Thursday, February 16, 2023

 1446 to 1450

1446 விடமாட்டேன்

 

இதுவரை சொன்னதே

கேளாத போது

இதற்குமேல் சொல்லத்

தேவையும் ஏது

 

‘புதிதாக சொன்னால்

நானுமே கேட்பேன்

புலம்பியே தள்ளினால்

நானென்ன செய்வேன்’

 

என நீ சொல்வது

எனக்கும் கேட்குது

இதுவே உனது

புலம்பலும் ஆனது

 

இருவரின் நிலையும்

இதுபோல் ஆனபின்

யார்சொல்ல யார்கேட்க

என்பதும் தெரியாது

 

எதற்காக உனக்கிந்த

அலுப்பும் வந்தது

இறைவனாய் இருப்பதா

கடினமாய் உள்ளது

 

ஆளுகை அதிகாரம்

அனைத்தும் இருந்தும்

அலுப்பு சலிப்பு

உனக்கேன் வந்தது

 

இதற்கே இப்படி

நீயும் புலம்பினால்

என்போல் ஆனால்

என்ன சொல்வது

 

சரிவிடு போகட்டும்

நானென்ன செய்வேன்

இறைவனாய் இருப்பதும்

கடினம்தான் அறிவேன்

 

மனித வாழ்வை

நீ உணர்ந்ததுபோல

உனது வாழ்வை

நானென்ன அறிவேன்

 

எனக்கே இத்தனை

பாடுகள் என்றால்

உன்னைப் பற்றி

நானென்ன சொல்வேன்

 

ஆயினும் இத்தனை

எளிதாக உன்னை

விட்டிட முடியாது

என்பதை உணர்ந்து

 

கேட்டாலும் விட்டாலும்

அதுஉன் பாடு

கேட்பதை விடமாட்டேன்

என்பதை உணரு

 

Gurukulam, 5-11-2022,  11.00

 

1447 நிறைவேற்றி வைக்கணும்

 

எத்தனைக் காரணம்

நீசொன்ன போதிலும்

ஏற்காது என்மனம்

என்பதை அறியணும்

 

அத்துடன் விளக்கம்

ஆயிரம் தந்தாலும்

எடுபடா தென்பதை

உன் மனம் புரியணும்

 

தனித்துமே இருப்பது

புதிதல்ல எனக்கு

என்பதை நீயும்

நினைவிலே கொள்ளணும்

 

இருக்கிறேன் எனநீ

தந்திட்ட வாக்கினை

ஒருமுறை யாவது

நிறைவேற்றி வைக்கணும்

 

பேதை என்பதால்

ஏதுமே செய்யலாம்

என்கின்ற எண்ணமும்

கொள்வது நியாயமா

 

வாடியே நிற்கிறேன்

வதங்கிப் போகிறேன்

என்பதும் உனக்குத்

தெரியாமல் இருக்குமா

 

ஒருபுரம் வாடையோ

வதைத்திடும் போதிலே

மறுபுறம் மேனியோ

தகிக்குது என்னிலே

 

அத்துடன் தாமதம்

நீயுமே செய்திட

ஐயனே தவிக்கிறேன்

அனுதினம் உள்ளே

 

தேகத்தின் தேவையை

தள்ளிப் போடலாம்

தெம்பும் துணிவும்

மனதிலே இருந்தால்

 

மனதின் தேவையை

அத்தனை எளிதாக

மறுத்திட முடியாது

முற்றாக என்னால்

 

ஆகவே காரணம்

ஏதுமேசொல்லாமல்

அபலையின் புலம்பலை

நீயுமேத் தள்ளாது

 

பக்தியின் பரவசம்

நித்தமும் கிடைக்க

விட்டென்னைப் பிரியாது

இணைந்தே இருக்கணும்

 

விட்டுப் பிரியேன்

என்கின்ற வாக்கினை

தட்டிக் கழிக்காமல்

நிறைவேற்றி வைக்கணும்

 

குருகுலம், 10-11-2022, இரவு 10.30

1448 முடிவுநீ செய்

 

உனக்குமாத் தெரியாது

நான்படும் பாடு

எடுத்துமே சொல்லுறேன்

இனியேனும் கேளு

 

தடுத்தாட் கொண்டது

எதற்காகக் கூறு

தனித்தே போராட

இனிமேலும் முடியாது

 

துதித்துப் பாடிட

எண்ணிடும் போது

எதற்காக என்று

என்மனம் கேட்குது

 

அதனோடு இயல்பு

தெரிந்துதான் இருக்குது

ஆயினும் கேள்வி

சரியாக இருக்குது

 

பாட்டுகள் படவென

உலகினில் வந்தாலும்

பாடே வாழ்வானால்

யாரென்ன சொல்வது

 

பாலையில் உள்ள

சோலையைப் போல

ஏதேனும் உள்ளதா

எண்ணியேப் பாரு

 

ஒன்றுமே செய்யலை

என்றுமே சொல்லலை

செய்திட்ட நன்மையை

நானுமே மறக்கலை

 

பசித்தவன் புசித்ததை

நினைத்தென்ன ஆவது

இப்போது தேவைக்கு

வழியென்ன சொல்லு

 

சேர்த்தவை ஏதுமே

உதவவும் இல்லை

செய்வதாய்ச் சொன்னவர்

செய்திட முடியலை

 

இனிமேலும் தாமதம்

செய்வது சரியில்லை

இப்போதே செய்யணும்

அதற்கு மாற்றில்லை

 

சொல்வதைக் கேட்டு

கேட்டதைச் செய்தால்

சற்றே குறைந்திடும்

எந்தன் பாடு

 

தந்திட மறுத்து

தாமதம் செய்தால்

அதுவும் ஆயிடும்

மற்றொறு பாடு

 

அதன்பின் இதுபோல்

பாடல்கள் வந்து

தொல்லை தந்திடும்

மேலும் உனக்கு

 

என்பாடு நின்றால்

உன்பாடு நிற்கும்

எதுவேண்டும் என்று

முடிவுநீ செய்யணும்

 

குருகுலம், 14-11-2002, 10.30 p.m

 

1449 உள்ளாகப் பேசுவேன்

 

எடுத்துமேக் கூறினால்

உளறுறேன் என்கிறாய்

எழுதியேக் காட்டினால்

புரியலை என்கிறாய்

 

பிறர்வந்து கூறினால்

ஏற்றிட மறுக்கிறாய்

பிடிவாதம் தன்னையோ

விட்டிட மறுக்கிறாய்

 

ஏதேனும் செய்துகொள்

என்றுமே கூறினால்

எகத்தாளம் பேசாதே

என்றுமே சொல்கிறாய்

 

ஒன்றுமே பேசாது

மவுனியாய் இருந்தால்

கல்லூலி மங்குணி

என்றுமே கரிக்கிறாய்

 

உன்னோடு அனுதினம்

நான்படும் பாடு

உலகில் எவருக்கும்

நிச்சயம் இருக்காது

 

கேட்டாலும் விட்டாலும்

அதுபற்றி எண்ணாது

கடமைக்காய்ப் பிறர்

வழிபடும் போது

 

வழிபாடு துதிபாடு

என்றுமேக் கூறி

வீணாகச் சொற்களை

உதிர்க்கேன் நானுமே

 

மொழியின் எல்லை

தன்னையும் தாண்டி

உன்னோடு பேசுவேன்

உள்ளாக நானே

 

அந்தத் தொடர்புக்குப்

பெயர்ஒன்றும் இல்லை

அதற்கானத் தேவை

நமக்குமே இல்லை

 

உள்ளக் நின்று

உறவாடும் உன்னிடம்

எடுத்துக் கூறிடத்

தேவையும் இல்லை

 

குருகுலம், 19-11-2022, 11.00 p.m.

 

1450 தனி சுகம்

 

இதிலொரு சுகமுண்டு

எவருக்குத் தெரியும்

எப்படிச் சொல்ல

எவருக்குப் புரியும்

 

தனித்து அமர்ந்து

தாளினைப் பற்ற

அதன்பின் அந்நிலை

அவருக்கும் புரியும்

 

பக்தியின் பேரின்ப

நிலைக்குச் சென்றால்

பாரினில் பாடுகள்

பனிபோல் மறையும்

 

சித்தமும் தெளிய

புத்தியும் அறிய

மனதின் உணர்வுக்கு

அதுவும் விளங்கும்

 

ஆயிரம் வேலை

அத்துடன் கவலை

அவற்றை எண்ணியே

போகுது வாழ்க்கை

 

விடையும் இன்றி

விடியலும் இன்றி

மடிவு கொண்டு

மனதும் வாட

 

துணையென அவனும்

இருப்பதை உணர்ந்து

துயரினைச் சொல்லி

அவனடிப் பணிய

 

மனதின் பாரமும்

குறைந்தே போகும்

அதன்பின் பரவசம்

அங்கே வந்திடும்

 

அதனுள் திளைத்து

ஆனந்தம் கொண்டு

பதமலர் சூடி

பாடிப் புகழ

 

தனியொரு சுகமும்

தன்போல் வந்திடும்

தனிமையில் நாடி

அவனிடம் சென்றிடும்

 

27-11-2022, குருகுலம், இரவு 3.00 am.

 

No comments: