Thursday, October 6, 2011

134. ஓர் அழைப்பு

ஆதியாகி அந்தமாகி
அருளுமாகி வந்தவன்
ஜோதியாகி துணையுமாகி
சொந்தமாகி நின்றவன்

கருணையாகி இறைவனாகி
காக்க இங்கு வந்தவன்
காலமெல்லாம் துணையுமாகி
கரம்பிடிக்க வந்தவன்

நீதியாகி நிமலனாகி
நேர்மை காட்ட வந்தவன்
ஊழிகாலம் தொடர்ந்துவந்து
கர்மம் போக்கி வென்றவன்

ஆதிமனிதன் சாயலாக
அவனி காக்க வந்தவன்
அன்பருக்காய் தன்னை ஈந்து
முக்தி அளித்து சென்றவன்

ஏது மற்ற என்னைக் கூட
ஏற்று அருள் தந்தவன்
இரக்கமுற்று என்னைதேடி
இவ்வுலகில் வந்தவன்

பாவமறியா பரமனுமே
பாவிக்காக வந்தனன்
பாவபலியுமாகி இங்கு
பாவம்போக்கி காத்தனன்

வழியறியா வாழ்க்கையிலே
வழிகாட்டி நின்றவன்
அனுதினமும் என்னை நடத்த
ஆனம உரு கொண்டவன்

மனமும் தெளிவு அடைந்திடவே
முக்தி மறை தந்தவன்
அதையும்கூட விளக்கிடவே
ஆசனாகி உரைப்பவன்

பக்தி நெறி நடந்திடவே
பக்தர் குழாம் தந்தவன்
பக்தியுடன் பாடித்தொழ
புதியபாடல் தருபவன்.

இருளில் வாழும் மனிதருக்கு
இந்த உண்மை சொல்லவே
என்னைகூட தொண்டனாக்கி
என்னை அனுப்பி வைத்தவன்

வாருங்கள் நாமும்போய்
இந்த உண்மை கூறுவோம்
வாழும்போதே உய்யும்படி
ஈசனருளைக் காட்டுவோம்

தேவை நிறைந்த மாந்தருக்காய்
தினமும் வேண்டிக் கொள்ளுவோம்
தெய்வமே உலகைக் காப்பார்
என்று உறுதி கொள்ளுவோம்

மீண்டும் வந்து நம்மையுமே
உடனழைத்துச் செல்லுவான்
ஊழி ஊழி காலமெல்லாம்
ஒன்றுகூடி வாழவே

இருள் அறியா நாட்டினிலே
ஒன்றுகூடி வாழுவோம்
பேதமெல்லாம் நீங்கி நாமும்
பரமன் சாயல் கொள்ளுவோம்

இந்த உண்மை அறிந்தோரே
இன்னும் என்ன தாமதம்
இதயம் நிறைந்து வாழ்த்துவோம்
முக்தேசன் பொற்பதம்.
01-11-2010. குருகுலம்.

135. உண்டோ வேறொன்று

அன்பின் வழிகாட்ட
அவனியில் வந்தாயே
ஐயனே நீயன்றி அதை
அறிந்திட வழியுண்டோ

பண்பின் மொழி கூற
பாரினில் வந்தாயே
பரமனே நீ அன்றி
புரிந்திட துணையுண்டோ?

தாழ்மை நெறிகாட்ட
தரணியில் வந்தாயே
தலைவனே நீயன்றி
நடத்திட யாருண்டோ?
11-11-2010. குருகுலம்.

136. வேண்டும்

உன்னையே மறவாது வாழ்ந்திட வேண்டும்
உன்னருள் அதற்கு நித்தமும் வேண்டும்
என்னையே கைவிடாது நீ காக்திட வேண்டும்
என்னுள்ளே அதற்கு பக்தியும் வேண்டும்
கண்களில் கண்ணீரும் நிரம்பிட வேண்டும்
உன்னருள் நினைந்து உருகிட வேண்டும்
கலக்கங்கள் வாழ்வில் நீங்கிட வேண்டும்
உன்காவலால் என்னைக் காத்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் என நான் வரவேண்டும்
உன்னடி ஒன்றையே நாடிட வேண்டும்
தந்தேன் தந்தேன் என்றே நீ தரவேண்டும்
உன்திருவடி நிழலிலே எனை வைத்திடவேண்டும்
30-1-2010. குருகுலம்.

137. செய்த புண்ணியம் என்னே

என்னதான் புண்ணியம்
செய்தேனோ நானும்
இணையடி தனில் வந்து
இளைப்பாறுதல் பெற
மானுடர் பாவம்
போக்கியே மீட்டிட்ட
மன்னுருகொண்டு
இந்நிலம் வந்த
உன்னடி அண்டி
இளைப்பாறுதல் பெற--என்னதான் புண்ணியம்....

பக்தி நெறியறியேன்
ஞான வழி உணரேன்
கருமமுறையிலும்
கருத்தின்றி வாழும்நான்
திருவடி வந்து
இளைப்பாறுதல் பெற--என்னதான் புண்ணியம்....

முக்தி மறை அறியேன்
மூர்க்க குணமுடையேன்
பக்தர் குழாம் நாடேன்
பணிவிடை செய்தறியேன்
திருவடி வந்து
இளைப்பாறுதல் பெற--என்னதான் புண்ணியம்....

02-01-2011. குருகுலம்

138. உன்னடி சேர்ந்திட வேண்டும்

என்னுள் இருந்து
எனையாளும் தெய்வமே
உன்னுள் இருக்க
நீ அருள வேண்டும்
தன்நிலை இழந்து
தவறினேன் நானே
உன்னருள் கொண்டு
மீண்டு வந்தேனே

செய்த பிழையெல்லாம்
மன்னித்தாயே
தெய்வமே உன்னுடன்
சேர்த்தணைத்தாயே
இந்த நிலை உணர்ந்து
வாழ்ந்திட வேண்டும்
இதற்கென்று உன்னடி
சேர்ந்திட வேண்டும்

09-03-2011. குருகுலம்


139. வேறென்ன வேண்டும்?

உன்னில் ஆனந்தம் நான் கண்டிட வேண்டும்
உனதருள் கடலிலே மூழ்கிட வேண்டும்
என்னை நானே மறந்திட வேண்டும்
எனதென்ற எண்ணமும் நீங்கிட வேண்டும்

தன்னிகரில்லாத தயவு நீ கொண்டாய்
தரணியை காத்திட பேரருள் கொண்டாய்
உன்னையே அளித்திட உவந்து வந்தாய்
உன்னுயிர் அளித்து மீட்புமே தந்தாய்

இந்த உண்மை அறிந்திட்ட நானும்
உலகுக்கு இதை உணர்த்திட வேண்டும்
உன்னருள் அதற்கு நீ தரவேண்டும்
வேறென்ன உலகில் எனக்கிங்கு வேண்டும்

14-03-2011 குருகுலம்

140. போற்றுவோம்

தோன்றினான் கதிரவன் குணதிசையிலே
தொழுதிட எழுந்தன உயிரினங்கள்
மாறிடா இறைவனின் மாண்பினைப்பாடி
மன்னுயிர் எழுந்தன மனமகிழ்வுடனே!

அமைதியுடனே அவனடி பணிந்திட
அவனியோர் எழுந்தனர் உளமே மகிழ்ந்து
எங்கும் அவனது அருள் காட்சியே
அகத்திலும் புறத்திலும் அவன் ஆட்சியே!

சிந்தை நேராக்க சொல்லை சீராக்க
எண்ணம் புதிதாக்க நோக்கம் தெளிவாக்க
ஆர்வம் பெரிதாக்க ஆக்கம் நிறைவாக்க
இறையடி பணிவோம் எல்லாம் சிறப்பாக்க

நன்மை செய்யவே நாடி வருகின்ற
நாதனை நம்பியே நாமும் தொழுவோம்
தேவை அறிந்து திடமுடன் இருந்து
காத்திடும் இறைவனின் திருவடி போற்றுவோம்
24-09-2011. குருகுலம்

No comments: