Monday, August 22, 2011
நான் வகுப்புகள் எடுக்க பலமுறை அழைக்கப்பட்டுள்ளேன். அவ்வாறு ஒருமுறை சென்றபோது, என் கருத்துக்களை ஏற்காத ஒருவர், அவற்றுக்கு சரியான பதில் தராமல், என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சரித்து எனகு ஒரு கடிதம் எழுதினார். அவருக்கு பதில் அளித்தபின், உறுதியான கொள்கை (conviction) ஒருவனுக்கு எவ்வளவு அவசியம் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

16. விதைப்பும் அறுப்பும்

விதை ஒன்று போட
செடி வேறு வாராது
வேடிக்கை அல்ல இதுவே
வீணான எண்ணங்கள்
சிந்தையில் நிறைந்தாலோ
விளைவது நாசமதுவே
சொல்லொன்று செயலொன்று
கொண்டதே வாழ்வானால்
கேவலம் ஆகும் அதுவே
திடமான கொள்கையும்
தெளிவான எண்ணமும்
உயர்த்திடும் உன்நிலையையே
26-06-1993

இன்றுமாலை அந்திநேர வானம் மிகவும் அழகாக இருந்தது அப்போது எழுதிய பாடல்

17. இயற்கையின் இந்திரஜாலம்

இந்திர ஜாலமே புரிகின்றாள்
இயற்கை நங்கை அந்திநேரத்தில்
என்னதான் அவள் கலை வண்ணமோ
ஏதுதான் அவள் கைத்திறனோ?
எங்கு நோக்கினும் அவள் இளமை
ஏங்க வைக்கும் ஓர் மென்மை
அள்ளித் தழுவிடும் போது
ஆனாந்தம் ஒன்றே மேலோங்குது
காமம் அல்ல இவ்வுணர்வு
மெய்க் காதலாம் அந்நினைவு
காத்து நின்றாள் அவள் பாதம்
கடைக்கண் அருள்வாள் அவளும்
10-03-1993

ஒருமுறை ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் குறித்து எண்ணி கலங்கிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்கு, பல பிரச்சனைகள் அவரது கற்பனை என்றும், பல சமயம் அப்பிரச்சனைகள் வராமலேபோகும் என்பதை சுட்டிக்காட்டினேன். அத்தகைய வாராதா எதிர்கால பிரச்சனைக் குறித்து நிகழ்காலத்தில் கவலைப்படுவது, நம் நிகழ்கால நிம்மதியை மட்டுமே கெடுக்குமே தவிர வேறு ஒன்றுக்கும் உதவாது என்பதை அவருக்கு விளக்கினேன். அச் சமயம் எழுதிய பாடல்:

18. வாராத பிரச்சனை

வாராத பிரச்சனையை
வீணே கற்பனித்து
வருந்தி வருந்தியே
நிகழ்கால நேரத்தை
வீணாக செலவழிக்கும்
பேதயான மாந்தரே
வரும்போது பார்க்கலாம்
மாறாக இப்போது
பொன்னான நேரத்தை
புத்தியாய் செலவழித்து
பெறுவீர் ஞானமதை
பயனுண்டு அதனாலே
11-03-1993

பசி பாலுணர்வு இரண்டும் இயற்கையில் இறைவன் அளித்த இரு வரங்கள். மிருகங்கள் அவற்றின் நிறைவுக்காக முயலும்போது இயற்கையின் நியதியை மீறுவதில்லை. ஆனால் மனித வாழ்வில் மட்டுமே அவை இரண்டும் நெருப்பாக அவனை எரிக்கின்றன. சிலர்வாழ்வில் புலனடக்தத்தால் அந்நெருப்பு தீபமாக சுடர்விடுகின்றது. ஆனால் பலர்வாழ்வில் காட்டுத்தீயாகமாறி பலரை அழிக்கின்றது. இது குறித்து ஒருமுறை சிலருடன் பேசியபின் எழுதியபாடல்

19. நெருப்பிரண்டு

வைத்தான் நெருப்பிரண்டை
வாழ்வென்னும் வண்டியிலே
அடிவயிற்றிலே ஒன்று
அதன்கீழே மற்றொன்று
ஏன்தான் இதைவைத்தான்
என்ன அவன் எதிர்பார்ப்போ?
பிள்ளைத் தலைமீது
பெரும் பாரம் வைத்தாற்போல்
தவிக்கின்றார் மாந்தருமே
பாரமவை தாங்காமல்
நெருப்பை அணைக்கெண்ணி
நெய்வார்க்கும் மூடன்போல்
முயல்கின்றார் மாந்தருமே
முழுமூச்சாய்த் தீயணைக்க
உண்மை நிலையறியாமல்
ஊமைகண்ட கனவுபோல்
உள்வைத்தே வாடுகின்றார்
உய்யும்வகை அறியாமல்
பசியும் பாலுணர்வும்
பரன் அளித்த ஈவுகளே
பக்குவமாய் கையாண்டால்
பலனுண்டு அவையாலே
இயற்கையின் விதிக்கிசைந்து
இவ்விரு உணர்வுகளை
மிருகங்கள் கூட தம்மில்
முறமை அனுசரிக்கும்
மிஞ்சிய மோகத்தால்
காமமெனும் தீயினிலே
கருக்கினால் உடலதனை
நஷ்டம் நமதேயாம்
இல்லற வாழ்வினிலே
இணைந்தே வழிநடந்தால்
எரிகின்ற தீபமாய்
என்றும் அதுவிளங்கும்
உயிர்வாழ வேண்டியே
உடலின் நலம்பேண
அளவாய் உண்டாலே
ஆயுளும் நீடிக்கும்
ஒருவேளை உண்டால்
உண்மையில் யோகியவன்
இருவேளை உணவுண்ண
இருப்பான் போகியாக
மூவேளை முழுங்கினால்
துரோகியாவான் தனக்கே
அதற்குமேல் உணவுண்டால்
ஐயகோ மனிதனல்ல
வாழ்வதற்கு உணவுவேண்டும்
உண்பதற்கே வாழ்வுஅல்ல
பெருந்தீனிக் காரன்
பாரமே இவ்வுலகிற்கு
வாழ்வெண்ணும் வண்டியது
வளமுடன் சென்றிடவே
புலனடக்கம் என்ற அச்சில்
பொருந்திய சக்கரமாய்
இவ்விரு உணர்வுகளும்
இசைவாக உருண்டிட்டால்
உன்வாழ்வு வளமாகும்
உலகிற்கு நீ சுடராவாய்.
25-05-1993

கொண்ட கொள்கையில் உறுதியாய் நிலைப்பது அவசியம். ஆனால் பலமுறை இதில் நான் தோல்வி அடைந்துள்ளேன். அதுகுறித்து எண்ணியபோது எழுதியபாடல்

20. கொள்கை மாற்றம்

எடுத்த தீர்மானம் எத்தனையோ
எண்ணினால் கணக்கிலே அடங்கிடாது
எதையும் நிறைவேற்ற எண்ணாலே
இயலாது என்பதே முடிவானது
ஏன் இந்த தடுமாற்றம் என்னிலே?
எத்தனைக் கேள்விகள் என்வாழ்விலே!
உள்ளான மனதின் தினப்போராட்டம்
ஒயாத கடல் அலைப் பேயாட்டம்
கெஞ்சினால் மிஞ்சும் மிஞ்சினால் கெஞ்சும்
இதுவே என் மனத் தடுமாற்றம்
உறுதி வேண்டும் ஓரு கொள்கையிலே
உரைக்கின்றேன் உபதேசம் ஊருக்குமே
எத்தனை விரைவாக என்வாழ்விலே
மாற்றினேன் கொள்கையை மனம்போலே?
பச்சோந்திகூட நிறம் மாறும்
பாதுகாப்பை மட்டுமே என்றும் நாடி
பலமுறை மாற்றினேன் கொள்கையைப்
பிறர் குறை கூறவே உண்மையில்
என்னையே நீதிமானாய் எண்ணியே
இதுவரை வாழ்ந்ததால் இந்நிலை
சுயநீதி உடையோர்க்கு கொள்கையும்
சூதாட்டம் ஆகுமே தினந்தோறும்
தன்சித்தம் ஒன்றையே நிறைவேற்ற
தயங்கிடார் தந்திரம் பல கையாள
தத்துவம் பேசுவார் தாராளமாய்
குடிகாரன் போலவே ‘சுய’ நீதியில்!
15-06-1993. கோண்டா, உ.பி.

நானும் கேஷவ் மிஸ்ராவும் பேருந்தில் சுனொள்லியிலிருந்து சாக்காட்டுக்கு (ரீவா, ம.பி.) சென்றுன்றுகொண்டிருந்தபோது, பார்த்த காட்சிகளை சிந்தித்தபோது எழுதிய பாடல்

21. போராட்டம்

என்னதான் மனதின் நினைவுகளோ
எழுந்ததும் காலையில் மனிதனுக்கு
எப்படித்தான் செல்லும் இந்நாளுமே
என்பதே மனதின் தினப்போராட்டமே
ஓடாய்த்தேய்கிறான் உழைத்துதைத்தே
ஒருசுகம் இதில் அவன் காணாமலே
உண்ண, உடுக்க, உடல்சுகம் தேட
ஓடித்திரிகிறான் ஓய்வேதும் இல்லாமல்
ஒன்றனைப் பெற்றபின் மற்றதின் சிந்தனை
ஒன்றிலும் காணாமல் மனதில் நிறைவினை
கானல்நீர் தேடிய மான்போல் வாழ்வெலாம்
கதறியே தொடர்கிறான் உலகின் மாயையை
எவ்வளவு உரைத்தாலும் ஏற்காது அவன்மனம்
ஏதொ ஒன்றுள்ளது அதன்பின் ரகசியம்
‘போதும்’ என்ற பொன்செயும் மருந்து
பெறவில்லை அவன் இந்நோய்க்கு மருந்து
20-04-1993.

No comments: