Saturday, August 20, 2011

22-01-1993 அன்று, மத்தியப்பிரதேசம், ரீவாவில் மஹரி என்ற கிராமத்தில் என் சீடன் (டாக்டர். சஷிகாந்த் தூபே) வீடில் இருந்த போது, மாலை நேரத்தில் உலவச் சென்றேன். அமைதியான சின்ன நதி, இருபுறமும் அடர்த்தியான மாந்தோப்பு, மேல்வானத்தில் சூரியன் சென்நிறத்துடன் மறையத்தொடங்கும் நேரம். ஒரே ஒரு தாரகை மட்டும் வானில் தோன்ற, பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி கூட்டமாக பறந்து சென்றன. அக்காட்சி வெகுநேரம் என் நினைவைவிட்டு அகலவில்லை. அன்று மாலை எழுதியபாடல்:

11. இயற்கைப் புகலிடம்

தனித்து நின்றதோர் தாரகை
தழலெனச் சென்றான் கதிரவன்
புகலிடம் தேடி புள்ளினம் விரைய
புல்லெரித் தெழுந்தது என்மனம் மெல்ல
ஆகா இயற்கையின் அற்புதக் காட்சியை
ஆண்டவன் அருளிய அளவிலா மாட்சியை
எழுத்தில் வடித்திட எண்ணவும் முயல்வது
என் மன மூடமதியதின் துணிவிது!
பரப்பரப்பான வாழ்வே நமது
பற்பல காரணம் இதற்கும் உள்ளது
ஆயினும் சிலகணம் அமைதி வேண்டிடின்
அண்டிடு இயற்கை மடிதனில் புகலிடம்

இன்றுமாலைக்(22-01-1993) கண்ட இயற்கைக் காட்சி வெகுநேரம் என் நினைவை விட்டு அகலாதபோது, இரவு 11.30-க்கு எழுதிய பாடல்.

12. இயற்கை இன்பம்

மெல்ல வீசிடும் தென்றல்
மேனியைத் தீண்டும் போது
சொல்ல வொண்ணா இன்பம்
சிந்தை முழுவதும் ஆளும்
கள்ள மற்ற சிரிப்பு, அது
காமமற்ற உண்மைக் காதல்
அன்னைதன் மென் அணைப்பு
ஆருயிர் நண்பரின் இணைப்பு
பருக பருகவே குறையா
பளிங்கு நீரின் ஊற்று
பார் முழுவதும் நிறைந்த
பரமனின் அருள் ஆட்சி
இயற்கை அளிக்கும் நல்ல
இன்பத்திற்கோ எல்லை இல்லை
இதனை உணராத வாழ்வில்
எஞ்சுவதோ வீண் தொல்லை.

22-01-1993 அன்று சஷிகாந்த் கேட்ட சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அப்போது எழுதிய பாடல்:

13. சாரமற்ற தத்துவம்

சிற்றின்பம் பேரின்பம் என்றே
சொல்லில் வித்தைகள் காட்டி
செய்திடும் செயலெல்லாம்
சாரமற்றுப் போனால்
அள்ளி உதிர்த்த தத்துவம்
அத்தனையும் செத்த வித்தே!

மனிதன் ஒரு சமுதாயம் சார்ந்தவன். சமுதாயம் இல்லாமல் ‘மனிதன்’ என்ற சொல்லிற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் சில சமயம், பலர் நம்மைச் சூழ் இருந்தும், ஒருவித தனிமையை நாம் உணர்கின்றோம். ஆனால் அந்த உணர்வோ, நிலையோ நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு சன்யாஸி கூட சமுதாயம் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. அத்தகைய ஒரு தனிமை எண்ணம் வந்தபோது எழுதிய பாடல்:

14. தனிமை

தனிமை என்ற ஓர் நிலமை
தரணியில் அல்லவே புதுமை
தனித்து வந்ததே நம் நிலமை
தவிர்க்க முடியாத உண்மை
சுற்றம் சூழல் எனப் பலரும்
சூழ்ந்து நமை நின்றபோதும்
தனிமை என்பதே தவிர்க்க முடியாத
தகை சான்ற ஒரு நிலமை
துணிவு கொண்டு அதை ஏற்றால்
தொடர்ந்திடாது உன்னைத் துன்பம்
தயங்கியே பின்னடைந்தால்
தவிர்க்க முடியாது அதை என்றும்
தாய் தந்தை நற் தாரம்
தகை சான்ற நண்பர் அன்பர்
உரிமை கேட்பார் உன் உறவில்
உதவ வாரார் உன்நிலையில்
யாரும் வாரார் உதவ உனக்கு
எதிர் பார்ப்பதும் வீண் கணக்கு
யார்க்கும் உள்ள ஒரு நிலமை
ஏற்றுக் கொள் இந்த உண்மை
மிரண்டிடாதே அதைக் கண்டு
மேற்கொள் அதனை இன்று
பயந்தவன் அதற்கு அடிமை
வென்றவன் அடைவான் வலிமை
24-01-1993.

ரீவாவில் ஒரு சீடன் வீட்டில் தங்கியிருந்தபோது, கண்டிப்புடன் வளர்ப்பதாகக் கூறி அவன் தன் மகனை மிகவும் கடுமையாக நடத்தினான். அவனுக்கு சில கருத்துக்களைக் கூறியபின் எழுதிய பாடல்:

15. தன்னம்மிக்கை

பாதுகாப்பதாக எண்ணியே
பயிரை சற்றே வறுத்து
பக்குவமாக நிலத்தை உழுது
பாங்காக விதைத்தாலும்
முளையாங்கே வந்திடாது
மூடனே நீ அறிந்திடுவாய்
கட்டுப்பாடு எனச் சொல்லி
கெடுபிடிகள் பலவும் அமைத்து
பிள்ளையை வளர்த்திட்டாலே
பயன் அதில் கிடைத்திடாது
தன்னம்பிக்கை ஊட்டியே
தகுந்தபடி வளர்த்திட்டாலே
தகைசான்ற குடிமகனாய்
தரணியிலே திகழ்ந்திடுவான்
கண்டிப்பற்ற அன்போவென்றால்
காலமெல்லாம் நிலைத்திடாது
அன்பற்ற கண்டிப்போ என்றும்
அரிதாமே சற்று ஜீரணிக்க
அடிக்கின்ற கைதான் அணைக்கும்
அணைக்கின்ற கையே அடிக்கும்
அறிந்திட வேண்டும் பிள்ளை இதை
அனுதின வாழ்வில் முன்னேற
27-01-1993

No comments: