Thursday, February 16, 2023

 Bhakti Theological Songs 1441 to 1445


1441 சஞ்சலம் ஏன்

 

என்மீது நீகொண்ட

பாசத்தை எண்ணிட

விழியோரம் நீர்சேர

இருகரம் குவியும்

 

கைமாறு செய்ய

இயலாத போதும்

உன்மீது வைத்த

நம்பிக்கைப் பெருகும்

 

எனக்கெனத் தனிவாழ்வை

நானுமே எண்ணாமல்

என்னிலே நீவாழ

என்னுள்ளம் விழையும்

 

சிலநேரம் தடுமாறி

சஞ்சலம் கொண்டாலும்

திரும்பவும் என்மனம்

உன்னையேத் தேடும்

 

என்குணம் அறிந்து

அதற்கேற்ப நடக்கும்

உன்குணம் தனைஎண்ணி

உள்ளமும் மகிழும்

 

இதுபோல அனுதினம்

வாழ்வும் இருக்காதா

என்றே என்மனம்

ஏங்கியேத் தவிக்கும்

 

அதற்குத் தடையாக

இருபது நீயல்ல

என்பதை மட்டும்

என்மனம் ஏற்கும்

 

சஞ்சலம் கொள்ளாத

மனமதைத் தாராமல்

வஞ்சனை செய்தாயே

என்றுமே கேட்கும்

 

சிந்தையில் நீநிற்க

சஞ்சலம் அடிக்கடி

வருவதின் காரணம்

தெரியாது தவிக்கும்

 

கூடவே இருந்து

கொட்டும் தூதனாய்

வைத்ததின் காரணம்

தன்னையும் தேடும்

 

எதுவான போதும்

என்மீது நீவைத்த

பாசத்தை எண்ணி

உன்னையே நாடி

 

மாறாத உன் குணம்

தன்னை நம்பியே

எப்போதும் போல

திருவடிப் பணியும்

 

குருகுலம், 19-10-202, இரவு, 9.30

 

1442 எங்கே நிம்மதி

 

துன்பமே படவென்று

தெரிந்து எடுத்தாயா

தொடர்ந்து அதில்வாழ

என்னையும் அழைத்தாயா

 

‘நான்தரும் நிம்மதி

உலகம் தாராது’

என்றுமே சொன்னதை

மட்டுமே மறந்தாயோ

 

‘என் நுகம் எளிது’

என்றுமே சொன்னாலும்

சுமப்பது சிலுவைதான்

என்பதை மறவாதே

 

அனைத்தையும் விட்டு

வந்திடும் போது

நுறாகத் இதைத்தான்

தருவேன் என்றாயோ

 

தேடிய முக்தியை

நீயுமேத் தந்தாலும்

தருவதாய்ச் சொன்ன

அமைதியும் எங்கே

 

அமைதி அறியாத

முக்தியைத் தந்தாலே

அதனால் பயனென்ன

நீயதைச் சொல்வாயே

 

இறந்தபின் பெறுவது

முக்தி ஆகுமா

அமைதி அறியாத

முக்தியும் இருக்குமா

 

இதிலுள்ள முரண்டாட்டை

நீயுமே போக்கணும்

இரண்டையும் ஒருசேர

நீதான் தரவேண்டும்

 

பாடுள்ள உலகில்

வாழ்ந்திடும் வரையில்

அதற்கு வழியில்லை

என்றுமே சொல்லாதே

 

‘வென்றேன் உலகை’

என்று சொன்னதை

என்வரை மட்டும்

நீயும் மறந்தாயே

 

வென்றிட வழிதந்து

மனதிலே திடந்தந்து

பாடுகள் மத்தியில்

நிம்மதி தருவாயே

 

குருகுலம், 19-10-2022, இரவு, 10.30 pm.

 

1443 என் நம்பிக்கை

 

எப்படிப் போகும்

இன்றைய இரவும்

என்பதை நீதான்

முடிவு செய்யணும்

 

எல்லோர்க்கும் வாழ்வு

இயல்பாக இருக்க

எனக்கு மட்டும்

தனியாக இருக்குது

 

அதுபற்றி உன்னிடம்

நானுமே கேட்டால்

பதில்வர மட்டும்

ஏனோ மறுக்குது

 

அடுத்தது என்ன

நடக்குமோ என்று

என்பதை எண்ணி

மனதும் தவிக்குது

 

இதையே வாழ்வின்

இயல்பாய் மாறினால்

இனிநான் சொல்ல

என்ன இருக்குது

 

நித்திய கண்டம்

பூரண ஆயுள்

என்கிற முதுமொழி

என்வரை சரிதான்

 

அப்படி வாழ்வை

அமைத்த உனது

செயலும் என்வரை

என்றும் புதிர்தான்

 

நாளை என்ன

நடக்கும் என்று

நிச்சயம் எமக்கு

தெரிவது இல்லை

 

தெரிந்தால் அதன்பின்

இறைய வாழ்வு

நிம்மதியாக என்றும்

இருப்பதும் இல்லை

 

இப்படியேதான் இனி

வாழ்வும் போகும்

என்பது என்வரை

நிச்சயம் உண்மை

 

அப்படி அமைத்துநீ

தந்ததின் பின்னே

உன்னிடம் கேட்டும்

பயனுமே இல்லை

 

ஆகவே வாழ்வு

எப்படிப் போயினும்

அதுபற்றி எனக்கு

கவலையும் இல்லை

 

மரத்தை வைத்தவன்

நீரும் ஊற்றுவான்

என்பது மட்டுமே

எனது நம்பிக்கை

 

குருகுலம், 22-10-2022, இரவு, 10.30

 

1444 பயணத்தை முடிப்பேன்

 

உருவம் இல்லாத

உறவை அறிந்தேன்

உணர்வும் புரியாத

அருளை அடைந்தேன்

 

கதி அறியாத

உலக வாழ்வில்

விதியொன்று வகுத்து

நடத்துவாய் அறிவேன்

 

மதிவழி சென்று

வாழ்வில் மருண்டு

இனிசெய்ய ஒன்று

அறியாது நின்று

 

தவிக்கும் மானுட

வாழ்வில் நானோ

உன்வழி சென்று

உய்வைக் கண்டேன்

 

கண்ணுக்குத் தெரியாது

நீநின்ற போதும்

கரம்பற்றி நடத்துறாய்

என்பதை உணர்ந்து

 

பற்றிய கரத்தை

விட்டு விடாமல்

இறுகப் பற்றி

பயணம் தொடர்வேன்

 

போகும் பாதையின்

தன்மைப் புரியேன்

சேரும் இடத்தை

நிச்சயம் அறியேன்

 

ஆயினும் அதுபற்றி

கவலையை விட்டேன்

என்னுடன் நீயும்

வருவதினாலே

 

ஏதோர் இடத்தில்

புவிழவு முடிந்து

இறுதியில் உன்னிடம்

வந்த பின்பு

 

நிரந்தரமான ஒரு

இடத்தில் வாழ்ந்து

நிலைத்த வாழ்வை

உன்னிடம் அடைவேன்

 

அதுவரை உனது

உறவினில் மகிழ்ந்து

அருளை மட்டும்

அனுதினம் நினைந்து

 

உலக வாழ்வின்

கதியெது வாயினும்

உன்னுடன் இணைந்து

பயணத்தை முடிப்பேன்

 

குருகுலம், 24-10-2022, இரவு, 11.00

 

1445

 

என்னோடு போட்டி 

நீ போடலாமோ 

இப்படி என்னை 

வதைத்திடலாமோ 

 

கெஞ்சிக் கதறினேன் 

நீ கேட்கவில்லை 

கண்கொண்டு என்னைப்

பார்த்திட வில்லை

 

பிறருக்குப் புரியாது 

நானதை அறிவேன் 

உனக்குமாப் புரியாது

நானென்ன சொல்வேன் 

 

நீயொரு விளையாட்டை 

விளையாட விரும்பினால் 

எப்படி நானும் 

தப்பித்துக் கொள்வேன் 

 

ஆடிடும்  களமோ 

சமமாக இல்லை 

அத்துடன் சமபலம் 

நம்மிடை இல்லை 

 

இதிலே என்னையும் 

விளையாடச் சொல்வது 

எந்த விதத்திலும் 

நியாயமே இல்லை

 

வெல்வது நீதான் 

யாவரும் அறிவார்

அந்த வெற்றியை 

எவரேற்றுக் கொள்வார் 

 

முடிவு முன்னமே 

தெரிந்த பின்பு 

யாரிந்த விளையாட்டை 

வேடிக்கைப் பார்ப்பார்

 

விளையாட நேரம் 

இதுவுமே இல்லை 

வேடிக்கைப் பார்காக 

ஆட்களும் இல்லை

 

தனியாக நடந்திடும் 

நம்மிந்த சண்டையை 

விலக்கி வைக்க 

யாருமே இல்லை

 

இறுதியில் வெற்றி

நீபெற்ற போதும்

அதிலே உனக்கு 

இலாபமும் இல்லை

 

தோல்வியே எனது 

வெற்றியாய் மாற 

தோற்பதில் எனக்கு

நட்டமும் இல்லை 

 

இதன்பின் போட்டி 

நீ போடலாமோ 

இலாப நட்டம் 

பார்த்திடலாமோ 

 

 

இருவரும் வெற்றி 

பெற்றிடும் போது 

இனியும் விளையாடி

பார்த்திடலாமோ

 

1-1-2022, 3 30 am

 

Unable to see the suffering of my mother last night I sobbed with many tears and begged the Lord not to play this game any more and bring an end to both of us. As I get up 2.30 am, Unable to sleep further I continue to wrestle with the Lord and wrote this poem.

 

 


No comments: