Bhakti Theological Songs 1436 to 1440
1436 கொண்டாடணும்
நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்
வாலைக் குழைத்து
மலம்தின்னப் போகும்
அதுபோல நீவந்து
என்னுள்ளம் அமர்ந்தாலும்
என்மனம் தன்போல
மலந்தின்னப் போகும்
அன்றாட வாழ்விலே
கொண்டாடிப் போற்றவே
ஆயிரம் நன்மைகள்
நீசெய்த போதிலும்
இயற்கையாய்த் தன்போல
வந்திடும் இடையூறு
தன்னையே எண்ணியே
என்மனம் வாடும்
துன்பமே அறியாத
வாழ்வுமேத் தந்தாலே
நிச்சயம் என்மனம்
சோர்ந்துமேப் போகும்
துன்பமே வாழ்வென
ஆயிடும் போது
என்னுளம் நிச்சயம்
உன்னையும் மறந்திடும்
இன்பம் துன்பம்
கலந்ததே வாழ்வென்ற
தாரக மந்திரம்
தன்னையும் நினைந்து
இன்பத்தைக் கொண்டாடி
துன்பத்தை எதிர்கொண்டு
நடுநிலையாய் நின்று
வாழ்வையும் வாழணும்
இருவரை வாழ்ந்தோர்கள்
இதுபோல வாழ்ந்தார்கள்
இனிமேலும் வாழ்வோர்கள்
இதுபோல வாழ்வார்கள்
என்பதை உணர்ந்து
உன்னருள் நினைந்து
இந்நாளும் வாழவே
நீயுமே உதவணும்
குருகுலம், 9-10-2022, காலை 5.30
1437 வரம் வேண்டும்
கேட்கச் சொன்னதால்
கேட்கிறேன் நானும்
கையேந்தி வந்து
நிற்கிறேன் நாளும்
ஆயினும் கேட்டது
கிடைத்திட வில்லை
கேட்காமல் இருக்க
முடியவும் இல்லை
அன்றாடம் என்னுள்
வந்திடும் ஒருவித
சஞ்சலம் தன்னைப்
போக்கிட வேண்டும்
வாராத ஒன்றை
வந்திடும் என்று
வீணான கற்பனை
செய்துமேக் கொண்டு
அதற்கான தீர்வு
பலவுமே எண்ணி
அவற்றிலே ஒன்றும்
பயனுமே தாராது
இப்போது உள்ள
நிலையம் தொடர
எப்போதும் போல
நீயும் உதவிட
கையேந்தி வந்தேன்
உன்முன் நானும்
இக்குறை தன்னையும்
நீதான் போக்கணும்
பயந்த காரியம்
நேரிட்டா தென்று
துணிந்து நானும்
தைரியம் கொண்டு
ஏதான போதிலும்
நீயுள்ளாய் என்பதை
எண்ணியே என்மனம்
போற்றியே வாழணும்
இதையே வரமாக
கேட்கிறேன் இப்போது
வழக்கம்போல் நீயும்
தந்து காத்திடு
குருகுலம், 9-10-2022, இரவு 11.30
1438 ஓய்வும் எடுத்திடு
இனியென்ன காரியம்
உனக்குமே இருக்கு
அதைமட்டும் கூறிடு
முதலிலே எனக்கு
படைத்தாய் காத்தாய்
மரித்துமே மீட்டாய்
பரமேறிச் சென்று
அமர்ந்துமே கொண்டாய்
மீண்டும் வரும்வரை
ஓய்வுதான் உனக்கு
வேறென்ன வேலை
இருக்குது உனக்கு
ஆனால் என்னிலை
எண்ணியேப் பாரு
ஒய்வு ஒழிச்சல்
உள்ளதா சொல்லு
கருவினில் உருவாகி
கல்லறை போகும்வரை
எத்தனை வேலைகள்
உள்ளது எமக்கு
அதுபற்றி அக்கறை
உனக்குமே இல்லை
ஆகவே தலையீடு
நீசெய்வ தில்லை
என்னால் முடிந்ததை
நானுமே செய்து
இனியெம் பாடென
கைநீ விட்டாய்
வேண்டுதல் செய்து
எதையேனும் கேட்டால்
தருகின்ற நேரம்
வரவில்லை என்றாய்
அதற்கான காரணம்
நாங்களும் கேட்டால்
என்சித்தம் அதுவெனப்
பதில் கூறுகின்றாய்
ஆகவே ஒருபுறம்
போராட வேண்டும்
மறுபுறம் ஓயாமல்
புலம்பிட வேண்டும்
ஏதுமே காதிலே
வீழாது போல
நீமட்டும் ஓய்வு
நன்றாக எடுக்கணும்
இருக்கட்டும் எதுவரை
போகும் பார்க்கிறேன்
என்றேனும் ஒருநாள்
உன்னிடம் வருவேன்
அப்போ காட்சியும்
அடியோடு மாறிடும்
உனது ஓய்வுக்கு
முடிவும் வந்திடும்
நிரந்தர ஒய்வு
நாங்களும் எடுக்க
ஓயாமல் ஓழியாமல்
எம்மை காக்கணும்
ஆகவே இப்போது
ஓய்வும் எடுத்திடு
அதன்பின் முற்றாக
அதையும் மறந்திடு
குருகுலம், 9-10-2022, மலை, 5,15
1439 உன் கை நோகும்
என்னிடம் கேள்வி
கேட்பதை விட்டு
எனக்கு பதில்தர
முடியுமா பாரு
அடிவாங்கி அடிவாங்கி
அழுது ஓய்ந்தேன்
ஆயினும் அடிப்பதை
நீயுமே நிறுத்தலை
ஒன்று குறைய
நாற்பது அடியென
உன்வேதம் தெளிவாக
சொன்ன போதிலும்
எண்ணுவதைக் கூட
நீயுமே நிறுத்தி
அடிப்பதை மட்டும்
ஏன் தொடர்ந்தாயோ
எத்தனை அடித்தாலும்
தாங்குறான் என்று
என்றுமே நீயும்
எண்ணி விட்டாயோ
அடிவாங்கி அடிவாங்கி
மறத்துமேப் போனதால்
எத்தனை அடித்தாலும்
இன்னமும் தங்குறேன்
ஊரார் அடித்தல்
உன்னிடம் வரலாம்
நீயுமே அடித்தால்
எங்கு செல்லலாம்
தாயன்றி சேய்க்கு
இறுதிப் புகலுண்டோ
நீயன்றி புகலிடம்
எனக்கு வேறுண்டோ
ஆகவே எப்படி
நீயுமே அடித்தாலும்
உன்னிடம் மட்டுமே
மீண்டுமே வருவேன்
அடித்தபின் உங்கை
நோகுமே என்பதால்
அதைமட்டும் எண்ணி
நானுமே அழுவேன்
ஆயினும் அதையே
நீயும் விரும்பினால்
அடிவாங்க உன்னிடம்
அடிக்கடி வருவேன்
குருகுலம், 10-10-2022, இரவு, 11.00
pm
I felt
that the Lord is punishing me too much beyond my capacity. I became tired of so
many things—both in body and mind. Then
when I was praying to the Lord again I pour down my heart by writing this
songs.
1440 நல்லதே நடக்கும்
எந்த முடிவு
நீ எடுத்தாலும்
நல்லதாய் இருக்கும்
நானதை அறிவேன்
அப்படி எனது
முடிவு இருக்குமா
என்பதை நிச்சயம்
நானும் அறியேன்
ஆயினும் எனக்கு
உள்ள உரிமையில்
தலையிட மாட்டாய்
நானதை அறிவேன்
ஆனால் அதிலுள்ள
ஆபத்தை உணர்ந்து
அடிமை நானும்
தயக்கம் கொண்டேன்
துணைக்கு நீயும்
இருப்பதினாலே
துணிந்து எடுக்கவா
என்பதைச் சொல்லு
அதன்பின் வந்திடும்
ஆபத்து அனைத்திலும்
உனக்கும் பொறுப்பு
உள்ளதை எண்ணு
எனக்கேன் வம்பு
என்றுமே எண்ணி
ஒதுங்கிட உன்னால்
முடியுமா சொல்லு
இருவரும் ஒன்றாய்
இணைந்த பின்னாலே
எது நடந்தாலும்
உனக்குண்டு பங்கு
ஆகவே நீயே
முடிவை எடுத்து
அதன்பின் தகவலை
மட்டும் தந்திடு
எதுவாய் இருந்தாலும்
நானும் ஏற்பேன்
இதுவரை நானும்
அதைத்தான் செய்தேன்
இதுவும் உனக்கு
நன்கு தெரியும்
ஆகவே தயக்கம்
இனியேன் உனக்கும்
தயக்கம் ஏதும்
இருந்தால் சொல்லு
துணைக்கு இருக்கேன்
தைரியம் கொள்ளு
எனக்கு நீயும்
உனக்கு நானும்
தைரியம் கொடுக்க
இருந்திடும் போது
துணிந்து முடிவை
நீயும் எடுத்திடு
நல்லதே நடக்கும்
என்பதை அறிந்திடு
குருகுலம், 16-10-2022, இரவு, 10.30
Since
past few days I was in a dilemma about taking one important decision. Others try to guide me their best. But at the end I have to take the call. So
this night when I was unable to take one final decision, I was talking about it
to the Lord and the result is this song as my prayer [and also teasing the
Lord].
No comments:
Post a Comment