடகமும்
நெற்றியிலே மிளிர்கின்ற வாசமிகு குங்குமமும்
கண்ட என் இருவிழியும் களி கொண்டு கூத்தாடும்
நிலவன்ன மிளிர்கின்ற நின்முகத் தாமரையும்
காதளவோடு தான் ஓடும் கரிய இரு புருவங்களும்
அடியார்க்கு அருள்கின்ற அழகிய திருக்கண்ணும்
கண்டு கண்டு என் உள்ளம் கனிந்து உனை நாடும்
வாள் போல் அமைந்திட்ட ஏற்ற மிகு நாசியின் கீழ்
பவழத்தை இழைத்தாற் போல் இளங்கு கின்ற பனி உதடு
பளிங்கு போல் ஒளிர்ந்திடும் பல்வரிசை தான் கண்டு
பண் அமைத்து என் நா உன் புகழைத்தான் பாடும்
ஏற்ற மிகு சிரசினில் ஒளிர்தரும் மணிமகுடம்
இருள் தோளும் வழிந்தோடும் முகிலன்ன கருங்கூந்தல்
தேவி உன் திருமேனி முழுவடிவம் தான் கண்டு
உருகி உருகி என் உள்ளம் உன்திருவடி நாடும்
பார்வதியே ஈஸ்வரியே பாற்கடலோன் சோதரியே
பக்தர்க்கு அருள் வழங்கும் பர்வத வர்தினியே
பக்தியுடன் உன் அழகை பாதாதி கேசம் வரை
பதம் அமைத்துப் பாடுவதும் தேவி உன் அருள் அன்றோ.
Tuesday, August 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment