Friday, July 22, 2011

Tamil Songs

மனதின் குரல்
தயானந்த பாரதி
உணர்ச்சிகளின் தொகுப்பே கவிதை. பல சமயம் நம் உணர்வுகளை வெறும் வார்த்தையால் வெளிப்படுத்த முயன்று அதில் தோல்வி அடையும்போது கவிதை அதற்குத் துணைவருகின்றது. அதேசமயம், கவிதை நம் உணர்வை அப்படியே வெளிப்படுத்தாமல், அதற்கு கற்பனை சேர்த்து, சுருக்கமாக நம் உணர்வை வெளிப்படுத்தவும் உதவுகின்றது. கவிதை என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால், மானிடர் வாழ்வு எவ்வளவு வறட்சியாக இருந்திருக்கும். தற்கால ’வசன கவிதைகள்’ இலக்கண, இலக்கிய மரபுகளிலிருந்து மாறுபட்டு இருந்தாலும், அவை மனிதனுக்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்தரும் எழுத்துச் சுதந்திரம் மிகவும் சிறப்பானது.
இதுதான் கவிதைஎன எல்லை வகுப்பது யார்? மனித உணர்வுகளும், வார்த்தைகளும் உள்ளவரை கவிதைக்கு அணைபோடவோ, அல்லது எல்லை வகுக்கவோ யாராலும் முடியாது. பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு கவிஞ்ஞன் எழுதுவது இல்லை. அது அவனின் மனதின் குரல். அதை அவன் தன் மன, ஆன்மீக திருப்திக்காகத்தான் எழுதுகிறானே தவிர, பிறர் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்த்து அல்ல. என் கவிதைகளும் (அவை கவிதை என மறுக்கப்பட்டாலும் கூட) என் மனதின் குரல். ஆனால் இக்குரல் சிலரது மன உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக இருக்குமானால் அதை என் வரையில் பூட்டி வைப்பது முறையல்ல என்பதால் அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்.
நான் எழுதிய கவிதைகள்-பாடல்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு சம்பவம் பெரும்பாலும் இருக்கும். எனவே பல கவிதைகளுக்கு அவற்றின் பின்னணியை முடிந்தவரை மறைக்காமல், தெரிந்தவரை எழுதியுள்ளேன். இது அக்கவிதையின் மையக் கருத்தை உணர்ந்துகொள்ள உதவும் என எண்ணுகின்றேன். சில கவிதைகள் என் உண்மையான கொள்கையைப் பிரதிபளிக்கவில்லை. அவை வெறும் கற்பனைகள். சிலசமயம் கருத்து முரண்பாடு காணப்படும். அதற்கு முக்கியக் காரணம், அந்த சூழ்நிலையில் மனதில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுக்க அவை எழுதப்பட்டன. சில கருத்துக்களில் எனக்கே உடன்பாடு இல்லை. ஆனால் அந்தச் சூழ்நிலையில் மனதின் உணர்ச்சிப் பெருக்கை, கற்பனைகலந்து வார்த்தையாக வெளிப்படுத்தி உள்ளேன். பிழைதிருத்தம் செய்யவில்லை. என் அனுமதியன்றி வெளியிடவோ, பத்திரிக்கைகளுக்கு அனுப்பக் கூடாது.
என் கவிதைகள் இலக்கண, இலக்கிய மரபுகளுக்கு உட்பட்டவையல்ல. ஆனால் அவை முழுதும் வசன கவிதைகள் அல்ல. மரபை முழுதும் ஒதுக்க முடியாமல், மாற்றத்தை அப்படியே ஏற்கவும் முடியாமல் தவிக்கும் இடைப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன் நான். என்வேதான், என் கவிதைகளை பகிர்ந்துகொள்ளும்முன் மரபை சார்ந்து அவையடக்கமாக, அதேசமயம் இலக்கண, இலக்கிய மரபைச்சாராத முதல் கவிதையைத் தர விரும்புகின்றேன்.

1. கவிதையாகுமோ

எழுதவேண்டும் என்பதற்காக
எழுத்துக்களை வார்தைகளாக்கி
கருத்தேதும் அதில் இல்லாமல்
கவிதை என்ற பெயராலே
உளறுவதும் கவியாகுமோ
பேதை என் வார்த்தைகளே?
--லக்னோ, உத்திரப் பிரதேசம். 21-01-1996

No comments: