கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் விடைகிடைப்பதும் இல்லை. அப்படி பல சமயம் என்வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. 1992-ல், மத்தியப்பிரதேசத்தில் ஒரு மிகவும் உட்பகுதியில் உள்ள கிராமத்தில் என் சீடன் (கேஷவ் மிஸ்ரா, கெகரஹா, ரீவா)வீட்டில் தங்கியிருந்தபோது (29-12-1992) அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அப்போது கேள்விக்கு விடைகிடைக்காதது மட்டுமல்ல, கேள்வியே விடையாகவும் பல சமயம் இருப்பதை உணர்ந்தபோது எழுதிய சில பாடல்கள்:
7. கேள்வி-பதில்
விடையே இல்லாத
கேள்விதான் வாழ்க்கை
வேடிக்கை இதிலே
என்ன வென்றால்
கேள்வியே விடையாகக்
கொண்டதே வாழ்வானால்
விடையென்ற ஒன்றும்
வேண்டாத ஒன்றே
29-12-1992
8. தெளிவான திட்டங்கள்
உள்ளான அமைதியொடு
உறவாடும் போது
தெளிவான எண்ணம்
சிந்தை தனையாள
தடுமாறும் வாழ்வில்
திகையாது முன்னேற
தெளிவான திட்டங்கள்
தோன்றி வழி காட்டும்.
29-12-1992
9. இவ்வளவே நீ
போதும் போதும் இந்தப் போராட்டம்
பொழுதெல்லாம் மனதினிலே பேயாட்டம்
எத்தனை காரணம் காட்டினாலும்
இவ்வளவே நீ என்பது அப்பட்டம்.
29-12-1992
10. ஐந்தொகை
ஏன்தான் விடிகிறதோ
என்பதே வாழ்வானால்
என்னையும் மனிதனாக
ஏன் அவனே படைத்திட்டான்
பகுத்தறிவு பெற்றதினால்
பயனேது நான் கண்டேன்
படும் பாடு அனைத்தையுமே
பதிவேட்டில் குறித்துவைத்து
ஐந்தொகை பார்க்கத்தான்
அளித்தானோ இவ்வறிவை?
29-12-1992
Friday, August 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment